பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்
நம் நாட்டின் பாரம்பரியமான கூட்டுக் குடும்ப வாழ்க்கை, கொஞ்கம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. பரபரப்பான உலகில், குடும்பத்தில் ஒருவருடன் ஒருவர் அமர்ந்து பேசி கொள்வதே அபூர்வமாக ஆகிவிட்டது. வீட்டில் இருக்கும்போது கைபேசி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி நேரத்தை விழுங்கி விடுகிறது. கருத்து பரிமாற்றம், அன்பு, பாசம், மனிதநேயம் இந்த உணர்வுகள் எல்லாம் குறைந்துவிட்டன. மேல்நாட்டு நாகரிக மோகத்தில், நம்மை அறியாமல் நாம் சென்று கொண்டு இருக்கிறோம். அது நம்முடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கையைச் சிதைப்பதற்கு வழி வகுத்துக் கொண்டு இருக்கிறது.
கூட்டுக் குடும்பம் சிதறுவதால் இளைஞர்கள் பெற்றது
⦁ இளைஞர்களுக்கு தேவையான தனிமைச் சுதந்திரம் கிடைக்கிறது. பெரியவர்களின் தலையீடு இல்லாமல் தன் விருப்பம் போல் வாழ முடிகிறது.
⦁ தனது நிதி நிலைமையை சரியாக திட்டமிட்டு அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது.
⦁ தேவையற்ற செலவுகளை (?) தவிர்க்க முடிகிறது.
கூட்டுக் குடும்பம் சிதறியதால் இளைஞர்கள் இழந்தது
⦁ கூட்டுக் குடித்தனத்தில் இருப்பது சமுதாயத்தில் ஒரு நல் மதிப்பை ஏற்படுத்தும். அது குறைகிறது.
⦁ பெரியவர் நடக்க இயலாத நிலையில் இருந்தால் கூட, அவர் வீட்டில் இருப்பதுவே வீட்டிற்கு ஒரு பாதுகாப்பு. பேரக்குழந்தைகளின் நெஞ்சில் நற்பண்புகளை விதைக்க முதியவர்களால் (பெற்றோர்களை விட) தான் எளிதில் முடியும். அவற்றை அன்பில் கலந்து இன்பமாக குழந்தைகளுக்கு ஊட்டுவதால் எளிதில் அவர்கள் மனதில் பதிந்துவிடுகின்றன. பெரியவர்களிடமிருந்து குழந்தைகள் பெறும் உண்மையான அன்பு மிகுந்த மகிழ்ச்சி குறைகிறது.
⦁ சின்ன சின்ன வேளைகளைச் செய்ய தாத்தாவும் பாட்டியும் காத்துக் கொண்டு இருக்கும் அன்பான சூழல் இல்லை.
⦁ தங்களது அனுபவம் மூலமாக நல்லது, கெட்டது பற்றி தக்க சமயத்தில் முதியவர்கள் ஆலோசனை வழங்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.
⦁ வேளைப் பளுவின் காரணமாக இளைஞர்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழித்து, தங்களின் அன்பைக் காட்ட முடியாத நிலை உருவாகிறது.
மேற்கூறிய அனைத்து செயல்களையும் கூட்டுக் குடும்பம் சிதறியதால் இளைஞர்கள் பெரிதும் இழந்து, மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணி போலித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
கூட்டுக் குடும்பம் சிதறியதால் முதியவர்கள் பெற்றது
முதியவர்களின் தனிக்குடித்தனத்தில் இரண்டு வகை. ஒன்று, உறவு நல்ல நிலையில் இருக்கும் பொழுதே தனிக்குடித்தினத்திற்கு செல்வது. சில முதியவர்கள் இதை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். யாருடைய இடர்பாடின்றி சுதந்திரமான வாழ்வு அமைகிறது. இதற்கு உடல்நலமும் நிதிவசதியும் மிக அவசியம். தன்னால் முடியாத போது மகனிடமோ அல்ல முதியோர் இல்லத்திற்கோ போய் விடலாம் என்ற மன தைரியத்தில் ஓரளவிற்கு அமைதியாக (?) வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இரண்டாவது வகையினர், உறவினர்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் வேறுவழியின்றி தனிக்குடித்தனத்தில் இருப்பவர்கள். இவர்களது தனிக்குடித்தனத்தினால் பெற்றது எதுவுமில்லை.
