நாலு நாள் காய்ச்சல் அடித்து, நரம்பையும் தாக்கி, நடக்க முடியாமல் முடக்கும் போலியோவை கிட்டத்தட்ட ஓரங்கட்டிவிட்டோம்.
மூன்றே நாள் மூளைக்காய்ச்சல் வந்து மூளை வளர்ச்சி தேங்கும் நோயும்கூட வெகுவாக அருகிப் போய்விட்டது.
ஆனால், சமீபநாட்களில் வரும் பிரச்னைகள் வேறானவை! சாதாரண காய்ச்சல் வந்து போன பின்னால் இரண்டு, மூன்று மாதங்களுக்கு நடக்கும்போது குதிகாலிலும் கால்மூட்டிலும் வலி ஏற்படும் புதுவித மூட்டுவலி நோய் பெருகி வருகிறது.
”மூட்டுவலி மட்டுமில்லை. காய்கறி நறுக்கும்போது விரலைச் சுழித்தால் சுரீரென்று வலிக்கிறது. என்ன சார் நடக்குது உள்ளே வலி மாத்திரையைத் தவிர வேறு வழியே இல்லையா?” என்போர் இப்போது அதிகம்.

‘சிக்குன் குனியாவுக்குப் பிந்தைய மூட்டுவலி’ என்று அன்போடு /வலியோடு அழைக்கப்படுகிறது இந்த மூட்டுவலி. இது வயதாவதால் வரும் மூட்டுவலியோ, அல்லது நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பால் வரும் ருமட்டாய்டு மூட்டுவலியோ கிடையாது.
வந்து போன வைரஸை எதிர்கொள்ள நம் உடல் உற்பத்தி செய்த நோய் எதிர்ப்பாற்றல் சமாசாரங்கள், வந்த வேலை முடிந்த பிறகும் அங்கிருந்து நகராமல் கூடுதல் நாட்கள் மூட்டுகளுக்கு இடையில் தங்கி இருப்பதன் விளைவுதான் இது.
ஏற்கனவே ருமட்டாய்டு மூட்டுவலி இருப்போருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் மூட்டுவலியும் சேர்ந்து கொள்ளும்போது வலி தீவிரமாக இருக்கும். நீண்ட காலம் நீடிக்கும்.
சாதாரண கொசு கொண்டுவந்து சேர்க்கும் அசாதாரண நோய்களில் ஒன்றுதான் சிக்குன் குனியா. 1960-களில் ஆப்ரிக்காவில் கடும்சேட்டை செய்தது.
READ ALSO: உப்பு குறைவா சாப்பிட்டா இதயத்துக்கு நல்லதா?
பின் பல காலம் அமைதியாய் இருந்து வந்த இந்த கொசு-வைரஸ் கூட்டணி, 2006 டிசம்பரில் மறுபிரவேசம் நடத்தி கடந்த ஆறேழு ஆண்டுகளாக இந்தியாவிலும் இன்னும் சில கிழக்காசிய நாடுகளிலும் ஆங்காங்கே அட்டூழியம் செய்தபடி உள்ளது.
கடுமையான ஜூரம், மூட்டுவலி, தோலில் சிவப்புப்படைகளுடன் வரும் சிக்குன் குனியாவை நம் ஊர் நிலவேம்புக் குடிநீரைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம்.
அதற்குப் பின் தொடரும் வலிக்கு, வலி நிவாரணி மட்டும் போதாது. ஜுரம் விட்ட பின்னரும், சில காலம் நிலவேம்பு க்ஷயம் குடிக்கலாம். வாரம் இரண்டு நாள் காலை, மாலை இதை சாப்பிடுவதுடன், உணவிலும் கொஞ்சம் அக்கறையாக இருப்பது அவசியம்.
அமுக்கரா கிழங்கு சூரணம், சிற்றரத்தை சூரணம், வாதமடக்கி, க்ஷரபலா எனும் சிற்றாமுட்டியின் எண்ணெய் மருந்து என சில சித்த மருந்துகளை அருகாமை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

‘புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்” என்கிறது சித்த மருத்துவம். கருணையை கிழங்கில் மட்டுமே பார்க்கமுடிகிற இந்த நவீன யுகத்தில், நோய் அணுகாமல் இருக்க தேரன் சித்தர் சொன்ன விதியை நினைவுகொள்வது அவசியம்.
‘கருணையன்றி பிற புசியோம்’ என அவர் சொன்னது போல, பிடிகருணைக்கிழங்கைத் தவிர பிற கிழங்குகளை மூட்டுவலிக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.
சிறுநீர் நன்றாக வெளியேற வைக்கும் வெள்ளரி, நீர்முள்ளி, பார்லி முதலானவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதுடன், ஒமேகா3 உள்ள மீனும் சாப்பிட வேண்டும்.
கவுட் (GOUT) எனப்படும் யூரிக் அமில மூட்டுவலி நோயாளிகள் தவிர பிறர் மீன் சாப்பிடலாம். மீன் எண்ணெயும் பயன்படுத்தலாம்.

