உலகம் எத்தனையோ தொழில்களால் இயங்குகிறது என்றாலும், உழவே முதன்மையான தொழில். காரணம், உணவுதான் நமக்கு முதன்மையான தேவை. அதனால்தான் ‘உழந்தும் உழவே தலை’ என்று பழந்தமிழ் பாடியது. இந்தியாவின் உணவு அமைச்சராக வருபவர் நிம்மதியாக இருந்ததாக வரலாறே இல்லை. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்று பாராட்டிய வள்ளுவர், பிற தொழில் புரிவோரை ‘தொழுதுண்டு பின் செல்லுபவர்’ என்று ஒரு குட்டு குட்டி இருக்கிறார்.
விவசாயம் வணங்கத்தக்கது. ‘எந்தத் தொழில் செய்தால் என்ன… பணம் பண்ணியவன் பெரியவன்’ என்கிற இன்றைய சிந்தனையை இகழ்ந்து, ‘ஏழையாய் இருந்தாலும் விவசாயி பெரியவன்’ என்று உரக்கக் கூவுகிறேன் நான். மண் மாதவின் மணி வயிற்றில் மணி மணியாய் நெல்லும் கோதுமையும் விளைவிக்கும் விவசாயியே விவேகமானவன், விவரமானவன். அவனைக் கும்பிடுவோம்.
உணவே உலகின் மூலாதாரம். உடல் இயங்கத் தேவையான சகல சக்திகளையும் தருகிற உணவு, உடலுக்கு மூலாதாரம். அதுவே உலகத்தின் ஜீவாதாரம்.
சோபாவில் உட்கார்ந்திருக்கும் பணக்காரனின் காலில் முதுகு தேய்த்து, அவன் தன் கழுத்தை சொரிந்து விடுவதைக் கண்மூடி ரசிக்கும் பூனைக்குட்டி மாதிரி புலிக்குட்டிகள் கழுத்தை நீட்ட, கையால் சொரிந்து விடுகிறாள் ஒரு காரிகை. புலியும் சிங்கமும் எப்படி இப்படி அடங்கி ஒடுங்கி நடக்கின்றன? இது எப்படி சாத்தியம் ஆயிற்று?
டிஸ்கவரி சேனலில் ஆச்சர்யமான ஒரு காட்சியைப் பார்த்தேன். ‘உனக்கு உண்மையான அன்பிருக்குமானால் சிங்கத்தின் வாயிலிருந்தும் முத்தம் பெற முடியும்’ என்ற பொன்மொழியை ஒரு பெண்மணி மெய்யாக நடத்திக் காட்டினார். ஒரு சிங்கம் கட்டிப் பிடித்து, கொஞ்சி விளையாடி, கால்களால் அந்தப் பெண்மணியின் கழுத்தை அணைத்து முத்தம் கொடுக்கிறது. எப்படி? எப்படி இது முடிகிறது. கழுத்தில் சங்கிலி பூட்டி அல்சேஷனையும் பொமரேனியனையும் வாக்கிங் கூட்டிப் போகும் அம்மணிகள் பாணியில் சிங்கத்தையும் புலியையும் பெல்ட் கட்டி வாக்கிங் கூட்டிப் போகிறார்கள். எப்படி இது சாத்தியமாகிறது?
சோபாவில் உட்கார்ந்திருக்கும் பணக்காரனின் காலில் முதுகு தேய்த்து, அவன் தன் கழுத்தை சொரிந்து விடுவதைக் கண்மூடி ரசிக்கும் பூனைக்குட்டி மாதிரி புலிக்குட்டிகள் கழுத்தை நீட்ட, கையால் சொரிந்து விடுகிறாள் ஒரு காரிகை. புலியும் சிங்கமும் எப்படி இப்படி அடங்கி ஒடுங்கி நடக்கின்றன? இது எப்படி சாத்தியம் ஆயிற்று?
உணவுதான்… கூண்டில் அடைத்து வேளா வேளைக்கு வேண்டிய அளவு இறைச்சியை வீசும் எஜமானியைப் பார்த்தால் சிங்கமும் புலியும்கூட சிநேகம் காட்டுகின்றன. நாய் மாதிரி அவை வாலை ஆட்டவில்லை என்பது மட்டும்தான் குறை!
உலகம் முழுவதும் உணவுப் பிரச்னை தீர்க்கப்பட்டால் பகையும் சண்டையும் பறந்தே போய்விடும். ஒரு வாளியில் மாமிசத் துண்டுகளைத் தூக்கிக் கொண்டு எஜமானி தொலைவில் வருவதைப் பார்க்கும்போதே பரபரத்துத் தாவும் சிங்கத்தையும் புலியையும் பார்த்தால் ஓர் உண்மை புரியும். பசி எந்த அழிவையும் செய்யும்; உணவு எந்தப் பகையையும் அழிக்கும்.
