சுமார் 30-40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலும் சுகப்பிரசவம் தான். சிசேரியன் என்பது எப்போதாவது தான் நடைபெறும். அதுவும் அரிய நிகழ்ச்சியாகவே இருந்தது.
அதுவும் கிராமத்தில் வீட்டிலேயேதான் நிறைய பிரசவங்கள் நடந்தன. இப்பொழுது சிசேரியன் திடீரென்று அதிகமாவதற்கு என்ன காரணம்?
பெற்ற தாய், கர்ப்பிணிப் பெண் மற்றும் அவருக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் மூவரும்தான் காரணம்.
மிக்ஸி, கிரைண்டர் இல்லாமல் அம்மிக்கல், ஆட்டுக்கல் என்று இருந்த காலம். அது. பெண்கள் தாய்மையடைந்தாலும் அவர்கள் தினசரி செய்து வரும் துணி துவைப்பது, வீட்டைப் பெருக்குவது போன்ற காரியங்களைக் குழந்தை பிறக்கும் வரை தொய்வின்றிச் செய்து வந்தார்கள்.
ஆனால் தற்பொழுது கர்ப்பிணிகளின் அம்மாக்களுடைய அன்புத் தொல்லை சற்று அதிகமாகப் போய்விட்டது.

மகளை ‘அதைச் செய்ய வேண்டாம்; இதைச் செய்ய வேண்டாம்’ என்றுகூறி, தேவையான உடற்பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடுகிறார்கள். அதிலும் முதல் பிரசவம் என்றால் கேட்கவே வேண்டாம்.
தேவையான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே சிசேரியனுக்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.
உடற்பயிற்சி இல்லாததால் பிரசவ காலத்தில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் தலைதூக்க ஆரம்பித்துவிடுகின்றன.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் இப்போது அதிகமாகப் பார்க்க முடிகிறது.
டாக்டர்கள் கர்ப்பிணிப் பெண்ணை முடிந்த அளவுக்கு நல்லபடியாகப் பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.
READ ALSO: நாம் செய்யும் வேலைகள் வியாதிகள் தருகிறதா?
சத்தான உணவு, தேவையான உடற்பயிற்சி மற்றும் தடுப்பூசி போன்றவற்றைப் பின்பற்றச் செய்வார்கள். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் எந்த அளவுக்கு அதைப் பின்பற்றுவார்கள் என்பது சந்தேகமே.
தற்காலக் கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் பேர் விரும்புவது வலியில்லாப் பிரசவத்தைத்தான். பிரசவ வலி இருக்காது என்றால் சிசேரியனாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தற்பொழுது பலருக்கு இருக்கிறது.
சிசேரியன் அதிகம் நடைபெறக் காரணங்கள்:
- கர்ப்பிணியின் முழு மனதான விருப்பம். உறவினர்களின் அதிகமான விருப்பம்.
- அதிக எடையுள்ள குழந்தை.
- மருத்துவ ரீதியாக ஏற்படும் ஒரு சில பிரச்னைகள்.
- தாமதமான திருமணம்.
- நீண்ட காலத்திற்குப் பின்பு பிறக்கும் குழந்தை.
இதைத் தவிர டாக்டர்களின் கால நெருக்கடியும் ஒரு காரணமாகும். ஆம்! சுகப்பிரசவம் பார்ப்பதற்கு இரண்டு மணியிலிருந்து சுமார் ஐந்து மணி நேரம் வரைகூட ஆகலாம்.
தற்பொழுது இருக்கும் அவசர காலத்தில் ஒரு சில மருத்துவர்களால் அந்த அளவுக்கு நேரத்தைச் செலவழிக்க முடியாததால் பல சுகப்பிரசவங்கள் தேவையின்றி சிசேரியனில் முடிகின்றன.

குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை, பிரசவத்திற்கு முன்பே ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்கிறார்கள்.
இது இயற்கைக்கு விரோதமான செயல் மட்டுமல்ல, சட்ட விரோதமான செயலும் கூட. அடுத்த காரியமோ இதைவிடக் கொடியது.
அதாவது, குழந்தை பிறக்கும் தேதி, நாள், நட்சத்திரம் போன்றவைகளை முன்கூட்டியே தேர்வு செய்து அந்த தினத்தில் சிசேரியன் செய்யுமாறு டாக்டரிடம் தெரிவிப்பது.
அதுவும் ஆணென்றால் ஒரு நாளும், நட்சத்திரமும், பெண் என்றால் வேறு ஒரு நாள், நட்சத்திரமும் என்று குறித்து இயற்கையை மீறிய செயலில் இறங்குகிறார்கள்.
இதை வைத்துக்கொண்டு ஜாதகம் எழுதி அக்குழந்தையின் வாழ்க்கையைக் கணிப்பது என்பது எந்த விதத்தில் இயற்கைக்குப் பொருந்தும்? தாங்களே முடிவு செய்தபின், எப்படி குழந்தையின் உண்மையான ஜாதகமாக இருக்க முடியும்?
மேலும் சிசேரியன் என்று வந்துவிட்டாலேயே பூரண ஓய்வு என்ற எண்ணம் தாய்மார்களிடம் தீவிரமாகப் பரவியுள்ளது. இதிலும் தலைப்பிரசவம் என்றால் கேட்கவே வேண்டாம்.

