உயிரைக் கொள்ளும் ‘புற்றுநோய்’ கூட இன்று இயல்பான நோயாக மாறி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆனால், இந்த நிலைக்கும் காரணம் நாம் என்றால் அதுவும் மிகையாகாது.
ஆம், நாம் வாழும் முறைகள், பயன்படுத்தும் போதைப் பொருள், புகையிலைச் சார்ந்த பொருளே இந்நிலைக்குக் காரணம் என்பதை நாம் அறிந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்துவது இல்லையே! அப்படி இருக்க இக்கூற்று உண்மைத் தானே!
“நோயும் தெரியும்; நோயிக்கான காரணமும் தெரியும். ஆனால் தீர்வுத் தான் தெரியவில்லை!” என்று எண்ணும் நம்மில் பலருக்குப் பதில் அளிக்கிறார் மருத்துவர் எஸ். வித்தியாதரன் அவர்கள்.
வாய்ப் புற்றுநோய்
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் புற்றுநோய்களில் ஒன்று வாய்ப் புற்றுநோய். இது வாயில் நாக்கு, மேல் மற்றும் கீழ் அன்னம், தாடை, மேல் மற்றும் கீழ் தாடை இணைப்புகள், உதடு போன்ற அனைத்து உறுப்புகளிலும் வருகிறது!
வட இந்தியாவில் அதிகமாக இருந்த இந்த வாய்ப் புற்றுநோய், தற்போது தென்னிந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதில், மேலும் வருந்தத்தக்க தகவல் இந்தியாவே அதிக வாய்ப் புற்று நோயாளிகளைக் கொண்டுள்ள நாடு என்பது தான்!
வாய்ப் புற்றுநோய்க்கான காரணங்கள்
புகையிலை, குட்கா, பான்பராக், கஞ்சா, பாக்கு (அரிகா நட் – புகையிலையுடன் கூடியது) வெற்றிலை (பீட்டில் நட் – புகையிலையுடன் கூடியது), மது, சிகரெட் போன்ற பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் வருகிறது.
மேலும், நெடுங்காலம் சூரிய ஒளிப் படும்படியான சூழலில் பணியாற்றும் போது அதில் உள்ள புற ஊதாக் கதிர்களால் உதடு பாதிக்கப்பட்டுப் புற்றுநோய் வருகிறது!
READ ALSO: இந்தியாவும், இதய நோயும்!
எப்போது தேவை வாய்ப் புற்றுநோய்ப் பரிசோதனை?
வாய்ப் புண் நீண்ட நாட்கள் இருப்பின் அது சாதாரணப் புண்ணா? இல்லையேல் புற்றுநோய்க்கான அறிகுறியா? என்று பல் அல்லது காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள் வேண்டும்!
ஏதேனும் காரணத்திற்காக ஒரு பல் ஆடுகின்றது என்றால் ஐயம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அந்த வரிசைப் பற்களே ஆடும் வேளையில் அதைச் சாதாரணமாகக் கொள்ளாமல் பரிசோதிக்க வேண்டும். வாய்ப் புற்றுநோயைப் பொருத்த வரை பார்வையிடும் செயல் எளிமையானது. பின் பையாப்ஸி முறையின் மூலம் உறுதிப்படுத்திவிடலாம்.
மருத்துவத் தீர்வுகள்
புற்றுநோயின் பாதிப்புத் தீவிரமாக உள்ளப் போது அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியையும், அதனைச் சுற்றி ஒரு சென்டிமீட்டர் வரை உள்ளப் பகுதியையும் உடலில் இருந்து நீக்கி விடலாம்.
பாதிப்புச் சற்று முதிர்ந்த நிலையில் கீமோ தெரப்பி அளிக்கலாம். சற்றுக் குறைந்த பாதிப்பே உள்ள நிலையில் தொடர்ந்து ஒன்றை மாதம் கதிர்வீச்சுச் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பதியைப் பொசுக்கி (எரித்தல்) விடலாம்.
ஆனால், இம்மூன்று முறைகளில் எந்த முறையைப் பின்பற்றினாலும் நோயாளிகள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தொடர மருத்துவப் பரிசோதனையில் இருக்க வேண்டும்.
ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் நோயிக்கான எந்த அறிகுறியும் நோயாளிக்கு இல்லையெனில் அவர் முழுமையாகக் குணமடைந்து விட்டார் என்பது பொருள்.
READ ALSO: முதியோருக்கு தாழ்வு மனப்பான்மையா?
வாய்ப் புற்றுநோயைத் தவிர்க்கும் முறைகள்
‘5S’ என்று மருத்துவத்துறையில் கூறப்படுகிறது. Smoke, Spirit, Sharp teeth, Spicy, Susceptibility factor (மரபணுக் கோளாறு). இதில் முதல் நான்கு பொருட்களை நம்மால் தவிர்க்க இயலும். இதனுடன் சேர்த்து கஞ்சா, குட்கா, பாக்கு போன்ற போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
ஆனால் மரபணுக் கோளாறால் ஏற்படக்கூடிய புற்றுநோயை நம்மால் தவிர்க்க இயலாது. ஆயினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும், கூர்மையான பற்கள் கூடப் புற்று நோய்க்குக் காரணமாக இருக்கின்றன என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தாலும், தொடர்ந்து ஒரு புண்ணானது மீண்டும், மீண்டும் காயமாகும் போது அதுவும் புற்று நோயாக மாற அதிக வாய்ப்பு உள்ளது!
‘வருமுன் காப்போம்’ என்பதை நம்மால் எல்லா இடங்களிலும் பின்பற்ற இயலவில்லை என்றாலும், குறைந்தபட்சம் உயிரைக் கொல்லும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவாவது பின்பற்றுவோம்!
நம்மைத் தாக்கும் பாதிப்புகள் பிறரைத் தாக்காமல் இருக்க அவர்களுக்கு உதவுவோம்!! இதுவும் சமூகச் சேவையே என்பதை அறிவோம்!!!