இப்படி உணவைக் கொண்டாடும் உன்னத விழாவே பொங்கல். இஞ்சிக்கும், மஞ்சளுக்கும், நெல்லுக்கும், கரும்புக்கும், அரிசிக்கும், கோதுமைக்கும் நடத்தும் பாராட்டு விழாவே பொங்கல். இங்கு மட்டுமல்ல… இந்தியா முழுவதும் இந்த விழா வெவ்வேறு பெயரில் வேடம் கட்டி வருகிறது. பொங்கல் தமிழர் திருநாள் மட்டுமல்ல; இந்தியர்களின் திருநாள்.
பஞ்சாப் மாநிலத்தில் ‘ஸோஹிரி’ என்று இந்தத் திருவிழாவுக்குப் பெயர். இனிப்பு கலந்த அரிசி, சோளப்பொரி ஆகியவற்றை நெருப்பில் இட்டு ஆடிப் பாடும் திருவிழாவாக அது கொண்டாடப்படுகின்றது.
குஜராத் மாநிலத்தில் பொங்கல் ஒரு புனித நாள். ‘புதுப்பாத்திரங்களை அன்று பயன்படுத்தினால் வருடம் முழுவதும் புதுப்பாத்திரங்கள் பெருகும்’ என்று நம்புகிறார்கள். அதைவிட ஆச்சரியம்… இந்தப் புனித நாளில் வீட்டு மாடியில் ஏறி நின்று, வயது வித்தியாசம் இல்லாமல் பட்டம் விட்டுக் கொண்டாடுவார்கள்.
ஆந்திராவில் நம்மைப் போலவே பால், பொங்கல், கரும்பு என்று விழா நடக்கிறது. மகாராஷ்டிராவில் கொஞ்சம் வித்தியாசம்… வண்ண வண்ண தானிய மணிகளை அன்று ஒருவரை ஒருவர் பார்க்கும்போது பரிமாறிக் கொண்டு மகிழ்கிறார்கள்.
வட இந்தியாவில் ‘மகர சங்கராந்தி’ என்று பொங்கல் புதுப் பெயர் பெறுகிறது. வயதில் முதிர்ந்த சுமங்கலியின் ஆசியைக் கன்னிப் பெண்களும் இளம் சுமங்கலிகளும் பெறுகிற பண்டிகையாகப் பொங்கல் அங்கு மணக்கிறது. சங்கராந்தி அன்று வழிபட்ட புது மஞ்சள் கிழங்கை மூத்த சுமங்கலிகளிடம் கொடுத்து, தங்கள் நெற்றியில் மஞ்சளால் கீறி மங்கலப்படுத்துகிறார்கள்.
‘காணும் பொங்கல்’ என்பதை உற்றார், உறவினரைக் காணும் பொங்கல் என்று நாம் கொண்டாடுகிறோம். சகோதரிக்குச் சீர் அனுப்பும் பாசமலர் வைபவம் நமக்கு. சில பகுதிகளில் ஜீவசமாதி ஆன சித்தர்களை வணங்கும் சிறப்பு நாளாக இது திகழ்கிறது.
சூரியன் தனுர் ராசியிலிருந்து பெயர்ந்து மகர ராசியில் நுழையும் மகரஜோதி தரிசனமே மகர சங்கராந்தி என்பது ஜோதிடப் பொங்கல். வட மாநில மக்கள் மகர சங்கராந்தியை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். பொம்மை கொலு வைத்து நவராத்திரி மாதிரி இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். காஷ்மீரில் கூட அறுவடை திருநாள் ‘கிச்சடி’ என்ற பெயரில் அமர்க்களப்படுகிறதாம்! பீகார் மக்கள் ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை நடத்தி பாலரிசிப் பொங்கல் வைக்கிறார்கள். அசாமிலும் மணிப்பூரிலும் ‘போஹாலி பிஹ§’ என்று பொங்கல் நடக்கிறது. அறுவடைக்காக வயல்களில் கூரை கட்டி தங்கி, அறுவடை முடிந்ததற்கு அடையாளமாக அந்தக் கூரையைக் கொளுத்தி போகியும் பொங்கலும் அங்கு நடக்கின்றன.
எப்படியோ, பொங்கல் ஓர் உணவுத் திருவிழா… நன்றியுணர்வுள்ள நல்ல விழா… மாடும் மனித ம் கடவுளும் இணைந்த கலை விழா. காலில் சதங்கை கட்டி ஆடும் பெண்மணிகளை ரசிக்கும் மனித குலத்தில், தலையில் சதங்கை கட்டி ஆடும் நெல்மணிகளை மதிக்கும் சமூக விழா பொங்கல். இந்த நாளில் வீட்டிலும் நாட்டிலும் மங்களம் பொங்க மனமார வாழ்த்துவோம்.
முதியவர்களுக்கு இது இளையவர்களை ஆசீர்வதிக்கும் பண்டிகை. காணும் பொங்கலில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடுவதே பேரழகு. உறவுகளின் உன்னதம் போற்றும் நம் பாரம்பரியக் கொண்டாட்டத்தில் இணைவோம். நம்பிக்கையை நம்மைச் சுற்றிப் பரப்புவோம்.
(பேசுவோம்…)