கூட்டுக் குடும்பம் சிதறியதால் முதியவர்கள் இழந்தது
பலவிதமான நோய்கள், தனிமை, வறுமை, பாதுகாப்பின்மை போன்ற அரக்கனோடு கடைசிக் காலத்தில் போராடிக் கொண்டிருக்கும் முதியவர்களின் நிலை மிகுந்த வேதனைக்குரியது. மதிப்பு, அன்பு, பாசம், பராமரிப்பு அனைத்தையும் இழந்து தினம் தினம் மரணத்தை எதிர்கொண்டு இறக்காமல் இறந்து கொண்டு பல முதியவர்கள் உள்ளனர். இவர்களைப் பொருத்தமட்டில் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே இழந்த நிலையில் தான் இருக்கிறார்கள்.
கூட்டுக் குடும்பம் சிதறுவதால் ஏற்படும் விளைவு
தனிமை
முதியவர்கள் தனிமையில் விடப்படுகிறார்கள். நல்ல உடல் நலம் இருக்கும் வரை தொல்லைகள் அதிகம் இல்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டால் அவர்களை கவனிக்க தக்க துணையின்றி மிகவும் அவதிப்படுவார்கள். தொடர்ந்து தனிமையில் இருப்பவர்களுக்கு மனச்சோர்வு வரவாய்ப்பு அதிகம்.
நிதி வசதி குறைவு
கூட்டுக் குடும்பமாக இருக்கும் பொழுது நிதிவசதி குறைவு ஒரு பெரும் சுமையாக தெரியாது. எப்படியாவது குடும்பம் நடந்து கொண்டே இருக்கும். ஆனால் தனித்து வந்தபின்வு நிதி ஒரு பெரும் பிரச்சனையாகி விடும். குறைந்த பென்சன், வாடகைத் தொகை, வங்கியிலிருந்து வரும் சிறு தொகை மற்றும் உறவினர்கள் கொடுக்கும் தொகையை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கும். இவை ஏதுமின்றி சுமார் 40% முதியவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் நிலை எப்படி இருக்கும்? சற்றும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இச்சூழ்நிலையில் அவர்களுக்க ஏதாவது நோய்கள் திடீரென்று வந்துவிட்டால் (உ.ம்.: மாரடைப்பு, பக்கவாதம்) அவர்களை நிதி உதவி செய்து கவனிப்பது யார்?
பாதுகாப்பின்மை
முதியவர்கள் தனியாக இருக்கும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் தான் கொலை, கொள்ளைகள் அதிகம். அதுவும் நடப்பது பகல் நேரங்களில்தான்! அவர்கள் உடமைக்கும், உயிருக்கும் யார் பாதுகாப்பு? 24 மணி நேரமும் யாராவது வீட்டிற்குள் வந்து விடுவார்களோ என்ற பயத்துடனேயே முதியவர்கள் தங்களது எஞ்சிய வாழ்க்கையை பயந்து, பயந்து கழிக்கிறார்கள்.
முடிவாக, இளைஞர்கள் கூட்டுக்குடும்பம் சிதறுவதால் அடையும் பலன்களோ மிகவும் குறைவானது தான். அவைகளும் தற்காலிகமானதே. ஆனால் பெரியவர்களோ கூட்டுக் குடும்பம் உடைவதால் இழப்பதோ மாளப் பெரிது. சுருங்கச் சொல்லின் இருவருமே இதில் தோற்றவர்கள்தான்!