இப்படி தேவையில்லாமல் அதிக நேரம் படுக்கையிலேயே ஓய்வு எடுப்பதால் முதுகு வலி, உடல் பருமன் மற்றும் மாதவிடாய் திரும்புவதில் தாமதம் போன்ற தொல்லைகள் வருகின்றன.
வலியில்லா பிரசவம் என்ற போர்வையில் சிசேரியன் செய்துகொண்டு, தேவையான உடற்பயிற்சிகளைச் செய்யாமல் விட்டுவிட்டு, இந்தத் தொல்லைகளையெல்லாம் அனுபவிப்பது இளம் பெண்களிடம் ஒரு நாகரிகமாய்ப் போய்விட்டது.
ஆகையால் சிசேரியனால் அதிக பணச் செலவு, எடை கூடுதல் போன்ற உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தால் சிசேரியன்களைத் தவிர்க்க முடியும்.
காலம் மாறினாலும் நமது அனைத்துப் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. நல்ல பயன் தரும் பழக்கவழக்கங்கள் பழமையாக இருந்தாலும் அதை ஏன் தொடர்ந்து நடைமுறைப்படுத்தக் கூடாது?
கர்ப்பமான பெண்கள் முதலில் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளாமல் இருக்க வேண்டும். பிரசவ சமயத்தில் ஏற்படும் வலியெல்லாம் குழந்தை பிறந்தவுடன், எல்லையற்ற மகிழ்ச்சியில் பறந்தே போய்விடுமே.
முடிந்த அளவுக்கு வீட்டு வேலைகள், உடற்பயிற்சிகள், யோகா, பிராணாயாமம், நல்ல இசை கேட்பது போன்றவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அது சுகப்பிரவசத்திற்கு வழி வகுக்கும்.
READ ALSO: எது சரியான மாதவிடாய்? ஆண்களும் தெரிஞ்சுக்கலாம்!
சிசேரியனைத் தவிர்க்க கர்ப்பிணிப் பெண் மற்றும் அவருடைய குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பும் டாக்டர்களுக்குத் தேவைப்படுகிறது.
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. எனவே தான் தாயைப் படைத்தான். எந்தத் தாய், தன் வலியையும் தனக்கு ஏற்படும் இன்னல்களையும் பொருட்படுத்தாது சுகப்பிரசவத்தை ஏற்று, உயிர்த் திரவமான தாய்ப்பாலைத் தருகிறாளோ, அவளே தெய்வத்தின் அவதாரம்.
சில பெண்கள் தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும் தயக்கம் காட்டுகிறார்கள். அதனால் தன் அழகு முக்கியமாக மார்பகங்களின் அழகு கெட்டுவிடும் என்ற தவறான எண்ணத்தினால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதில்லை.
சரியான உள்ளாடை அணிவதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும், பிரசவத்திற்கு பின்பு ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் 90 சதவிகித மார்பகங்கள் பழைய நிலைக்கே திரும்பிவிடும்.
குழந்தைக்கும் தாய்க்கும் ஓர் அன்புப் பாலமாக இருப்பது தாய்ப்பால்தான். சிலர் தாய்ப்பாலை நிறுத்தி புட்டிப்பாலுக்கு மாறுகிறார்கள். இது குழந்தையின் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கிறது.

தாய்ப்பால் கொடுப்பதனால் அடுத்த கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகிறது. தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்க மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.
பிரசவம் என்பது இயற்கையோடு ஒன்றிய ஒரு முக்கியமான நிகழ்வு. அது முடிந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றிப் போனால் தாயும் சேயும் பிரசவத்தின்போது மட்டுமில்லாமல் அதற்கு பின்பும் நலமாகவும் வளமாகவும் இருப்பார்கள்.
என்னதான் பெண்ணுக்குத் தன் வேலை, அழகு, படிப்பு போன்றவைகள் மிக முக்கியமானதாக மாறினாலும், இவை அனைத்தையும் விட, தன் குழந்தை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒரு தாய் எக்கணமும் மறக்கக் கூடாது.
எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் வலியில்லா பிரசவம் (சிசேரியன்) மற்றும் தாய்ப்பால் தரப்படாத குழந்தை அம்மாவின் மீது பாசம் இல்லாத குழந்தையாகத்தான் வளரும்.
அதற்கு எதற்கு பிள்ளைப் பேறு? பெற்றோர் குழந்தைக்காகவும், குழந்தை பெற்றோர்க்காகவும் வாழும் குடும்பத்தில் தான் அன்பு நிறைந்து ததும்பும். இன்பம் உலா வரும்.
ஆகையால் சிசேரியனைத் தவிர்த்து சுகப்பிரசவம் பெற்று தாய்ப்பாலைக் கொடுத்து மழலைச் செல்வங்களிடம் அன்பை விதைப்போம்.
அப்படிச் செய்தால்தான் அவர்கள் பிற்காலத்தில் பெற்றோர் மற்றும் முதியோர்களிடம் அன்பைப் பொழியும் நன்மக்களாக வருவார்கள் என்பது மட்டும் உறுதி.