Homeஉடல் நலம்முதுமையில் எய்ட்ஸ் வருவது உண்மையா?

முதுமையில் எய்ட்ஸ் வருவது உண்மையா?

பொதுவாக எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற சென்றுவிடுகிறார்கள். நான் சந்தித்த ஒரு எய்ட்ஸ் நோயாளியைப் பற்றிக் கூறுகிறேன்.

தான் செய்யாத குற்றத்திற்காக மனம் வேதனையுற்ற ஒரு முதியவரின் சோக சம்பவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சுவலி என்று ஒரு பெரியவர் ஒருவர் எனது கிளினிக்கிற்கு வந்தார். அவரைப் பரிசோதித்ததில் மாரடைப்பு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு தக்க சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன்.

சற்று குணம் அடைந்தபின் ஆஞ்சியோகிராம் செய்ததில் அவருக்கு இரண்டு ரத்தக் குழாய்களில் அடைப்பு எற்பட்டது கண்டுபிடிக்கப்பட, இதய அறுவை சிகிச்சைக்கு முதலில் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

அப்பொழுதுதான் அவருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டது. அவருடைய ரத்தப் பரிசோதனையில் எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது. அதை அவருக்குத் தெரிவிக்க அவர் மிகவும் நிலைகுலைந்துப் போய் விட்டார்.

‘நான் என்ன பாவம் செய்தேன்! எனக்கு இப்படிப்பட்ட ஒரு வியாதியா!’ என்று மனம் குன்றிப் போனார்.

மருத்துவர்கள் அவரிடம், “உங்களுக்கு தக்க பாதுகாப்போடு அறுவை சிகிச்சை செய்ய முடியும் மற்றும் எய்ட்ஸ்க்கும் மருந்து கொடுத்து, அதன் வீரியத்தைக் குறைக்க முடியும்’ என்று கூறினார்கள்.

ஆனால், அவர் அறுவை சிகிச்சைக்குச் சம்மதிக்கவில்லை. ‘‘நான் ஆபரேஷன் செய்து பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் எய்ட்ஸ் நோய் என்னை அதுவரை விட்டு வைக்காது’ என்று கூறிவிட்டு, மறுபடியும் என்னிடம் வந்தார்.

அவரிடம் விவரமாகப் பேசினேன். ‘‘எய்ட்ஸ் என்பது உடல் உறவால் மட்டுமன்றி வேறு பல காரணங்களினாலும் வரலாம்’ என்று கூறினேன். அப்பொழுது அவர் முகம் மின்னல் அடித்தாற்போல் பிரகாசித்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்துக்கு ஆளானார்.

READ ALSO: இதுதான் மனநல நோய்க்கு காரணம்!

தலையில் பலத்த அடி, உடல் முழுவதும் ரத்தக்கசிவு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு பாட்டில் ரத்தம் செலுத்தப்பட்டது.

அந்த ரத்தத்தில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் இருந்திருக்க வேண்டும். அதனுடைய விளைவு இப்பொழுது தெரிகிறது.

நான் அவரிடம், ‘‘எய்ட்ஸ் நோயின் வீரியத்தைக் குறைக்க பல மருந்துகள் வந்துள்ளதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளுவது நல்லது’ என்றும் எடுத்துரைத்தேன்.

அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. ‘ ‘சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், மரணம் உறுதி, வேண்டவே வேண்டாம். நான் செய்யாத குற்றத்திற்குத் தண்டனையா?’’ என்று கூறிவிட்டுச் சென்றவர்தான்.

மறுபடியும் அவர் என்னிடம் வரவே இல்லை. வயதானாலும் சில ஆண்கள் வழிதவறிச் செல்கிறார்கள். இதனால் இவர்களுக்கு எய்ட்ஸ் நோய் வர வாய்ப்பு உள்ளது.

சுத்தம் செய்யப்படாத ஊசிகள் மூலம் மருந்து போட்டுக்கொள்வதால் எய்ட்ஸ் வரலாம். பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை முதியவர்களுக்குச் செலுத்துவதன் மூலம் இந்த நோய் எளிதல் பரவலாம்.

முக்கியமாக, அறுவைசிகிச்சையின் மூலம் ரத்தம் அதிகமாக வெளியேறும் நேரத்தில், ரத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். உதாரணம்: இதய அறுவைசிகிச்சை, எதிர்பாராத விபத்து.

இன்றைய நடுத்தர வயதுடைய ஒருவருக்கு எய்ட்ஸ் பாதிக்கப்பட்டால் அவருடைய நோயின் அறிகுறி அவர் முதுமை அடையும்போதுதான் (அதாவது சுமார் பத்து ஆண்டுகள் கழித்து) தெரியும்.

ஆகவே இன்றைய நடுத்தர வயதினர் எய்ட்ஸ் வராமல் தற்காத்துக் கொள்ளாவிட்டால் பின்னாளில் எய்ட்ஸ் நோயுள்ள முதியவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

வயதானாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீறக்கூடாது. இதற்கு கட்டுப்பட முடியாதவர்கள் ஆணுறை அணிந்து நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது நல்லது.

WATCH NOW: முதுமையில் உயிரைக் காப்பாற்றும் கைத்தடி

முடிந்த அளவுக்கு ஒருமுறை மட்டுமே உபயோகிக்கக்கூடிய ஊசியை பயன்படுத்த வேண்டும். ஊசி, பிளேடு, கத்தி ஆகியவற்றை சுமார் 20 நிமிடங்கள் தண்ணீ ரில் கொதிக்கவைத்த பின்புதான் உபயோகிக்க வேண்டும்.

ரத்தம் தேவைப்பட்டால், எச். ஐ.வி. இல்லாத சுத்தமான ரத்தமே தேவை என்று வலியுறுத்த வேண்டும்.

மேற்கண்ட முறைகளை முதியவர்கள் கவனத்துடன் பின்பற்றினால் எய்ட்ஸ் இல்லாத கவலையற்ற வாழ்க்கையை முதுமையில் வாழலாம். வயதானாலும் எச்சரிக்கையாக இருங்கள். எய்ட்ஸ் நோய் வராமல் தடுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read