Homeமன நலம்புத்துணர்வுஈஸிசேர் சிந்தனைகள் | உலகை மாற்ற வேண்டுமா?

ஈஸிசேர் சிந்தனைகள் | உலகை மாற்ற வேண்டுமா?

Summer photo created by freepik – www.freepik.com

அதிகாலையில் கடற்கரை மணலில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார் ஒரு முதியவர். குட்டிக் குட்டி அலைகள் வந்து கால்களை நனைத்து நனைத்து விளையாடிக் கொண்டிருந்தன. திடீரென ஒரு பெரிய அலை அடிக்க, அவர் மிரண்டு போய் நகர்ந்தார். அந்த அலையில் நூற்றுக்கணக்கான குட்டி குட்டி மீன்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு மணலில் ஒதுங்கின. தண்ணீர் இல்லாததால் அவை துடித்துக் கொண்டிருந்தன. அடுத்து ஒரு பெரிய அலை வந்தால் அவை கடலுக்குள் போய்விடலாம். ஆனால், அது உடனே வராது என்பது புரிந்தது.

அவர் ஒவ்வொரு மீனாகத் தூக்கி வேகமாகத் தண்ணீரில் போட ஆரம்பித்தார். வேக நடையில் ஒவ்வொன்றையும் எடுப்பதும், தூக்கிப் போய்க் கடலில் போடுவதுமாக இருந்ததில் அவருக்கு மூச்சு வாங்கியது.

நேசத்தைச் சொல்லும்போது வெளிப்படுகிற அன்பைவிட, மன்னிப்பு கேட்கும்போது அதிகமாகவே அன்பு வெளிப்படும். உலகை மாற்ற நாம் பிறக்கவில்லை. நண்பர்கள், உறவுகள், சக மனிதர்களை நேசித்து வாழப் பிறந்தோம்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவர் கேலியாகக் கேட்டார். ‘‘இங்கே நூற்றுக்கணக்கான மீன்கள் துடிக்கின்றன. உங்களால் எல்லாவற்றையும் கடலில் தூக்கிப் போட முடியாது. எப்படியும் அவை சாகப் போகின்றன. உங்களால் என்ன செய்ய முடியும்?’’ என்று கேட்டார்.

பெரியவர் தன் கையில் இருந்த மீனைக் கடலில் போட்டபடி சொன்னார்… ‘‘இந்தச் சின்ன மீனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!’’

‘எல்லோரும் உலகை மாற்ற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உண்மை யாருக்கும் புரிவதில்லை’ என்று சொன்னார் டால்ஸ்டாய். ‘அடுத்தவர்களிடம் என்ன குறை இருக்கிறது; அதை எப்படி மாற்றலாம்’ என்று பேசுவதிலேயே வாழ்வின் பெரும்பாலான நாட்களைச் செலவிடுகிறவர்கள் நிறைய பேர். எல்லோரது குணங்களையும் செயல்களையும் பார்த்து மார்க் போட்டுக் கொண்டிருந்தால், யார்மீதும் அன்பு செலுத்த முடியாது.

விவாதங்கள் என்று வந்துவிட்டால், எங்கோ அமெரிக்காவில் இருக்கும் – நம்மை யார் என்றே தெரியாத டொனால்டு ட்ரம்பை ஆதரித்துப் பேசுகிறோம். நமக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராகப் பேசி அவர்களைக் காயப்படுத்துகிறோம். ‘மன்னிப்பு’ என்பது பலருக்கும் தங்கள் டிக்ஷனரியில் பிடிக்காத வார்த்தையாக இருக்கிறது.

நேசிக்கத் தெரிந்தவர்களால் எந்தத் தயக்கமும் இல்லாமல் மன்னிப்பு கேட்க முடியும்; தவறே செய்யாவிட்டாலும் கூட! ‘ஐ ஆம் சாரி’ என்று சொல்வதால் நாம் செய்தது தவறாகவும், அடுத்தவர் செய்தது சரியானதாகவும் ஆகிவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல… நாம் நேசிக்கும் ஒருவரிடம் ‘சாரி’ கேட்கும்போது, ‘‘என் ஈகோவைவிட, நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பு பெரியது’ என உணர்த்தும் வாய்ப்பு அது. மன்னிப்பு கேட்கிற ஒவ்வொரு முறையும், உறவு உறுதியாகிறது. முன்பு இருந்ததைவிட நெருக்கம் இன் ம் அதிகம் ஆகிறது.

நேசத்தைச் சொல்லும்போது வெளிப்படுகிற அன்பைவிட, மன்னிப்பு கேட்கும்போது அதிகமாகவே அன்பு வெளிப்படும். உலகை மாற்ற நாம் பிறக்கவில்லை. நண்பர்கள், உறவுகள், சக மனிதர்களை நேசித்து வாழப் பிறந்தோம்.

‘கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவுக்கு இந்த உலகில் யாரும் பணக்காரர் இல்லை’ என்றார் ஆஸ்கார் ஒயில்ட். ஒவ்வொரு நிமிடமும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. நேசிக்க ஆரம்பிக்கலாமா?

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read