நுரையீரல் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், அதாவது நிலை-1, நிலை-2 என ஆரம்ப நிலையிலேயே உறுதி செய்யப்பட்டால், அந்தப் புற்றுநோயை முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலமாகவோ, கீமோதெரபி சிகிச்சை மூலமாகவோ முற்றிலும் குணப்படுத்த முடியும்.

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் கதை 1:
ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டர்.., அவருக்கு ஏற்கனவே புகைப்பழக்கம் இருந்தது. அதோடு பெட்ரோல், டீசலால் சாலையில் ஏற்படும் புகையை தொடர்ந்து சுவாசிப்பதால் அவருக்கு இருமல், சளி, சளியில் ரத்த கசிவு என்று பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையை அனுகினார். நான் எக்ஸ்-ரே எடுத்து பார்த்தேன். அதில் சந்தேகப்படக்கூடிய ஒரு நிழல் இருந்தது. அடுத்து ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கும்போது, அவருக்கு நுரையீரலின் மேல் பகுதியில் ஒரு கட்டி இருப்பது இருந்தது. பிறகு உடனடியாக PET/CT பரிசோதனை செய்து பார்த்தோம். அந்தக் கட்டி வேறு எங்கேயும் பரவாமல் ஒரே இடத்தில் இருப்பது தெரிய வந்தது.
அடுத்து பையாப்ஸி பரிசோதனை செய்து அது அடினோ கார்சினோமா என்று உறுதிப்படுத்தினோம். பிறகு, அவருக்கு வலது மேல் லோபெக்டோமி (right upper lobectomy) என்கிற அறுவை சிகிச்சை செய்து, முழுவதும் குணப்படுத்தினோம். அந்த நோயாளி இப்போது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்கிறார். அதன் பிறகு அவருக்கு நுரையீரல் புற்றுநோய் வரவில்லை. ஆரோக்கியமாக இருக்கிறார்!

நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள் எந்த ஸ்டேஜில் வந்தால் காப்பாற்றுவது கடினம்?
புற்றுநோய் நிலை-3, நிலை-4 என்று அதிக அளவு நிலை தாண்டியது என்றால், அவர்களுக்கு Palliative Care சிகிச்சைதான் அளிக்க முடியும். அந்த நோயாளிக்கு நல்ல முறையில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமாக சிகிச்சை அளிக்கலாம். ஆனால், புற்றை முற்றிலும் குணப்படுத்த முடியாது.
நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள் எந்த கண்டிஷனில் வந்தால் காப்பாற்றவே முடியாது?
சிலர் நிலை 4A, நிலை 4B என புற்று மிகவும் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் கட்டிகளானது, மூளை, எலும்புகள், கல்லீரல் என மற்ற எல்லா உறுப்புகளுக்கும் பரவியிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் கட்டிகளைக் கரைப்பதற்கு வேண்டிய சிகிச்சைகள் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தலாம். ஆனால், அவர்களின் ஆயுட்காலம், நிலை-1, நிலை-2 போல இருக்காது. ஆனால், 5-7 ஆண்டுகள் வரை அவர்களின் வாழ்க்கையை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே! ஆண்களின் நுரையீரல் பத்திரமாக இருக்கிறதா?
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் கதை 2:
ஒரு நோயாளி, அவருக்கு வயது 55. அவர் பெட்ரோலியம் தொழிற்சாலையில் அலுவலக வேலை செய்கிறார். அவருக்கு புகைப்பழக்கம் கிடையாது. ஆனால், அவருக்கு அடிக்கடி உடல் வலி, அசதி, களைப்பு இருந்தது. அவர் 3-4 மாதங்களாக சாதாரண வலி மாத்திரைகள் போட்டு காலத்தை கடந்து வந்தார். பிறகு இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், நம் மருத்துவமனையை நாடி வந்தார். எக்ஸ்-ரே பரிசோதனை செய்து பார்த்தோம். அவர்களுக்கு நுரையீரலில் நிறைய சிறுசிறு கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
உடனே ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தோம். நுரையீரல் கட்டிகள் கல்லீரல் எலும்பு, கணைய எலும்பு, இடுப்பு எலும்புகள் வரை பரவி இருந்தது. பையாப்ஸி பரிசோதனை செய்தோம். இப்போது கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மற்றபடி முன்பிருந்ததைவிட அறிகுறிகள் தற்போது குறைந்திருக்கிறது.

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் கதை 3:
ஒரு நோயாளி.., அவருக்கு வயது 48. புகைப் பழக்கம் உள்ளவர். அவர் நம் மருத்துவமனையை நாடி வரும்போது டி.பி (காசநோய்) சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு பொது மருத்துவர் டி.பி சிகிச்சைக்கான மருந்து கொடுத்திருந்தார். ஆனால், அந்த மருந்துகள் நோயாளியை சரி செய்யவில்லை. மூன்று மாதங்கள் ஆகியும் அவருக்கு குணமாகவில்லை. அவருக்கு இருமும்போது சளியில் ரத்தம் வர ஆரம்பித்தது. அந்த நிலையில்தான் நம் மருத்துவமனையை நாடினார்.
அவருக்கு சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்து பார்க்கும்போது, வலதுபக்க நுரையீரல் முழுவதும் கட்டி மற்றும் நீர் அதிக அளவில் சேர்ந்திருந்தது. மேலும், இடதுப் பக்கம் உள்ள நிணநீர் கட்டிகளிலும் பரவி இருந்தது. அந்த நோயாளியை நோய் தாக்கி நான்கு மாதங்கள் காலம் தாழ்த்தி வந்திருந்தார். அவருக்கு திசு நோய் அறிதல் பரிசோதனை செய்து பார்க்கும்போது, அவருக்கு டி.பி நோய் இல்லை. நுரையீரல் புற்றுநோய் தாக்கியுள்ளது என்பது தெரியவந்தது.
இதையும் படிக்கலாமே! எலும்பு வலிமையை இழந்தால் அவதி!
அதன் பின் ஸ்கேன் பரிசோதனையில் நிலை-4 என்பதும் தெரியவந்தது. பின் நோயாளியின் மனைவி, ‘கடைசி நிலையில் மருத்துவமனைக்கு வந்திருக்கிறோம். என் கணவரை குணப்படுத்த முடியுமா?’ என்று கேட்டார். நீங்கள் கடைசி நிலையில், மருத்துவமனைக்கு வந்துள்ளதால் குணப்படுத்த முடியாது. ஆனால், நோயைக் கட்டுப்படுத்தலாம் என்று விளக்கம் அளித்தோம். பிறகு நீரை வெளியெடுத்து, அவருக்கு மருந்து சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை அளித்தோம். தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம்.
கட்டுரையாளர்
