ரசித்து ரசித்து தன் கனவு இல்லத்தைக் கட்டினார் அவர். மகனுக்கு நம்பர் ஒன் பள்ளி, மிகச்சிறந்த கல்லூரி எனச் சேர்த்துக் கல்வி கொடுத்தார்.
பெரிய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைத்தது. அந்த வேலையே அவனுக்கு ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து மனைவியைக் கொடுத்தது. மனைவி வந்த பிறகே அப்பாவின் ஸ்டேட்டஸ் அவனை உறுத்தியது.
நாளடைவில் தங்கள் வாழ்க்கைமுறைக்குப் பொருத்தமில்லாமல் இருக்கும் வயதான தந்தையை, வீட்டுக்குப் பின்னால் ஸ்டோர் ரூமாக இருக்கும் என நினைத்துக் கட்டிவைத்த அறைக்குத் துரத்தினான்.
தாத்தாவுக்குத் தினமும் சாப்பாடு கொண்டுபோய்க் கொடுப்பது பேரன்தான். பயன்படுத்தித் தூக்கி எறிகிற பேப்பர் தட்டில் பழைய சாதத்தை வைத்து வேண்டா வெறுப்பாகக் கொடுப்பார்கள்.
ஒருநாள் தங்கள் மகனின் விளையாட்டு அறையில் ஏராளமான பேப்பர் தட்டுகள் கிடப்பதை அவன் பார்த்தான், விசாரித்தான்.
‘‘நீ இப்போ உன் அப்பாவுக்குச் சாப்பாடு தருவது போல, நான் பெரியவன் ஆனதும் உனக்குத் தரணும் இல்லையா? அதற்காகத்தான் தட்டு சேர்க்கிறேன்’’ என அந்தக் குழந்தை சொல்ல, அதிர்ந்து போனான் அவன்.
இப்படி பேப்பர் தட்டுகள் சேகரிக்கப்படுகிற இல்லமாக யாருடையதும் இருந்துவிடக்கூடாது. குடும்ப மகிழ்ச்சியைவிட, தன் மனைவி, மக்களின் மகிழ்ச்சியையே பெரிதாக இளைஞர்கள் நினைக்கிறார்கள்.
இதில் பொதுநலம் சுருங்கிச் சுயநலம் பெரியதாகத் தலைதூக்க ஆரம்பி த் து விடுகிறது . இச்சமயத்தில் முதியோர்களின் நலன் காணாமல் போய்விடுகிறது.
ரியல் எஸ்டேட் துறையின் அசுர வளர்ச்சியினால், கிராமங்களில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு கிரவுண்டு நிலங்கள் கூட, கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை ஏறியுள்ளது.
‘‘வயதான காலத்தில் அந்தச் சொத்து பெரியவர்களுக்கு எதற்கு? அதை விற்றுப் பங்குபோட்டுக் கொள்ளலாம்’’ எனமகன்களும் மகள்களும் பேராசைப்படுகிறார்கள்.
Click to Read: முதுமையில் மகிழ்ச்சியாக வாழ பத்து கட்டளைகள்!
பெற்றோர்களின் சொத்துக்கு ஆசைபட்டு, அதனால் ஏற்படும் மனக்கசப்பால் அவர்களைக் கொடுமைப்படுத்தவும் இளைஞர்கள் தயங்குவதில்லை.
இந்த நாகரிகமான, வேக ம் நிறைந்த வாழ்க்கையில் இளைஞர்கள் தங்களின் குடும்பத்தைப் பற்றிக்கூட நினைப்பதற்கு நேரமி ல்லாமல் இருக்கும் பொழுது, பெற்றோர்களின் உண்மை நிலையை அறிய அவர்களுக்கு ஏது நேரம்?
இளைஞர்கள் முதியோர்களை வெறுத்தாலும், ஒதுக்கினாலும், முதியோர்கள் ஒவ்வொரு நிமிடமும் இளைஞர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த இளைஞர்களுக்கு எப்படித் தெரியும்?
இன்றைய இளைஞர்களும் முதுமை அடையும்போதே இந்த வலி அவர்களுக்குப் புரியும். ஆனால் கடந்துபோன ரயிலுக்காக பிளாட்பாரத்தில் யாரும் காத்திருப்பதில்லையே!
இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பொதுவாகக் குடும்பங்களில் முதியோர்களின் எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவு. அவர்களிடம் பேசிப் பாருங்கள்.
அவர்கள் கேட்கும் எதற்கும் நீங்கள் ஏராளமான பணத்தைச் செலவிட வேண்டிய அவசியமில்லை என்பது புரியும்.
உண்மையான அன்பு, தன்னலமற்ற பாசம், தனக்குப் பிடித்த குறைந்தளவு உணவு, நேரம் கிடைக்கும் போது குடும்பத்தாரிடம் அன்பாக, அரவணைப்பாகப் பேசும் சந்தோஷம் என்று எல்லோராலும் எளிதாகக் கொடுக்க முடிந்த விஷயங்களையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பெரியவர்களின் திருமணநாள், பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் ஒரு சிறிய பரிசைக் கொடுத்து இளைஞர்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தலாம்.
இதுபோன்ற சின்னச்சின்ன செயல்கள் பெரியவர்களின் மனத்துக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். குடும்பத்தில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், முதியோர்களைத் தம்மோடு வைத்துக்கொள்ள வேண்டும்.
தம்மை ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கி உயர்நிலைக்குக் கொண்டுவந்த பெற்றோரைப் புறக்கணிப்பது நியாயமாகாது. வீட்டில் முதியோர் இருப்பது ஒரகுடும்பத்தின் பாதுகாப்புக்காக (moral support) என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
Click to Watch: முதுமையை அனுபவித்து வாழ்வது எப்படி?
அது இளைஞர்களுக்குச் சமுதாயத்தில் ஒரு கௌரவத்தைக் கொடுக்கும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்குச் சமுதாயத்தில் நல்ல மதிப்பு. வீட்டுக்கும் ஒரு பாதுகாப்பு. பேரக்குழந்தைகளுக்கு எப்போதும் கேட்கக் கிடைக்கும் தாத்தா, பாட்டிகளின் புராண, இதிகாசக் கதைகளைவிட வேறென்னவேண்டும்.
இந்தக் கதைகளில்தான் ஆயிரமாயிரம் வ ா ழ்க்கை மு றைக ள் , வாழ்வியல் பாடங்கள் கிடக்கின்றன. இவையே குழந்தைகளை நல்ல மனிதனாக வார்த்தெடுக்க உதவும். ஆகவே, பெரியவர்களின் அனுபவ அறிவை இழந்துவிடாதீர்கள்.
பெரியவர்களின் அனுபவம், இளைஞர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்போது அதை ஏன் உதாசினப்படுத்த வேண்டும்?. வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும்.
இது எல்லோருக்கும் தெரிந்ததே. இன்றையய இளைஞரே நாளைய முதியவர். இதை இளைய தலைமுறையினர் மறந்துவிடக்கூடாது.
‘‘எவன் ஒருவன் தன் இளம்வயதில் முதியோரைப் பேணிப் பாதுகாக்கின்றானோ, அவனுக்கு வயதாகும்போது கவனித்துக்கொள்ள இளைஞர் ஒருவரைக் கடவுள் நியமிக்கிறார்’’ என்கிறது வேத நூல். இதை த் தினமும் ஒருமுறை நினைத்துக் கொள்ளுங்கள்… வாழ்வு சிறக்கும்!