கூட்டுக்குடும்பம் சிதறாமல் இருக்க…
கூட்டுக்குடும்பம் என்பது தற்பொழுது ஒரு கனவு மாதிரி இருந்து வருகிறது. இருப்பினும் சில கூட்டுக்குடும்பங்கள் சிதறாமல் இருக்கின்றன. கூட்டுக்குடும்பம் தழைத்து ஓங்க முதியோர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு என்ன என்பதை தெரிந்து கொள்வோம். கூட்டுக்குடும்பம் சிதறாமல் இருக்க இளைஞர்களும் முதியவர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
இளைஞர்களின் கடமை என்ன?
குடும்பத்தில் முதியவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் குறைவு. உண்மையான அன்பு, பாசம் தனக்குப் பிடித்த குறைந்த அளவு உணவு, நேரம் கிடைக்கும் போது பெரியவர்களிடம் அன்பாக, அரவணைப்பாக பேசுவது என்று எல்லோராலும் கொடுக்க முடிந்தவைகளைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இளைஞர்கள் இவற்றைத் தாராளமாக வழங்க முன்வர வேண்டும். பெரியவர்களின் திருமணநாள், பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் ஒரு சிறிய பரிசை வழங்கி இளைஞர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தலாம் அல்லது அவர்களின் விருப்பப்படி கோவில், பூங்கா மற்றும் கடற்கரைக்கு அழைத்துச் செல்லலாம். வீட்டிற்கு பெரியவர்கள் என்ற முறையில் அவர்களுக்கு தக்க மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க தவற வேண்டாம். இதுபோன்ற சின்னச் சின்ன செயல்கள் பெரியவர்களின் மனதுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
நாள்தோறும் இதை ஒரு முறையாவது இளைஞர்கள் மனதில் நினைத்துக் கொண்டால் முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி வெகுவாகக் குறையும்.
முதியவர்களின் பங்கு
கூட்டுக்குடும்பம் சிதறுவதற்கு முதியோர்களின் நடைமுறைகளும் ஒரளவிற்கு காரணமாக இருக்கின்றன. இளையதலைமுறையினரின் சிரமங்களை முதியோர் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னால் அந்தக் குடும்பத்துக்கு எவ்வாறு உதவமுடியும் என்று எண்ண வேண்டும். பேரப்பிள்ளையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, குழந்தைக்கு கதை சொல்வது என்று தன்னால் முடிந்த அளவுக்கு குடும்பத்துக்கு உதவ வேண்டும். இவை குடும்பத்தில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க உதவும். மகன், மருமகள், பேரக்குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் சிறிய பரிசை கொடுத்து அவர்களின் அன்பை நிலைநாட்டலாம். குடும்பப் பிரச்சனைகளில் பெரியவர்கள் தாங்களாகவே தலையிட்டு அதை பெரிதுபடுத்த வேண்டாம். பெரியவர்களின் உதவி இளைஞர்களுக்கு குடும்பத்தில் எப்பொழுதும் கிடைக்கும் என்கிற வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
முதியவர்கள் தங்களுடைய அதிகமான எதிர்பார்ப்புகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், எதிர்பார்ப்புகள் பல சமயங்களில் ஏமாற்றத்தை அளிக்கும். தான் செய்த கடமைக்காக முதுமைக் காலத்தில் பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது. பாசமும் தண்ணீரும் குற்றால அருவி போல் மேலிருந்துதான் பாயும். அதனால், எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பை விளைத்து, பாசத்தைக் காட்ட வேண்டும்.
தினமும் இரவில் உறங்குதற்கு முன்பு கீதையில் இருந்து முதியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியை தவறாமல் படித்து வந்தால் வாழ்க்கைத் தத்துவம் எளிதில் புரிந்துவிடும்.
‘நேற்று நடந்தது நன்றாகவே நடந்தது
இன்று நடப்பது நன்றாகவே நடக்கிறது
நாளை நடப்பதும் நன்றாகவே நடக்கும்’
– கீதை
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்
முதியோர் நல மருத்துவர் | ஆசிரியர் – முதுமை எனும் பூங்காற்று மாத இதழ்