Homeஉடல் நலம்திடீர் கால் வலியா? இந்த நோயால் கூட இருக்கலாம்?

திடீர் கால் வலியா? இந்த நோயால் கூட இருக்கலாம்?

‘ரோமம்’ என்பதன் பொருள் ஒன்றுதான். ஆனால் உடலில் அஃது அமைந்துள்ள இடத்திற்கு ஏற்ப அதன் பெயர் மாறுபடுகிறது; அத்துடன் அஃது எங்கு அமைந்து இருந்தாலும் அதன் பணியும், பயனும் ஒன்றுதான்!

அதைப் போலத்தான் இரத்தக் குழல்களும். அஃது இணைந்து இருக்கும் உறுப்புக்களுக்கு ஏற்ப அதன் பெயர் மாறுபட்டாலும் அதன் பணியும், பயனும் மட்டுமல்ல பிணியும் ஒன்றுதான்!

அதனைக் குறித்துக் குறிப்பாக ‘புறத் தமனி நோய்’ குறித்து விளக்கம் அளிக்கிறார் இருதய நோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள்.

புறத் தமனி நோய் (Peripheral Artery Disease -PAD)

பல காரணங்களால் உடலின் பல்வேறு பகுதிகளில் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுகிறது. கை, கால் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் ‘புறத் தமனி நோய் (Peripheral Artery Disease -PAD)’ என்றும்,

மூளையின் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் ‘செரிப்ரோவாஸ்குலர் நோய் அல்லது கரோடிட் தமனி நோய் (Cerebrovascular Disease or Carotid Artery Disease)’ என்றும்,

இதயத்தின் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் ‘கரோனரி தமனி நோய் (Coronary Artery Disease – CAD)’ என்றும் அழைக்கப்படுகிறது.

READ ALSO: உங்க நுரையீரல் நன்றாக இருக்கிறதா?

புற தமனி நோய் ஏற்படக் காரணங்கள்

நமது கட்டுப்பாட்டிற்கு மீறியக் காரணங்கள்

  1. மரபு ரீதியாக
  2. வயது முதிர்வு

நமது கட்டுப்பாட்டிற்கு உட்படக் காரணங்கள்

  1. சர்க்கரை நோய் (Diabetes),
  2. உயர் இரத்தக் கொழுப்பு (High Blood Cholesterol)
  3. உடல் பருமன் (Obesity),
  4. உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure),
  5. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்,
  6. வாழ்க்கை முறை,
  7. மன அழுத்தம்,
  8. இரத்தக் குழாய்ச் சுருக்கம்,
  9. இரத்தக் குழாய்த் தடிமன் குறைதல்,
  10. உடற்பயிற்சியின்மை,
  11. புகைபிடித்தல், பாக்கு, சவைக்கும் சவ்வு (Chewing Gum) போன்றவை மூலமும் புறத் தமனி நோய் ஏற்படுகின்றது.

புறத் தமனி நோயைத் தடுக்கும் வழிமுறைகள்

ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்; அதாவது 400 கிராம் பச்சைக் காய்கறிகளைத் தினமும் உண்ண வேண்டும், குறைந்த அளவு உப்பைப் பயன்பாடுத்த வேண்டும்,

கரும்பு வெல்லம் அல்லது பனை வெல்லத்தை உபயோகிக்க வேண்டும், வெள்ளைச் சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும், சர்க்கரை நோயாளிகள் அனைத்து வகையான இனிப்புகளையும் (சர்க்கரை, வெல்லம்) தவிர்க்க வேண்டும்.

புகைத்தலை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும், ஆழ்ந்த உறக்கம் இன்றியமையாதது.

புறத் தமனி நோயின் அறிகுறிகள்

கால்களில் புறத் தமனி நோய் (Peripheral Artery Disease -PAD) இருப்பின், 40% முதல் 50% மக்களுக்கு இதயத்தில் கரோனரி தமனி நோய் (Coronary Artery Disease – CAD) இருக்க வாய்ப்புகள் உண்டு.

எனவே புறத் தமனி நோய் இருப்பின் இதயப் பரிசோதனையும் இன்றியமையாதது. இதன் முதல் மற்றும் முக்கிய அறிகுறிக் கால் வலியே. அதிக அளவு அடைப்பு இருப்பின் சிறிதுத் தூரம் நடந்தாலே வலி ஏற்படும்.

மிக அதிக அளவில் அடைப்பு இருக்கும் போது ஓய்வு நிலையில் கூடக் கால் வலி உண்டாகும். இவ்வாறு இரத்தக் குழாய் அடைப்பின் நிலையைப் பொறுத்துக் கால் வலியானது மாறுபடுகிறது.

கண்டறியும் முறைகள்

இது பொதுவான நோயே. எனவே இதனைக் கண்டறியும் முறையும் எளிமையானதே.

நாடித் துடிப்பைப் பரிசோதிப்பது போல இதனையும் கைகளைக் கொண்டு காலின் இரத்தக் குழாய்களின் நாடித் துடிப்பின் மூலம் டோர்சலிஸ் பெடிஸ் (Dorsalis Pedis), பாப்லைட்டல் (Popliteal Artery), பின்புறத் திபியல் தமனி (Posterior Tibial Artery) போன்றவற்றைக் கண்டறியலாம். மேலும் இதனைச் சி.டி ஆஞ்சியோகிராபி (CT Angiography) மூலம் உறுதிப்படுத்திவிடலாம்.

READ ALSO: இதயத்தை எப்போதும் ஆரோக்கியமாக வெச்சிக்க ‘5D’

மருத்துவ முறைகள்

இதற்குப் பல மருந்துகள் உள்ளன. அதனை முறையாக உட்கொள்ளும் பட்சத்தில் 90% அறுவைச் சிகிச்சையைத் தவிர்க்கலாம்.

எனினும் 50 சதவீதத்திற்குக் குறைவாக அடைப்பின் தன்மை இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோய் (Diabetes), உயர் இரத்தக் கொழுப்பு (High Blood Cholesterol) உடல் பருமன் (Obesity), உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்து இருப்பதன் மூலம், இரத்த உறைவைக் குறைக்கும் மருந்துகள் மூலமும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்;

நோயின் வீரியத்தைக் குறைக்கலாம். நடக்கும் போது கால் வலி வருமேயானால் ஓய்வெடுத்துவிட்டுப் பின்னர் நடக்க வேண்டும். இவ்வாறு நடக்கும் போதும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

உடலில் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாய், நோயின்றி இருந்தாலும் நடக்க இயலவில்லை, எப்பொழுதும் காலில் வலி என்றால் நம்முடைய நிலை என்ன? இந்த வினாவிற்கான விடையைச் சிந்திப்போம்; விபரீதங்களைத் தவிர்க்க முயற்சி அல்ல, முடிவையே எடுப்போம்!

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read