H3N2 காய்ச்சல் பற்றி அறிவோம்… தெளிவோம்!
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நோய்ச்சூழலே புதிரானதாக இருக்கிறது. முன்பு சாதாரணமாக வந்து செல்லும் ஜலதோஷமும் வைரஸ் காய்ச்சலும்கூட, இப்போது கடும் வீரியத்துடன் தாக்குகின்றன. மழைக்காலம், பனிக்காலம் இரண்டுமே முடிந்திருக்கும் இந்த நேரத்திலும் தாக்கும் புதிய் காய்ச்சலால் மூச்சுத்திணறலும் இருமலும் கடுமையாக ஏற்படுகின்றன.
இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள பல நோயாளிகளின் மாதிரிகளை ஆராய்ந்ததில், மூன்று மாதங்களாகவே பரவலாக பலரிடம் காணப்படும் இந்தக் காய்ச்சல் A (H3N2) வகைத் தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் இந்த வைரஸால்தான் ஏற்பட்டு வருகின்றன. `ஹாங்காங் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும் இந்தக் காய்ச்சலால் இப்போது ஆயிரக்கணக்கோனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
H3N2 என்கிற பருவகால இன்ஃபுளூயன்ஸா என்பது ஒருவகையான கடுமையான சுவாச நோய்த்தொற்று. இன்ஃப்ளூயன்சா – ஏ வைரஸின் திரிபு வகையான H3N2 வைரஸ், பருவ கால மாற்றம் காரணமாக அதிக அளவில் பரவிவருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (ICMR) ஆய்வுகளில் H1N1 வகையைவிட இது அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல… உலகெங்கும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் மார்ச் மாத இறுதி முதல் குறையும் என எதிர்பார்ப்பதற்காகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரலாறு உண்டு!
H3N2 என்பது ஃப்ளு வகை வைரஸ் ஆகும். இன்ஃப்ளுயென்ஸா என்பதைச் சுருக்கமாக ஃப்ளு என்கிறோம். இதில் A,B,C,D என நான்கு வகைகள் உள்ளன. A வகையில் உள்ள இரண்டு முக்கிய வைரஸ்கள் H1N1 மற்றும் H3N2 ஆகியவையே. 2009-ம் ஆண்டு H1N1 பரவல் அதிகமாக இருந்தது. இப்போது H3N2 வகை வைரஸ் பரவல் அதிகமாகியுள்ளது.
கடந்த 1918-ல் உலகம் முழுமைக்கும் பரவும் பெருந்தொற்றாக இன்ப்ளூயன்சா ஏ வகை பெருந்தொற்று பரவியது. இது H1N1 என்றும் ஸ்பானிஷ் ஃப்ளூ என்றும் கூறப்பட்டது. கொரோனா வைரஸ் தனது ஸ்பைக் புரதத்தில் மாற்றங்களை அடைந்து திரிபுகளை உருவாக்கிக்கொண்டே செல்வதுபோலவே இன்ஃப்ளூயன்சா வைரஸும் ஒவ்வோர் ஆண்டும் பருவகாலக் காய்ச்சலாகப் பரவும்போது உருமாறிக்கொண்டே செல்கிறது. இதை ANTIGENIC SHIFT & DRIFT (எதிர்ப்புத் திறன் பெயர்வு & பிறழ்வு) என்று குறிப்பிடுகிறோம். ஒவ்வொரு சீசனிலும் புதிய மாற்றத்துடன் வருவதால், அடிக்கடி காய்ச்சல், சளி தொற்று ஏற்படுகிறது.
2009-ம் ஆண்டு பன்றிகளில் பரவி வந்த H1N1 வைரஸ் தனக்குள் சில மாற்றங்களைச் செய்து மனிதர்களுக்குப் பரவியது. இதற்கு ‘பன்றிக் காய்ச்சல் வைரஸ்’ (SWINE FLU) என்று பெயர் வந்தது. இப்போது வரை பன்றிக்காய்ச்சல் தொற்று உலகெங்கும் பரவி குறைகிறது.
H3N2 வைரஸ் 1968-69 ஆண்டுகளில் ஹாங்காங்கில் முதல் முறையாக கொள்ளை நோயாகப் பரவியது. குறிப்பாக, அந்தக் காலகட்டத்தில் பிறந்த நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தால், அவர்களுக்கு மீண்டும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படாது. அவர்களுக்கு காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளும் மிகக்குறைவு.
கொரோனாவுக்குப் பிறகு, இதுபோன்ற பலவகை வைரஸ்கள் உருமாறி இன்ஃப்ளுயென்சா வைரஸாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும்போது, இதுபோன்ற வைரஸ் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.
அறிகுறிகள் என்ன?
- தொடர் இருமல், காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் ஆகியவை இந்தக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்.
- குமட்டல், தொண்டைப் புண், உடல் வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகளும் உண்டு. இது ஒரு வாரம் வரை நீடிக்கும்.
- ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும்போது நான்கைந்து தினங்களில் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும்.
- நுரையீரலில் தொற்று ஏற்பட்டு அதன் பகுதிகளில் வைரஸ் ஆக்கிரமிக்கும்போது ஆக்சிஜன் கொள்முதல் குறைந்துபோகும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும்.
சோதனை என்ன?