சில வகை மீன், நண்டு மற்றும் இறாலின் மேல் ஓட்டிலிருந்து பெறப்படும் ‘குளுக்கோசமின்’ என்ற பொருள், மூட்டுகளுக்கு இடையிலான இணைப்புகளை வலுப்படுத்துகின்றன என கண்டுபிடித்துள்ளனர்.
கவுட் (GOUT) மூட்டுவலி உள்ளவர்கள், விலங்கின புரதங்களைத் தவிர்த்தே ஆக வேண்டும். அதிகபட்ச பியூரின்களைக் கொண்ட காலிஃப்ளவர் மற்றும் சில கீரைகளையும் தவிர்ப்பது மிக முக்கியம்.
ஆனால் முடக்கறுத்தான் கீரை சேர்த்து செய்யப்படும் தோசை, மூட்டுவலிக்குக் காரணமான அதிகபட்ச வாதத்தன்மையைப் போக்கும் என்பதால், அதை சாப்பிடலாம்.
வயதாகி மூட்டு தேய்ந்து வரும் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனும் வயோதிக மூட்டுவலியில், மூட்டுகளுக்கு இடையில் உள்ள சவ்வு உலர்ந்தோ, எலும்புகளின் சுண்ணாம்பு அடர்த்தி குறைந்தோ இருக்கும்.
பிண்ட தைலம், மகா நாராயணத் தைலம் மாதிரியான தைலப் பூச்சு வலியைக் குறைக்கவும், நடையை மேம்படுத்தவும் உதவும். தமிழ் மருத்துவம் சொன்ன பலவற்றுக்கும் இன்றைக்கு நவீன அறிவியல் தரவுகளும் தயார்.

கம்பங்கூழ், பிரண்டைத் துவையல் இவர்களுக்கு உன்னத உணவு. இது கால்சியமும் தந்து, கூடவே ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் தரும். எல்லா மூட்டுவலிக்குமே, இன்று அமெரிக்க காப்புரிமை வரை பயணித்துவிட்ட நம்ம ஊர் அமுக்கராங்கிழங்குச் சூரணம் ஏற்றது.
இது மூட்டுகள், தசைகள், கார்டிலேஜ் என அனைத்தையும் வலுப்படுத்தி, வயோதிகத் தள்ளாமையையும் சரிப்படுத்தும்.
‘கொசுவால் மலேரியா வரும்னு தெரியும். மூட்டுவலியுமா?’ என பதறிய நாம் அப்போது கூட மொத்தமாய் சூழல் காரணங்களை யோசிக்காமல், ‘வீட்ல நல்ல தண்ணீர் தேக்கி வைக்காதீங்க’ என ஆரம்பித்து ஆலோசனைகள் பொழிகிறோம்.
‘பெண் கொசுவுக்கு குடும்பக் கட்டுப்பாடு பண்ணலாமா? அதன் மாபணுவை மாற்றிவிட்டால் என்ன?” என பயங்கரமான யோசனைகளை முன்வைக்கிறோம்.
கூடவே ஊரைச் சுற்றி உள்ள பெரும்பாலான ஏரிகளிலும் குளங்களிலும்தான் பேருந்து நிலையங்களையும், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் சகட்டுமேனிக்குக் கட்டி வளர்க்கிறோம்.
READ ALSO: தனிமையில் வசிக்கும் முதியோர்களே… கவனம்!
இயற்கையாக உள்ள பெரும் ஏரிகளும், குளம், குட்டைகளும், அவற்றின் சூழலியல் பன்முகத்தன்மையால் கொசுவைக் கட்டுப்படுத்தும் என்பதை மறந்தே போய்விட்டோம்.
ஏரியின் பச்சைப் பாசிகள் கொசு முட்டைக்கான வாழிடம். அந்தக் கொசு முட்டையே மீனுக்கான உணவு. மீனும் சில மெல்லுடலிகளும் அங்கு வாழும் நாரைக்கான உணவு.
இந்த பல்லுயிர்ச் சுழற்சி புரியாமல், வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளைச் கருக்கிவிட்டோம். நம்மால் முடிந்தவரை நல்ல நீரை உறிஞ்சிவிட்டு, டெல்லியின் யமுனை நதியையும், சென்னையின் கூவத்தையும் கழிவுநீர் சாக்கடையாக்கிவிட்டோம்.
ஒடிசாவின் சில்கா ஏரிக்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏரி, பழவேற்காடு ஏரி. முன்பு 450 சதுர கிலோ மீட்டர் அளவாக இருந்த அது, இப்போது 360 சதூ கி.மீ அளவுக்கு சுருங்கிவிட்டதாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக பேசப்படும் இந்த ஏரி, ஒரு காலத்தில் அரேபியர்களும் போர்ச்சுகீசியர்களும் பயன்படுத்திய துறைமுகம். ஆரணி, ஸ்வர்ணமுகி, காளங்கி ஆறுகள் இந்த ஏரியில் வந்து கலக்கின்றன.
‘தண்ணீரோடு அவை கொண்டுவரும் ரசாயன நச்சுகளும் கழிவுகளும் இங்கு குவியும் பறவைக் கூட்டத்தைப் பயமுறுத்துவதோடு, கட்டுப்பாடற்று மீன்பிடிப்பதாலும் கூட இந்த ஏரி அழிகிறது” என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
சென்னையிலும் செங்கல்பட்டிலும் கிட்டத்தட்ட 2,000 ஏரி, குளங்கள் இருந்ததாக சமீபத்திய வரலாறு கூட சொல்கிறது. அப்போது கொசு கடித்ததாக நம் முன்னோர்கள் புலம்பியதில்லை. இன்றோ கொசு குசலம் விசாரிக்காத குடும்பங்களே இல்லை.
இப்போது கொசு கடித்து மலேரியாவும் மூட்டுவலியும் வருவது போல், ஒருவேளை வருங்காலத்தில் கொசு கடித்து உயிர்க்கொல்லி வைரஸோ அல்லது ஆண்மைக்குறைவோ வந்தால் மட்டும்தான் சூழலைக் காத்து சுகாதாரத்தை மீட்க முயல்வோமோ என்னவோ?