நிச்சயமாக… நீரிழிவு பாதம் என்பது நீரிழிவின் ஒரு தீவிரமான சிக்கலே. உடனடியாகக் கவனிக்கப்படாவிட்டால் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். முன்பு குறிப்பிட்டது போல, சிகிச்சை அளிக்கப்படாத பாதச் சிக்கல்கள் எலும்பு வரை சென்று தாக்கும். நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். காலையே துண்டிக்க வேண்டிய நிலைக்குக்கூட கொண்டு செல்லும்.
உடல் ரீதியான பாதிப்புகளுக்கு அப்பால், இது ஒரு தனிநபரின் சுயமரியாதை, மனநலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையே பாதிக்கும். குறிப்பிடத்தக்க வகையில் உளவியல் தாக்கத்தையும் இது ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே: பாதத்தையும் கொஞ்சம் பாருங்கள்! நீண்ட காலப் பிரச்னை நீரிழிவு பாதம்!
நீரிழிவுப் பாதம் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும்?
கால்களை அகற்றும் நிலை உண்டாகும் காரணிகளில் நீரிழிவு பாதப் புண்களே முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. விபத்து தவிர ஏனைய காரணிகளில், 85% கால் இழப்பிற்கு நீரிழிவு பாதப் புண்களே காரணமாக அமைந்து முதலாம் இடத்தைப்பிடிக்கின்றது.
உலகெங்கிலும் வருடத்திற்கு பத்து லட்சம் நோயாளிகள் இதனால் காலினை இழக்கின்றனர் என்கிறது ஆய்வு ஒன்று. நமது நாட்டில் சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கப் பெறாத நிலையிலும், நீரிழிவுப் பாதங்களால் வருடத்திற்கு சுமார் 45 ஆயிரம் பேர் கால்களை அகற்றும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பது எப்படி?
கண்காணிப்பும் பராமரிப்பும்
நீரிழிவு கால் சிக்கல்களைத் தடுப்பதற்கான முதல் வழி வழக்கமான கண்காணிப்புதான். ரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டை நன்றாகப் பராமரித்தல் மற்றும் நல்ல கால் சுகாதாரத்தை கடைபிடித்தல் அவசியம். தினசரி கால் பரிசோதனை, நன்கு பொருத்தப்பட்ட காலணிகளை அணிதல், வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்த்தல், கால்களை சுத்தமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருப்பது ஆகியவை நீரிழிவு பாதப் பிரச்னைகளைத் தடுக்க உதவும்.

பரிசோதனைகள்
சுய பரிசோதனையைத் தவிர, ஒரு பாத மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரின் வழக்கமான சோதனைகள் அவசியம். பிரச்னை தீவிரமடைவதற்கு முன்பே சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிந்து, கால் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை அவர்களால் வழங்க முடியும்.
அறிவது அவசியம்
நீரிழிவு, அதன் சிக்கல்கள் மற்றும் கால் பராமரிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க பலன் அளிக்கிறது.
நீரிழிவு பாதம் (Diabetic Foot) பற்றிய இந்த தொடரில் நீரிழிவு பாதத்தை தடுப்பது எப்படி என்று இந்தக் கட்டுரையில் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டுரையில் நீரிழிவு பாதம் பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
