Homeஉடல் நலம்நடைப்பயிற்சியால் இரத்த குழாய் அடைப்பு சரியாகுமா?

நடைப்பயிற்சியால் இரத்த குழாய் அடைப்பு சரியாகுமா?

உடலின் முக்கிய உறுப்புகள் என்று நாம் கருதக்கூடிய இதயத்தில், சிறுநீரகத்தில் வலி வந்தவுடன் உடனே மருத்துவரை அணுகுகின்றோம்.

அதுமட்டுமா? சிறிதளவு தலை வலித்தாலும் வலிக் குறையும் வரை நம்மால் என்னென்ன வைத்தியங்களைச் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறோம்.

இவ்வாறு காலில் வலி வரும் போது அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமா? ஆனால் அதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இல்லையேல் நாம் காலையே முழுமையாக இழக்கக் கூடிய சூழ்நிலைக் கூட ஏற்படலாம்!

அதற்குக் காரணம் என்ன? அதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம்? போன்றவை குறித்து விளக்கம் அளிக்கிறார் இருதய நோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள்.

புறத் தமனி நோய் (Peripheral Artery Disease)

புறத் தமனி நோய் என்பது எவ்வாறு இதயத்தின் இரத்தக் குழல்களில் அடைப்பு ஏற்படுகிறதோ, அதுபோலக் காலில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு ஆகும்.

இதற்கும் இதயத்தின் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு என்னென்ன விபரீத விளைவுகள் ஏற்படுமே அதனைப் போன்றே விளைவுகள் உண்டு.

READ ALSO: Dental Implant பல்லுக்கு நல்லதா? 

புறத் தமனி நோய் (Peripheral Artery Disease) ஏற்படக் காரணங்கள்

புகைபிடித்தல் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இஃது ஏற்படுகிறது.‌ இரத்தக் கொதிப்பு, கொழுப்பு போன்ற ஆபத்துக் காரணிகள் அதிகமான அளவில் இருந்தாலும் ஏற்படுகிறது.

புறத் தமனி நோயைத் தவிர்க்கும் வழிமுறைகள்

புறத் தமனி நோய் (Peripheral Artery Disease) ஏற்படக் காரணமாக உள்ளத் புகைத்தலை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மேலும் நிக்கோட்டினை எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

மற்றவர்கள் புகைக்கும் புகையைக் கூடச் சுவாசிக்கக் கூடாது (Passive Smoking). சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, கொழுப்பு போன்ற ஆபத்துக் காரணிகளைச் சரியான அளவில் பராமரிக்க வேண்டும். புறத் தமனி நோய் வந்த பிறகு இரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நடைபயிற்சி மிக, மிக உகந்தது. இதனால் அடைப்பு நீங்கி இரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே வாரத்தில் ஐந்து நாட்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும்.

குறைந்தது முப்பது நிமிடங்கள் முதல் அறுபது நிமிடங்கள் வரை நடைபயிற்சிச் செய்தல் வேண்டும். நடைபயிற்சி செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் நின்ற நிலையில் உள்ள மிதிவண்டியை ஓட்டுதல் உகந்தது.

கவனத்திற்கான தகவல்

இதய நோயாளிகளைப் போன்றே புறத் தமனி நோயாளிகளும் இந்தியாவில் தான் அதிகம் உள்ளனர். இந்தப் புறத் தமனி நோயின் காரணமாக ஓர் இலட்சம் நோயாளிகளுக்கு ‘கால் துண்டித்தல் (Amputation)’ அறுவைச் சிகிச்சை நிகழ்கிறது.

எனவே காலில் வலி வரும் போதே மருத்துவரை அணுகிப் பரிசோதித்தல் வேண்டும். பிரச்சனைகள் ஏதும் இருப்பின் அதற்கான மருத்துவ முறைகளைப் பின்பற்றிக் கால் இழப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

READ ALSO: நுரையீரலை வலுவாக்கும் மூச்சுப்பயிற்சிகள்

உங்களுக்காக ஓர் உண்மை நிகழ்வு

எனது நண்பர் (மருத்துவரின்) ஒருவர் இயல்பாக நடந்து செல்லும் போது காலில் வலி ஏற்பட்டு இருக்கிறது. தொடக்கத்தில் அதை அவர் வேலைப் பளுவின் காரணமாக ஏற்படுகிறது என்று எண்ணிப் புறக்கணித்து விட்டார்.

நாளாக, நாளாகச் சிறிதுத் தூரம் நடந்தாலே அதிக அளவு வலி வருவதை உணர்ந்து என்னிடம் பரிசோதனைக்காக வந்தார். பரிசோதித்ததில் ஒரு காலில் அடைப்பின் அளவு அதிகமாக இருந்தது. இதனால் அந்தக் காலில் நாடித்துடிப்பின் அளவுக் குறைவாக இருந்தது.

மறு காலில் அடைப்பின் அளவு அதைவிட அதிகமாக இருந்தது. அதன் காரணமாக அந்தக் காலில் நாடித்துடிப்பே இல்லை! அவருக்குப் புகைக்கும் பழக்கம் இருப்பது எனக்குத் தெரியும். எனவே அவரிடம் இப்போதும் புகைக்கும் பழக்கத்தைத் தொடர்கிறீர்களா? என்று வினவினேன்.

அதற்கு அவர் எப்போதும் இல்லை. எப்பொழுதாவது புகைக்கிறேன் என்று கூறினார். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு இதயத்திலும் பரிசோதனை மேற்கொண்டேன். அதிலும் அடைப்பு இருப்பது தெரிந்தது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு அறுவைச் சிகிச்சைச் செய்யும் அளவிற்கு அடைப்பு இல்லை. மேலும் அவரின் பணிச் சுமையின் காரணமாக அவரால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள இயலவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.

எனவே அவருக்கு முதல் அறிவுரையாகப் புகைத்தலை முழுமையாக நிறுத்திவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளும்படி கூறினேன். பிறகு மருத்துவச் சிகிச்சைகளை அளிக்கத் துவங்கியிருக்கிறேன். வெகு விரைவில் அவர் குணமாவார் எனவும் நம்புகிறேன்.

இனியாவது ‘கால் வலித் தானே’ என்று அலட்சியமாக இல்லாமல் அதற்கும் முக்கியத்துவம் அளிப்போம். அதன் மூலம் இதயத்தையும் காப்போம். தலை முதல் பாதம் வரை நமது உடலின் உறுப்புக்களே.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read