Homeமன நலம்54 வயது சிங்கப் பெண்மணி வித்யாவின் மன தைரியம்!

54 வயது சிங்கப் பெண்மணி வித்யாவின் மன தைரியம்!

புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணிபுரியும் வித்யாவுக்கு வயது 54. பொருளாதாரச் சிக்கல்கள் ஏதும் இல்லை. ஆனால், பாருங்கள்… வித்யாவின் 84 வயது அப்பாவைக் கவனித்துக்கொள்ள அவரை விட்டால் வேறு யாரும் இல்லை. உடன் பிறந்த தம்பி இருந்தும்கூட, அவர் இந்தப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்வதில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை. ‘அப்பா இருக்கிறாரா, இல்லையா என்பதைப் பற்றிக்கூட தம்பி கவலைப்படுவதில்லை’ என்று வித்யா சற்று வருத்தத்தோடுதான் சொல்கிறார்.

ஆம்… வித்யாவுக்கு இதெல்லாம் பழகிவிட்டது. அவரது வாழ்க்கையின் பெரும்பாலான காலம் போராட்டங்களாகவே கழிந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு முன் தன் அன்புக் குழந்தையின் ஒற்றைப் பெற்றோராக பெருஞ்சுமையைச் சுமக்கும் சூழலே அவருக்கு வாய்த்தது. குழந்தையையும் குடும்பத்தையும் பணியையும் ஒரு சிங்கப் பெண்ணாகக் கவனித்துக் கொண்டிருந்த அவருக்கு மூன்றே ஆண்டுகளில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவரின் அப்பா ஒருநாள் உடல்நலம் குன்றிச் சரிந்தபோது உற்றாரும் உறவினரும் ஆதரவளிக்கவில்லை. அவரின் சொந்த சகோதரனே உதவிக்கு வராதபோது மற்றவர்களைச் சொல்லி என்ன பயன்? ஆனால், வித்யா கலங்கிவிடவில்லை. அவர் ஓர் இயந்திரம் போலவே வேலை செய்தார். இன்றுவரை அப்பாவின் கடுமையான நோய்களுக்கு உரிய சிகிச்சையும் பராமரிப்பும் அளித்து வருகிறார். மருத்துவக் காப்பீடு இருப்பதாலும், மற்ற மருத்துவச் செலவுகளுக்கு அப்பாவின் சேமிப்பும் ஓய்வூதியமும் உதவுவதாலும், பெரிய பொருளாதார நெருக்கடிகள் இல்லை என்பது மட்டுமே சிறு ஆறுதல்.

அப்பாவுக்கு தொண்டைப் புற்றுநோய் முதல் இதய அடைப்பு வரை பல பிரச்னைகள். பார்கின்சன், டிமென்ஷியா, ரெட்டினல் ஹோல், செவிப்புலன் பிரச்னை, அல்சர், ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவு, MDS எனும் ரத்தப் புற்றுநோயின் ஆரம்ப நிலை… இப்படி அவருடைய உடல் பாதிப்புகளின் பட்டியல் மிக நீளம். கடந்த செப்டம்பரிலிருந்து வெர்டிகோ பாதிப்பு சேர்ந்திருக்கிறது. நடுக்கம் மற்றும் லேசான திணறலும் உண்டு. இத்தனை பிரச்னைகளும் ஒருவருக்கே இருந்தால் எவ்வளவு கஷ்டம்? அதைவிடச் சிரமமானது இத்தனை பிரச்னைகள் கொண்ட ஒருவரை தினம் தினம் பராமரிப்பதுதானே?

எந்த ஆதரவும் இல்லை என்றாலும், வித்யா தனது பணி வாழ்க்கையையும், தந்தையின் பராமரிப்பையும் எந்தக் குறையும் இல்லாமல் கையாள்கிறார். எனினும், தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவருக்கு இன்னும் ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.
‘‘வேறெங்கும் செல்லவோ, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடவோ முடியாது. நண்பர்களுடன் நேரம் செலவிட முடியாததால், என் நட்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இந்த செப்டம்பரில் அப்பா திடீரென சரிந்தபோது, ​​எந்த ஆதரவும் இல்லாமல் தனியாகவே போராட வேண்டியிருந்தது. சில நேரங்களில் விரக்தியும் ஆவேசமும் ஆட்கொள்ளும்தான். ஆனால், சட்டென அந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு இயல்புநிலைக்கு வந்துவிடுவேன். எது எப்படியானாலும் அடுத்த நொடியே அப்பாவைக் கவனிக்க வேண்டுமே?’’ என்று பிராக்டிக்கலாகப் பேசுகிறார் வித்யா

‘நோயாளியைப் பராமரிக்கும் பொறுப்பு நமக்கு வந்துவிட்டாலே நம் வாழ்க்கை முடிந்துவிடும்’ என்று பொறுப்பைத் தவிர்க்க நினைக்கும் பலருக்கு மத்தியில் ஓர் இரும்பு மனுஷியாக அன்புக்கரம் நீட்டி அப்பாவை அணைத்துக்கொள்கிறார் வித்யா.

பராமரிப்பாளர், ஒற்றைப் பெற்றோர். பன்னாட்டு நிறுவன அதிகாரி ஆகிய பொறுப்புகளில் ஏராளமான சுமைகளையும் போராட்டங்களையும் தினம் தினம் எதிர்கொண்டாலும், தன் அன்புச் சேவையின் அளவில் ஒரு துளியைக்கூட இவர் குறைத்துவிடவில்லை. ஏனெனில், வித்யா வித்தியாசமானவர் மட்டுமல்ல… ஆயிரத்தில் ஒருவர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read