கொரோனா தொற்று போலவே இந்த வைரஸையும் தொண்டை மற்றும் நாசித் தடவல் எடுத்து ஆர்.டி.பி.சி.ஆர் முறை மூலம் உறுதிப்படுத்த முடியும். இப்போது டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே இருப்பதால் மருத்துவர் ஆலோசனையின் அடிப்படையில் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தானாகவே குறையும்… இருந்தாலும் கவனம் தேவை!
இது மற்ற சீசனல் வைரஸ் தொற்றுகள் போல தானாகவே குணமாகும் தன்மையுடையதுதான்.
ஆனால், இப்போது இந்தக் காய்ச்சல் சற்று தீவிரத்தன்மையுடன் காணப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளிடம் 102 டிகிரிக்கு மேல் அதிக காய்ச்சலாக வெளிப்படுகிறது. காய்ச்சல் குணமான பிறகும்கூட ஒரு வார காலத்துக்கு தொண்டை வலி, சோர்வு, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். நீரிழிவாளர்கள், குழந்தைகள், சீனியர் சிட்டிசன்கள் போன்றவர்களும், நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
- காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ, காய்ச்சலின் அளவு அதிகமாக இருந்தாலோ மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
- மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தாலோ, ஆக்சிஜன் அளவு 90%க்கு கீழ் குறைந்தாலோ உடனே மருத்துவமனைக்குச் செல்லவேண்டும்.
சுய மருத்துவம் கூடாது!
- மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரை, மருந்துகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். சுய மருத்துவம் தவறு. குறிப்பாக குழந்தைகளுக்கும் சீனியர் சிட்டிசன்களுக்கும் சுய மருத்துவம் ஆகாது.
- இது வைரஸ் காய்ச்சல் என்பதால் அறியாமல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் பலனில்லை.
- காய்ச்சலைத் தொடர்ந்து வேறு பாக்டீரியா நோய்த்தொற்றும் ஏற்படும் சிக்கலும் இதில் உண்டு. நிமோனியா போன்ற நோய்த்தொற்றுகூட ஏற்படலாம். வறட்டு இருமலாக இருக்கும்வரை அது வைரஸ் தொற்றுதான், இருமலுடன் சேர்ந்து சளி வரத் தொடங்கும்போது, அது பாக்டீரியா நோய்த்தொற்றாகவும் இருக்கலாம். அதனால்தான் மருத்துவரின் ஆலோசனை அவசியமாகிறது.
- குழந்தைகள் ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சிறுநீர் கழிப்பதை உறுதிசெய்ய வேண்டும். இல்லையென்றால் உணவு/திரவம் உட்கொள்ளும் திறன் குறைந்துள்ளது என்று பொருள். அதனால், உடனே மருத்துவமனையில் சேர்த்து ரத்த நாளம் வழியாக திரவங்கள் வழங்கப்பட வேண்டும்.
சிகிச்சை என்ன?
உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது இந்தக் காய்ச்சலை முற்றிலுமாகக் குணப்படுத்திவிடலாம். ஆனால், எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள், சுவாசப் பிரச்னை போன்றோருக்கு கூடுதல் கவனம் தேவை. அதனால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்
- மருத்துவரின் அறிவுரையோடு பாராசிட்டமால், ஆன்டி-வைரல் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சுடுநீர் குடிப்பது, தொண்டைக்கு இதமாக வெந்நீரால் வாய் கொப்பளிப்பது போன்றவைநோயின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
- காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது குளிர்ந்த நீரில் உடல் முழுவதும் ஒத்தி எடுப்பது வெப்பத்தைக் குறைக்க உதவும்.
- குடிநீரை நன்றாகக் காய்ச்சிப் பருக வேண்டும்.
உணவுமுறை என்ன?
- நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கஞ்சி, இளநீர், ஆப்பிள், மாதுளைப் பழச்சாறுகள், ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Solution) திரவக்கரைசல் சேர்த்துக் கொள்ளலாம்.
- ஓரளவு குணமானதும் இட்லி, இடியாப்பம், ரசம், சூப், மஞ்சள் மிளகு கலந்த பால் ஆகியவை ஒகே.
தொற்றைத் தடுக்கும் வழிகள்
- கொரோனோவுக்கு அணிந்ததுபோலவே இதற்கும் முகக்கவசம் (மாஸ்க்) அணிவது அவசியம்.
- கைகுலுக்குவதற்குப் பதிலாக கைகூப்பி வணக்கம் வைக்கலாம்.
- கைகளை ஐக்கடி சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும்.
நெரிசல் மிகுந்த இடங்களைத் தவிர்ப்பது நல்லது. - சத்தான உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*மருத்துவர் பரிந்துரைத்தால் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
தடுப்பூசி உண்டா?
H1N1-க்கு எதிராக அப்டேட் செய்யப்பட்ட தடுப்பூசி (Tetravalent) ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் இதை ஆண்டுதோறும் செலுத்திக்கொள்கிறார்கள். இந்தியாவிலும் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு H1N1 தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
அதேபோல வீரியமாக உள்ள மற்ற ஃப்ளு வைரஸ்களுக்கு ஏற்ற தடுப்பூசிகளும் வெளியாகும். இது நான்கு வகையான ஃப்ளு வைரஸ் தொற்றுகளிடமிருந்து பாதுகாப்பு தரும். தடுப்பூசி செலுத்திய 15 நாள்களில் நம் உடலில் ஏற்படும் இந்த எதிர்ப்பாற்றல் ஓராண்டுக் காலம் நீடித்திருக்கும்.