60 வயதைத் தாண்டிய முதியோர்கள் பலர் நீண்ட காலம் வாழ்கின்றனர். ஆனால், ‘அவர்கள் மருந்து சாப்பிடும் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கிறார்கள்’ என்கிறது ஓர் ஆராய்ச்சி. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் முதியோர் மத்தியில் இந்த ஆய்வு நடந்தது. ‘பல மாத்திரைகள் சாப்பிட்டால், நோயும் வலியும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அளவுக்கு அதிகமான மருந்துகளை சாப்பிடுகிறார்கள்’ என்பதை இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது.
வெவ்வேறு பிரச்னைகளுக்காகத் தனித்தனி ஸ்பெஷலிஸ்ட்களைப் பார்க்கும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாத்திரைகள் தருகிறார்கள். ஒருவர் தரும் மாத்திரையை, இன்னொருவர் தரும் மாத்திரைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் ஆபத்தும் உள்ளது. மருந்து எழுதும்போது, ‘ஏற்கனவே ஏதாவது மருந்து சாப்பிடுகிறார்களா’ எனப் பல டாக்டர்கள் கேட்பதில்லை. நோயாளிகளும் சொல்வதில்லை. இந்தக் குழப்பத்தால், சிலர் தினமும் 15 மாத்திரைகள் வரைகூட சாப்பிடுகிறார்களாம். அதே மருந்துச்சீட்டை பத்திரமாக வைத்திருந்து, மாதக்கணக்கில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோரும் உண்டு. தேவையற்ற மாத்திரைகளால் உடல்நலமும் கெடும். வீண் செலவு வேறு. கவனமாக இருக்க வேண்டும்.
வாக்கிங்கில் கவனம் வேண்டும்!
பூங்காவில் வாக்கிங் செல்ல வேண்டும் என ஏன் வற்புறுத்துகிறார்கள் தெரியுமா? பசுமையான சூழலில் நடப்பது நல்லது, நல்ல காற்று இருக்கும், வாகனங்கள் தொந்தரவு இருக்காது.
குஜராத் மாநிலம் வதோதரா அருகே சாலையில் வாக்கிங் சென்ற மூன்று முதியவர்கள்மீது கார் மோதி, அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலைகள் வாக்கிங் செல்வதற்கு பாதுகாப்பான இடம் அல்ல. பூங்காவுக்குச் செல்லுங்கள். சாத்தியமில்லை என்றால், வீட்டு மொட்டைமாடி கூடப் பாதுகாப்பானதே!
சாலைகள் வாக்கிங் செல்வதற்கு பாதுகாப்பான இடம் அல்ல. பூங்காவுக்குச் செல்லுங்கள். சாத்தியமில்லை என்றால், வீட்டு மொட்டைமாடி கூடப் பாதுகாப்பானதே!