சுவையான, தரம் உயர்ந்த, வகைவகையான உணவாக இருந்தாலும் அதைச் சுவைத்து உண்ணப் பற்கள் வேண்டும் அல்லவா?
அந்தப் பற்களை இழக்கையில் அதனை நாம் மீண்டும் எப்படிப் பெறலாம் என்று விளக்கம் அளிக்கிறார் டாக்டர். எம். வீரபாகு BDS, MDS., முகம், வாய் மற்றும் தாடை அறுவைச் சிகிச்சை நிபுணர் -OMFS.
“பல் மருத்துவர் கூறுகின்ற அனைத்து ஆலோசனை மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றியும் ஏதோ ஒரு காரணத்தால் பல்லில் ஏற்படும் சொத்தைப் புறக்கணிக்க முடியாத ஒன்றாகி விட்டது.
எனவே பல்லில் சொத்தை ஏற்பட்டுவிட்டது. அதனால் தாங்க இயலாதப் பல் வலியும் ஏற்படத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் பல்லைப் பிடுங்கி விடலாமா?” என்பது உங்களுடைய கேள்வியா?
இப்படிப்பட்ட சூழலில் பல்லை நீங்கள் பிடுங்க வேண்டாம். இதற்கு மாற்றுச் சிகிச்சையாக ‘வேர்க் கால்வாய்ச் சிகிச்சை (Root Canal Treatment)’ உள்ளது.
இந்தச் சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பல் பகுதியில் மருப்பு மருந்துச் செலுத்தப்பட்டு இந்தப் பல்லின் வழியாகவே அறுவைச் சிகிச்சைக் கருவியை உட்செலுத்திப் பற்குழியில் உள்ள பாதிக்கப்பட்ட பல்லின் வேர் (நாண்) மட்டும் நீக்கப்படும்.
இப்பற்கள் இறந்த பற்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இஃது இறந்த பற்கள் அல்ல. மேலும் இந்தச் சிகிச்சையினால் பல்லில் ஏற்பட்ட வலியானது முழுமையாக நீக்கிவிடும். இவ்வாறு வேர் நீக்கப்பட்ட அந்த இடத்தில் ‘கட்டப்பர்க்கா’ என்ற இரப்பர் அடைக்கப்படும்.
இதனால் அப்பல் அதே இடத்தில் இருக்கும். ஆனால் கடிக்கும் போது சற்று உடையக்கூடிய தன்மையோடு இருப்பதால் இந்தப் பற்களின் மேல் ஓர் உறையானது (Crown) பொருத்தப்படும். எனவே உங்கள் பல் அதே இடத்தில் பழைய வலிமையோடே இருக்கும்.
READ ALSO: பல் சொத்தை வருவதற்கான முக்கியமான காரணம்
பல்லில் சொத்தை இல்லை; ஆனால் பல் வலிக்கிறது, ஆடுகிறது; இஃது இன்னொரு வகையான பல பிரச்சனை! இதற்குக் காரணம் என்னவென்றால் முறையாக, தூய்மையாக, பல்லைப் பராமரிக்காததால் ஈறுகளில் காரைப் படிந்து அந்தக் காரைகளில் பாக்டீரியாக்கள் வாழத் தொடங்கி அவை பல் எலும்புகளை அரிக்கின்றன.
இதனால் பல் ஆடுகிறது. இது தரம் 1 மொபிலி (Grade 1 Mobili) என்று மருத்துவத் துறையில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் பல் மருத்துவரை அணுகினால் கூடப் பல்லில் படிந்துள்ள காரையானது பெரிடோன்டல் சிகிச்சை (Periodontal Treatment) மூலம் நீக்கப்பட்டுப் பல் இழக்காமல் காப்பாற்றப்படும்.
இந்த நிலையைக் கடந்து, பல் முழுமையாக ஆடும் நிலையைத் தரம் 2 அல்லது தரம் 3 மொபிலி (Grade 2 or Grade 3 Mobility) என்று மருத்துவத்துறையில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நம்மால் பல்லைப் பாதுகாக்க முடியாது. பல்லை இழந்தே ஆக வேண்டும்.
இழந்தப் பற்களை மீட்பதற்கான மருத்துவம்
மேற்கூறிய எந்தக் காரணங்களால் ஒருவர் பல்லை இழந்தாலும் மீண்டும் நவீன மருத்துவத்தின் மூலம் நிரந்தரமாகப் பல்லைப் பெற முடியும்! அந்த முறைக்குப் பல் உள்வைப்பு (Dental Implant) என்று பெயர். முன்னாட்களில் பற்களை இழந்தவர்களுக்கு ‘பல்செட்’ கொடுக்கப்பட்டது.
இப்பொழுதும் இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் ‘பல்செட்டை’ இரவில் கழட்டி வைக்க வேண்டும். அது தளரும்போது உச்சரிக்கக் கூடிய வார்த்தையின் உச்சரிப்பானது மாறுபடும். இது போன்ற இடர்பாடுகள் இதில் உள்ளன.
இந்தப் பல் உள்வைப்பு (Dental Implant) மருந்துவ முறையில் டைட்டானியம் தரம் -5 (Titanium grade -5) என்ற உலோகம் வாயினுள் திருகுப் போன்று பொருத்தப் பயன்படுத்தப்படுகிறது. எப்பொழுதுமே நமது உடலானது வெளியிலிருந்து பொருத்தப்படுகின்ற ஒன்றை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளாது.
ஆனால் இந்த வகை உலோகமானது உடலால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது! எனவே உடலும் அதன் உறுப்பாகவே உணர்வதால் மூன்று மாதத்தில் இந்த டைட்டானியம் தரம் -5 (Titanium grade -5) உலோகத்தைச் சுற்றி எலும்புகள் வளர ஆரம்பிக்கின்றன.
READ ALSO: நுரையீரலை வலுவாக்கும் மூச்சுப்பயிற்சிகள்
பிறகு உச்செலுத்தப்பட்ட டைட்டானியம் தரம் -5 (Titanium grade -5) உலோகத்தில் செயற்கைப் பல்லானது பொருத்தப்படுகிறது. இந்த முறையின் மூலம் ஒன்று முதல் பல பற்கள் அல்லது வாயில் உள்ள முழுப் பற்களையுமே நம்மால் பொருத்த முடியும்!
இப்படியாக நவீன மருத்துவத்தால் இழந்தப் பற்களை மீட்டுக்கொண்டு வர முடியும் என்ற போதிலும் அதனை விடச் சிறந்தது இயற்கையாய் நாம் பெற்ற பற்களை முறையாகத் தூய்மை செய்து, பல் பரிசோதனை மேற்கொண்டு, பாக்டீரிய தொற்றிலிருந்து பற்களைப் பாதுகாப்பதே.
இழந்ததை மீண்டும் பெற்றால் இழந்ததன் மகத்துவம் தெரியாது அல்லவா! என்னதான் இழந்ததை மீண்டும் பெற்றாலும் அது நம்முடன் பிறந்தது போல ஆகாது அல்லவா? இக்கூற்றுகளை வாசிக்கையில் மனதிற்குள் விவரிக்க இயலாத ஒரு வலி உணர்வு வருகிறதா?
எனில் நம்முடன், நமக்காக மட்டுமே பிறந்ததை இழக்காமல் பாதுகாப்போம். அது சிறியதாக இருந்தாலும், முக்கியத்துவம் பெறாததாக இருந்தாலும் அதனைப் பாதுகாப்போம். காரணம் அது நமக்கானது!