ஒருவருக்கு ஏற்படும் சிக்கலைப் பிறர் உணர்ந்து அதைத் தீர்க்க முயற்சிக்கும் போது உதாரணமாகக் கூறப்படும் கூற்றுகளில் ஒன்று, “அவர்கள் அனைவரும் ஓர் உடலின் உறுப்புகளைப் போன்றவர்கள்” என்பது தான்.
இக்கூற்றின் விளக்கத்தை நாம் நன்கு அறிவோம். எனில் உடலின் உறுப்புக்களில் ஏதேனும் ஓர் இடத்தில் வலி ஏற்பட்டால் அதைக் கண் வெளிப்படுத்தும்.
அதுபோல, உடலின் உள்ளுறுப்புகளிலும் இப்படி ஏதேனும் வெளிப்பாடு இருக்குமா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுமானால் அச்சந்தேகத்திற்கு விளக்கம் அளித்து, தீர்வையும் வழங்குகிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் எஸ்.ஜெயராமன் அவர்கள்.
நுரையீரலில் நீர்ச் சேர்தல்:
இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம் மற்றும் நுரையீரல் என்று உடலின் எந்த உள்ளுறுப்பில் பாதிப்பு, செயலிழப்பு ஏற்பட்டாலும் பாதிக்கப்படக்கூடிய உள்ளுறுப்புகளில் ஒன்று நுரையீரல்! இதன் முதல் பாதிப்பாக நுரையீரலில் நீர்ச் சேர்தல் நிகழ்கிறது.
இவ்வாறு நுரையீரலுக்குள்ளே நீர்ச் சேர்தலை “நுரையீரல் வீக்கம் (Pulmonary Edema) என்றும், நுரையீரலுக்கு வெளியே நீர்ச் சேர்தலை “ப்ளூரல் எஃப்யூஷன் (Pleural Effusion)” என்றும் அழைக்கின்றோம்.
இந்தப் பாதிப்புகள் உடல் உள்ளுறுப்புகளில் செயலிழப்பு ஏற்படும் போது மட்டும் நிகழாமல், நிமோனியா தொற்று உள்ளபோதும் ஏற்படுகின்றன.
அதிலும் குறிப்பாக நுரையீரலுக்குள் வைரஸ் நிமோனியா தொற்றால் நீர்ச் சேர்தலை “கார்டியோஜெனிக் அல்லாத நுரையீரல் வீக்கம் (Non Cardiogenic Pulmonary Edema)” என்று அழைக்கின்றோம்.
நுரையீரலைச் சுற்றி நீர்ச் சேர்தலை “இருதரப்பு ப்ளூரல் எஃப்யூஷன்கள் (bilateral pleural effusions)” என்று அழைக்கின்றோம்.
READ ALSO: மூட்டு வலியைக் கொண்டுவரும் கொசு
பாதிப்புகளும், தீர்வுகளும்
மேற்கூறிய எந்தக் காரணத்தினால் நுரையீரலில் நீர்ச் சேர்தல் நிகழ்ந்தாலும், அதன் பாதிப்பாக மூச்சு விடுவதில் சிரமம், மூச்சு இரைத்தல், ஆக்ஸிஜன் பற்றாக்குறைப் போன்றவை ஏற்படுகின்றன.
இதற்குத் தீர்வாக முதலில் நீர்ச் சேர்தலுக்கான காரணமானது கண்டறியப்படுகின்றது. உதாரணமாக, இருதயச் செயலிழப்புக் காரணமாக நுரையீரலில் நீர்ச் சேருமேயானால் அதற்கான மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
இவ்வாறாகக் கல்லீரல், கணையம், நுரையீரல், சிறுநீரகம் என்று எந்த உறுப்பில் பாதிப்பு உள்ளதோ அந்தப் பாதிப்பைச் சரி செய்வதற்கான மருந்துகள், சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இத்துடன் நுரையீரலில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதற்கான ஊசி, மருந்து -மாத்திரைகள், புகை மருந்துகள், டையூரிடிக் (சிறுநீர்ப் பிரிப்பு) , லேசிக்ஸ் ( Lasix) சீப்பாக் தெரப்பிகள் (CPAP therapy) அளிக்கப்படுகின்றன.
“சங்கிலித் தொடர்பு” செயல்பாட்டிற்குப் பல உதாரணங்களை நாம் அறிந்திருக்கின்றோம். அதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான “சங்கிலித் தொடர்பு” உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள்!
ஓர் உறுப்பு ஆரோக்கியமாக இருக்கும் போது, இதர உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டாலும் ஆரோக்கியமான உறுப்பால் பாதிக்கப்பட்ட உறுப்பானது பாதுகாக்கப்படுகின்றது!
அதே போன்று, ஓர் உறுப்பில் பாதிப்பு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட அந்த உறுப்பால் ஆரோக்கியமாக உள்ள உறுப்பும் பாதிக்கப்படுகின்றது!! இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு உறுப்பையும் கவனமாகப் பாதுகாப்போம்; ஆரோக்கியமாய் வாழ்வோம்!!!