பிறப்பு, இறப்பு, காதல், மன அழுத்தம், இன்பம், உணர்வுகள், உணர்ச்சிகள் என்று எல்லாவற்றோடும் தொடர்புப்படுத்திப் பேசப்படும் ஓர் உறுப்பு உண்டென்றால் அஃது இதயம் தான்!
இத்தகைய இதயத்தைப் பாதிக்கும் நோய்கள் என்ன என்பதைப் பற்றியும், தடுக்கும், தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் இதயநோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள் அறிவுறுத்தும் தகவல்களை அறிந்துகொள்வோம்.
இந்தியாவும், இதய நோயும்
உலகிலேயே இதய நோயாளிகளை அதிகம் கொண்ட நாடு இந்தியா தான்! இதயத்தை இரண்டு வகைகளில் நோய்கள் பாதிக்கின்றன. ஒன்று நோய்த் தொற்று; இரண்டாவது வாழும் முறை.
வாழும் முறை மூலம் தாக்கம் ஏற்படுத்தும் நோய்களாகச் சர்க்கரை அளவு வேறுபாடு, இரத்த அழுத்தம், கொழுப்புப் போன்றவற்றோடு மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய்ப் போன்றவையும் இதில் அடங்கும்.
இதில் மாரடைப்பு முதல் இடத்தையும், பக்கவாதம் இரண்டாம் இடத்தையும், புற்றுநோய் மூன்றாம் இடத்தையும் பெறுகிறது. இதில் 22 முதல் 23 சதவீதம் மக்கள் நோய்த்தொற்றாலும், 75 முதல் 78 சதவீதம் மக்கள் வாழும் முறையாலும் இதய நோய்ப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
READ ALSO: முதியோருக்கு தாழ்வு மனப்பான்மையா?
இதிலும் குறிப்பாக இதயத் தமனி அடைப்பு நோய், மூளை இரத்தக் குழாய் அடைப்பு நோய், பெருநாடி நோய்ப் போன்றவை குறிப்பிடத்தக்கன.
இதயத் தமனி அடைப்பு நோய்
இதயத் தமனி அடைப்பு நோயில் மூன்றில் ஒருவருக்கு நடக்கும் போது இதய வலி, மூச்சு இரைத்தல் அல்லது மூச்சுத் திணறல், படபடப்பு, வியர்த்தல், அசதி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
மூளை இரத்தக் குழாய் அடைப்பு நோய் (செரிப்ரோவாஸ்குலர் நோய்)
எவ்வாறு இதயக் குழல்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறதோ அவ்வாறே செரிப்ரோவாஸ்குலர் நோயில் மூளை இரத்தக் குழாயில் அல்லது கழுத்தில் உள்ள இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுப் பக்கவாதம் ஏற்படுகிறது.
இதே போன்று காலில் உள்ள இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது பாதம் மற்றும் விரல்களில் பாதிப்பு ஏற்படுகிறது.
பெருநாடி நோய்
பெருநாடி நோய் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படுகிறது. இயல்பாகச் சர்க்கரை நோயாளிகள் அதிமாக இருப்பதாக நாம் எண்ணுகிறோம். ஆனால், அதை விட இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களே அதிகம்.
READ ALSO: வயதானால் காது கேளாமல் போவது ஏன்?
இதனை நிரூபிக்கும் விதமாய்ச் சர்க்கரை நோயாளிகள் 11.5 சதவீதமும், இரத்த அழுத்த நோயாளிகள் 33.5 சதவீதமும் உள்ளனர் என்பதை ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது! இருபது வயதிற்கு மேல் மூன்றில் ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் உள்ளது.
இதனைக் கண்டறிந்தலும் எளிது; கட்டுப்படுத்துதலும் எளிது! ஆனால் இதனைக் கண்டறியாமல் விடும் பட்சத்தில் இரத்தக் குழாயில் வெடிப்பு, அடைப்பு, விரிப்புப் போன்றவை நிகழ்ந்தது, அதனால் ஆபத்து ஏற்படுகிறது.
இதயச் செயலிழப்பு!
சர்க்கரை அளவு வேறுபாடு, இரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் இதயத்தில் சுருங்கி விரியும் தன்மை மற்றும் இரத்த உந்துத் தன்மைப் போன்றவற்றில் சிக்கல்கள் வருகின்றன.
இதில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு இரத்தக் குழாய் அடைப்பால் இரத்த உந்துத் தன்மைப் பாதிப்பு ஏற்பட்டு, மூச்சு இரைத்தல் நிகழ்கிறது. மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு உந்துத் தன்மைச் சீராக இருக்கும் போதிலும், இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையில் விரைப்புத் தன்மை நிகழ்வதால் மூச்சு இரைத்தல் நிகழ்கிறது.
ஓய்வின்றி நமக்காக மட்டும் இயங்கும் இதயத்தை வலி இன்றி வாழ வைப்பதும் நம் கடமையே! இதயத்திற்கு நம் கடமையை ஆற்றுவோம்!! அதன் உழைப்பில் வாழ்வோம்!!!