காலம் வெகுவாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் தமிழ்ச்சமுதாயம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது. ஓர் ஊரில் ஒரு ராஜா- ராணி இருந்தார்கள் என்று கதை சொல்வது போலத்தான் இப்போது அதையும் சொல்ல வேண்டியுள்ளது.
ஒரு பெரிய கூடம் (ஹால்) இருக்கும். குறைந்தது 20 பேரை நிம்மதியாகப் படுத்து உறங்க வைக்கும் கொள்ளளவு அந்தக் கூடத்திற்கு இருக்கும். ஒரே நேரத்தில் முப்பது அல்லது 40 பேருக்குப் பந்தி வைக்க வேண்டும் எனும் கொள்கை அளவும் அந்தக் கூடத்திற்கு இருக்கும். இதைப் பட்டாசாலை என்று கூறும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறப்படும் சின்ன பட்டாசாலை ஒன்று இருக்கும். இதிலும் சுமார் 20 பேர் படுக்கலாம்.

இவை தவிர, ரேழி ஒன்று இருக்கும். முன்னறைக்கும் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் ரேழி என்று கூறுவது வழக்கம். அறை என்று சொன்னால் பொதுவாக ஒன்றோ இரண்டோ அறைகள் சின்னஞ்சிறிய அளவில் இருக்கலாம். ஒன்று அந்த வீட்டு மாப்பிள்ளை வந்தால் தங்க வைப்பதற்கு. மாப்பிள்ளைகள் வந்தால்? யார் ஜூனியர் மாப்பிள்ளையோ அவருக்கு. மற்றொன்று சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம். மற்றபடி சமையல் அறை ஒன்று பெரிதாக இருக்கும். ஒத்தார் ஒர்ப்படிகள் ஒன்றாய்க் கூடி சமையல் செய்யும் இடம்.
இப்போது குடும்பத்தைப் போலவே வீடும் ஒரு சின்ன ஹால், இரண்டு படுக்கையறை பிளாட்டுகளாகச் சுருங்கிப் போனது. படுக்கையறை ஒன்று பெற்றோருக்கு, மற்றொன்று குழந்தைக்கு. கூட்டுக் குடும்பம் நலிந்து தனிக்குடும்பம் மலிந்த இன்றைய சமுதாயத்தில் தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைப்பதும் மலிந்து போனது. எட்டுக்கு எட்டு அறை ஒன்றில் குழந்தையையும் அதற்கென ஒரு கணிப்பொறி மற்றும் இத்யாதி இத்யாதிகளையும் வாங்கி அடைத்து விடுகின்றனர்.

குழந்தை வளர்ப்பில் கை தேர்ந்தவர்கள் அந்தக் காலப் பெண்கள். தான் காதலித்த ஆண் மகனோடு உடன்போக்கு சென்று விடுகிறாள் மகள். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகின்றது. அப்போதும் அவளது தாயும் தந்தையும் அவள் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால் அவளை வளர்த்த செவிலித்தாயால் அப்படி இருக்க இயலவில்லை. அவள் சென்று மகளைப் பார்த்துவிட்டு வருகிறாள். தான் கண்டு வந்த காட்சியைச் சொன்னால் தாய் மனம் மாறி, மகள் மீது கொண்டுள்ள கோபத்தை மாற்றிக்கொள்வாள் என்று நினைத்துச் சொல்கிறாள்.
குட்டி இடையில் படுத்திருக்க அதனைத் தழுவிக்கொண்டு ஆண்மானும் பெண்மானும் படுத்திருக்கும் அல்லவா அதுபோல உன் பேரன் நடுவில் படுத்திருக்க, அவனை அணைத்துக் கொண்டு உன் மகளும் மருமகனும் படுத்திருக்கும் காட்சியைப் பார்த்தேன் என்கிறாள்.

நம் பண்டைய பண்பாட்டுத் தமிழர்கள் தங்கள் குழந்தையைத் தனியாகப் படுக்க வைத்ததில்லை.
“மெத்தைக்குக் கட்டிவிட்டான்
அம்மாவின் புடவையை
தலையணை ஆனது அவளின் மடி
தனிமையில் தாயணைப்பு…”
என்று கவிஞர் வைரன் எழுதியது போல அணைப்பாரற்ற அந்தக் குழந்தை அன்பு, பாசம் என்னும் ஏக்கத்தால் மூச்சு முட்டியபடியே உறங்குகிறது.
அம்மாவும் அப்பாவும் வெளியில் செல்கிறார்கள் என்றால் குழந்தைகள் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன. காரணம் காரில் முன் இருக்கையில் கணவனுடன் மனைவிதான் அமர வேண்டும். இது இன்றைய நாகரிகம். அவர்கள் இருவரும் பாட்டுக் கேட்டுக்கொண்டும், ஆங்கிலத்தில் பேசிக்கொண்டும் குழந்தையைச் சட்டை செய்யாமல் முன் இருக்கைகளில் அமர்ந்திருப்பார்கள். அந்தக் குழந்தை பின்னிருக்கையில் வாடிய முகத்துடன் ஜன்னலில் இருந்து வெளியே வெறித்துப் பார்த்தபடி இருக்கும்.

இந்நிலையில் அக்குழந்தைக்கு எப்படி மன ஆரோக்கியம் இருக்கும்? அக்குழந்தையின் உலகம் எந்திரங்களாக ஆன பின்பு அக்குழந்தையும் பாசம், பந்தம், அன்பு, கருணை, இரக்கம் என்னும் நற்பண்புகள் எதனையும் புரிந்துகொள்ள முடியாத எந்திரமாகவே ஆகிவிடுகிறது. அதனால் எதிராளியின் துன்பத்தைக்கூடப் புரிந்துகொள்ளவோ, உதவவோ முடியாமல் போய்விடுகின்றது. சற்று அழுத்தமாகக் கூறவேண்டுமென்றால் பிடிவாதமும் எதிராளியைத் துன்புறுத்தும் வன்மமும் வந்து விடுகின்றது. குழந்தைகள் வளரும்போது இக்குணமும் படிப்படியே வளர்ந்து வன்முறையாளர்களாக மாற்றிவிடுகிறது.
READ ALSO:
என் கடைசி ஆசையை நிறைவேற்றுவீர்களா?
மகனோ மகளோ அருகில் அமர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டார்களா என்று முதுமையில் பெற்றோர் கொள்ளும் ஏக்கம் இளமையில் குழந்தைகள் அனுபவித்தது. “அவர்களுக்காகத்தான் இருவரும் வேலை பார்த்தோம்; நல்ல படிப்பு கொடுத்தோம்; வசதியாக வாழ வைத்தோம்; அதனால் அவர்களை இளமையில் கவனிக்க முடியவில்லை” என்று சொல்லும் சப்பை காரணங்கள் எல்லாம் 90-களின் குழந்தைகளிடம் எடுபடுவதில்லை.

பெற்றோர் செய்யவேண்டியதெல்லாம் இவையே. நீங்கள் பட்டுச்சட்டை வாங்கித் தர வேண்டாம், கட்டி அணைத்து அன்பின் ஸ்பரிசத்தைத் தாருங்கள்; கவிதை மொழியெல்லாம் பேச வேண்டாம், கன்னத்தில் கனிவாக முத்தம் ஒன்று தாருங்கள்; முழ நீளத்திற்கு மெச்சிப் பாராட்ட வேண்டாம், ஒரு சின்ன உச்சி முகர்தல் போதும். உங்கள் குழந்தைகள் உங்களைக் கடைசி வரை நேசிக்கும்.
“சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு – அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு.., பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு – அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு?