‘மூச்சு வாங்குகிறது’ என்று யாரேனும் மூச்சு வாங்குவதைப் பிரச்சனைப் போன்று கூறக் கேட்டால் அதற்கு நாம் நேரடியாகவோ, மனதிற்குள்ளோ கூறும் பதில் என்னவென்றால் “மூச்சு வாங்கவில்லை என்றால் தானே பிரச்சனை?
மூச்சு வாங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று தானே!?! ஆனால், மூச்சு வாங்குதல் பிரச்சனை மட்டும் அல்ல; அது மிகப் பெரிய பிரச்சனைக்கான முதல்நிலை அறிகுறி என்பதை நாம் அறிவோமா?!?
இக்கட்டுரையின் மூலம் அதனை அறிந்து கொள்வோம். அதற்கு உதவியாக இருக்கிறார் இருதய நோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள்.

அமைதியான கொலையாளி
மூச்சு வாங்குதல் பிரச்சனைக்குக் காரணம் ‘இருதயச் செயலிழப்பு’ பிரச்சனையே. ஒரு மருத்துவராக மக்களுக்கு இந்த நோய் வரக்கூடாது என்று நான் வேண்டுகிறேன்.
உலகிலேயே அதிகமாக இருதயச் செயலிழப்பு நோயாளிகளைக் கொண்டுள்ள நாடு இந்தியா தான். முதன்மையாக உள்ள நோயும் இதுதான்! இருதயச் செயலிழப்பானது ஆரம்பக் காலங்களில் வெளியில் தெரியாமல் மௌனமாகவே பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.
உதாரணமாக, வெகு தூரம் நடந்தால் மூச்சு வாங்குதல்; பிறகு குறைந்த தூரம் நடந்தாலே மூச்சு வாங்குதல்; அதன் பிறகு சில அடிகள் நடந்தால் கூட மூச்சு வாங்குதல் என்று இருதயச் செயலிழப்பின் சதவீதத்தைப் பொறுத்து மூச்சு வாங்குதலின் நிலையும் மாறுபடும்.
READ ALSO: பல் சொத்தை வருவதற்கான முக்கியமான காரணம்
இவ்வாறு வேறு எந்த அறிகுறியும் இன்றிப் பாதிப்புகளை அதிக அளவில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த ‘இருதயச் செயலிழப்பு’ நோய்.
இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு ஒரு கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்! அதில் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழக்கிறார்கள்!! பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம் பேர் ஐந்து வருடங்களிலேயே இறந்து விடுகிறார்கள்!!!
இந்த இறப்புச் சதவீதமானது புற்றுநோயின் இறப்புச் சதவீதத்தை விட அதிகமாகும்! இத்தகைய அதீதப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இருதயச் செயலிழப்பு நோயை முன்கூட்டியே எளிய வகையில் நாம் கண்டறியலாம்!
கண்டறிந்தப் பின் முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு, இருதயச் செயலிழப்பையே தவிர்க்கலாம்!! அதன் மூலம் மரணத்திலிருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்!!!

இருதயச் செயலிழப்பு என்றால் என்ன?
இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதயத்தின் மேல் அறைகள் வலது ஆரிக்கிள் (ஏட்ரியம்) மற்றும் இடது ஆரிக்கிள் (ஏட்ரியம்). இதயத்தின் கீழ் அறைகள் வலது வெண்ட்டிரிக்கிள் மற்றும் இடது வெண்ட்டிரிக்கிள் ஆகும்.
இதில் இதயத்தின் வலதுப் புறத்தில் உள்ள மேலறை உடலின் தலை, கழுத்து, கைகள் என்று உடலின் மேல் புறத்திலிருந்து அசுத்த இரத்தத்தையும், வலதுப் புறத்தின் கீழறை உடலின் கால், இடுப்பு, வயிறு என்று உடலின் கீழ்புறத்திலிருந்து அசுத்த இரத்தத்தையும் பெறுகிறது.
‘அசுத்த இரத்தம்’ என்பது இரத்த ஓட்டத்தின் மூலம் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனானது பிற உறுப்புக்களால் பெற்றுக் கொள்ளப்பட்டுக் கார்பன்-டை-ஆக்சைடு கலந்து வருவது ஆகும்.
இப்படி வலதுப் புற இதயத்தை அடைந்த கார்பன்-டை-ஆக்சைடு கலந்தக் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட அசுத்த இரத்தத்தை நுரையீரலுக்கு இதயம் சுருங்கி-விரிந்து அனுப்பி வைக்கிறது.

அங்கே கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றப்பட்டு, ஆக்ஸிஜன் கலந்த இளம் சிவப்பு நிறம் கொண்ட தூய்மையான இரத்தமானது இதயத்தின் இடதுபுறத்தின் மேல் அறையைச் சுருங்கி-விரிதல் செயலால் அடைகிறது.
‘இருதயச் செயலிழப்பு’ என்பது இருதயத்தின் சுருங்கி-விரியும் தன்மையையே குறிக்கிறது. சுருங்கி-விரிதல் மூலம் இத்தகைய பணிகளைச் செய்யக்கூடிய இதயச் செயலிழப்பானது வலதுப் புறத்திலும் நிகழலாம்;
இடது புறத்திலும் நிகழலாம்; சிலருக்கு இரண்டு புறத்திலும் நிகழலாம். இதில் முக்கியமான செயலிழப்பாகக் கருதப்படுவது இடது புறச் செயல் இழப்புதான்.
காரணம் இடது புறத்தில் இருக்கக்கூடிய தூய்மையான இரத்தத்தால் மட்டுமே தலை முதல் பாதம் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவற்றை அளிக்க முடியும்.
எனவே இடது புறத்தின் செயல்பாடானது முறையாகச் செயல்படவில்லை எனில் உடலின் பிற உறுப்புகள் ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் இன்றி அதனுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்ய இயலாமல் அவையும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

இருதயச் செயலிழப்பும், மூச்சு வாங்குதலும்
இதனை ‘எக்கே’(Eco) பரிசோதனை மூலம் கண்டறியலாம். இருதயத்தின் சுருங்கி – விரியும் (Bumping) தன்மையானது
50 முதல் 70 சதவீதம் வரை இருந்தால் ‘இருதயச் செயலிழப்பு’ குறைவானது.
40 முதல் 50 சதவீதம் வரை இருந்தால் ‘இருதயச் செயலிழப்பு’ மிதமானது,
40 சதவீதத்திற்குக் கீழ் இருந்தால் ‘இருதயச் செயலிழப்பு’ அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.
இவ்வாறாகச் செயலிழப்பானது குறைவாக (50% -70%) இருக்கும் பட்சத்தில் 70% இரத்தம் மட்டுமே சுருங்கி-விரிதலின் மூலம் நுரையீரலைச் சென்றடைகிறது.
மீதம் இருக்கக்கூடிய 30 சதவீத இரத்தமானது இதயத்தின் கீழ் அறையில் தேங்குகின்றது. இப்படி இதயத்தின் சுருங்கி-விரியும் தன்மைக்கு ஏற்பத் தேங்கக் கூடிய இரத்தத்தின் அளவானது அதிகரிக்கிறது.
READ ALSO: நுரையீரல் பாதிப்புகள் மீண்டும் வராமல் இருக்க!
இரத்தம் அதிக அளவில் தேங்கும் போது இதயத்தின் அடிப்பகுதியானது பருமனாகத் தொடங்குகிறது. மேலும் இதன் காரணமாக நுரையீரலுக்குள் சென்ற இரத்தமானது மீண்டும் இதயத்தை அடைய முடியாமல் நுரையீரலுக்குள்ளும் தேங்க ஆரம்பிக்கிறது.
இதனால் பஞ்சுப் போன்று மென்மையாக இருக்கக்கூடிய நுரையீரலானது ஈரத்தன்மையோடும், சற்றுக் கடினமாகவும் மாற ஆரம்பிக்கிறது. இந்த மாற்றத்தால் நுரையீரலில் நிகழக்கூடிய சுவாசமானது இயல்பாக நிகழாமல் தடைப்படுகிறது.
இதுவே மூச்சு வாங்குவதற்கானக் காரணமாகும்! இதனால்தான் இதயத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும்போது மூச்சு வாங்குதலும் அதிகமாக இருக்கிறது.
இதயத்தில் பாதிப்பு மிதமாக இருக்கும் போது மூச்சு வாங்குதலும் விதமாக இருக்கிறது. இதயத்தில் பாதிப்புக் குறைவாக இருக்கும் பொழுது மூச்சு வாங்குதலும் குறைவாக இருக்கிறது!
இதயமா? நுரையீரலா? என்ற பட்டிமன்றத்தில் ‘இரண்டுமே’ என்பதுதான் தீர்ப்பு என்பதை நாம் அறிவோம். ஆனால் ‘ஏன்?’ என்ற காரணத்தை இன்று முழுமையாய் அறிந்துக் கொண்டோம் என்று எண்ணுகையில் பட்டிமன்றத்தின் தீர்ப்பானது இனி விவாதம் இன்றி ஏற்றுக் கொள்ளப்படும் என்றே நம்புகின்றோம்.
எனவே ‘மூச்சு வாங்கவில்லை’ என்றால் ‘உயிர் வாழ்தல்’ என்பது உறுதிப்படுத்தப்படாது என்பதை உணரும் இவ்வேளையில், அதிகமாக மூச்சு வாங்குகிறது என்றால் அதுவும் கவனிக்கத்தக்க ஒரு முக்கியத் தகவல் என்பதையும் அறிந்து, விழிப்போடு செயல்படுவோம்.
கட்டுரையாளர்
