இஃது எப்போதாவது ஒருமுறைதான் வெளியில் மனிதர்களின் பார்வைக்குத் தெரிகிறது. அப்படித் தெரிந்தால் கூட இதற்கான வர்ணனைகள் வெகுவாக இருக்கும்!
“நல்ல பளபளப்பான பற்கள்; வரிசை மாறாத பற்கள்; அழகான பற்கள்; இடுக்குப் பற்கள்; சந்துப் பற்கள்” என்று. ஆம், இன்று நாம் அறிந்து கொள்ள இருக்கும் தலைப்பு ‘பல்’.
அதிலும் குறிப்பாகப் பல் பராமரிப்பு, அதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம், பராமரிக்கத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் நாம் சந்திக்கும் விளைவுகள் என்ன?
போன்றவை குறித்துத் தான். இவைகளுக்கு விளக்கம் அளிக்கிறார் மருத்துவர். எம். வீரபாகு BDS, MDS, முகம், வாய் மற்றும் தாடை அறுவைச் சிகிச்சை நிபுணர் (OMFS) அவர்கள்.

பல் பராமரிப்பு
நாம் பிறக்கும் போது பற்களோடு பிறப்பதில்லை. அதன் பிறகு பால் பற்கள் முளைக்கின்றன. பால் குடிக்கும் பருவத்தில் அது முளைப்பதால் அதனைப் பால் பற்கள் என்று அழைக்கின்றோம் போலும்.
இந்தப் பால் பற்கள் முறையாகப் பராமரிக்கப்படுவது இல்லை. ஆனால் இவைகளும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். எவ்வாறென்றால் குழந்தை பால் குடித்த பிறகு ஒரு மெல்லிய, தூய்மையான துணியைக் கொண்டு பற்களில் ஒட்டியுள்ள பாலைத் துடைத்து எடுக்க வேண்டும்.
பால் பற்களிலேயே ஒட்டி இருக்கும் பட்சத்தில் பாலால் கூடப் பல்லில் சொத்தை ஏற்படும்! ஆரம்பக் காலத்தில் ஏற்படக்கூடிய பல் பிரச்சனைக்குப் பால் பற்களை முறையாகப் பாராமரிக்காதுக் கூடக் காரணமாக உள்ளது!
READ ALSO: நுரையீரல் பாதிப்புகள் மீண்டும் வராமல் இருக்க!
பால் பற்களுக்குப் பிறகு முளைக்கக் கூடிய நிரந்தரமான பற்களைப் பராமரிக்கும் முதல்படி காலையில் குறைந்தது மூன்று நிமிடங்களாவது பற்களைத் துலக்க வேண்டும்.
அடுத்து முக்கியமானது இரவு உணவிற்குப் பிறகு கண்டிப்பாகப் பல் துலக்க வேண்டும். காரணம், பற்களில் நாம் உண்ட உணவு எட்டு முதல் ஒன்பது மணி நேரம் ஒட்டி இருப்பதால் ஸ்டார்ச் உடன் பாக்டீரியா இணைந்துப் பல்லின் பற்சிப்பியை (Enamel) தாக்குகிறது.
இதுவே சொத்தை (Cavity/Decay). இதன் பின்னரே டென்டின் தாக்கப்பட்டு, பல்குழித் தாக்கப்பட்டுப் பல் வலி ஏற்படுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கூறியப் பாதிப்புகளைத் தவிர்க்க ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகிப் பல் பரிசோதனைச் செய்துக் கொள்ள வேண்டும். பல்லில் காரைப் படிந்து இருந்தால் அதனை நீக்குவார்கள்.
இதனை நீக்காமல் விட்டுவிட்டால் ஈருகளைத் தாங்கி இருக்கும் எலும்புகள் வலுவிழந்துப் பற்கள் ஆடத் தொடங்கும். இதனால் பல் இழப்பு ஏற்படும். மேலும் பல்லில் சொத்தை ஏற்பட்டு இருந்தால் அந்தச் சொத்தையை நீக்கி அந்த இடத்தில் எனாமல் கொண்டு நிரப்புவார்கள்.
இதன் மூலம் சொத்தைப் பரவல் நிறுத்தப்படும். இவ்வாறாகப் பற்களைச் சுற்றி வெளிப் புறத்தில் பராமரிப்பது, உட்புறத்தில் பராமரிப்பது என்று இரண்டு வகைகளில் பற்களைப் பராமரிக்கலாம்.
நார் நிறைந்த உணவுகளை உண்ணும் போது பல்லில் சிக்கி உள்ள உணவுத் துணுக்குகள் வெளியில் வந்துவிடும். எனவே அத்தகைய உணவுகளை அதிகமாக உண்ணுங்கள்.
பற்களின் நன்மைகள்
பற்களால் உணவுகளை நன்கு கடித்து, மென்று உண்ணும் போது வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் உணவுக் கலந்துச் செரிமானம் தொடர்பானப் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கப் படுகின்றன. பற்களால் முகம் அமைப்பைப் பெறுகிறது.
READ ALSO: Dental Implant பல்லுக்கு நல்லதா?
இழந்தப் பல்லிற்கான மாற்று ஏற்பாடுகள்
ஒருவேளை பல்லை இழக்கும் பட்சத்தில் அருகில் உள்ள பற்களைத் தேய்த்துப் பாலம் (Bridge) போன்று செயற்கைப் பல்லை வைத்துக்கொள்ளலாம். அல்லது பல் உள் வைப்பு முறை மூலம் பல்லைப் பொறுத்திக் கொள்ளலாம்.
‘பல்’ மிகச் சிறிய உறுப்புத் தான். அத்துடன் அதிக எண்ணிக்கையில் உள்ள உறுப்பும் கூட. ஆனாலும் ஒரு பல்லை இழந்தால் கூட அதனால் ஏற்படும் இடர்பாடுகள் அதிகமாக உள்ளது அல்லவா?!? எனில் இடர்பாடுகளைத் தவிர்க்கப் பாதுகாப்போம் ஒவ்வொரு பற்களையும்!
கட்டுரையாளர்
