Homeமன நலம்எனக்குப் பிடித்த நான்!

எனக்குப் பிடித்த நான்!


கவலைப்படாமல் இருக்க கற்றுக்கொள்வோமா!

ஏற்கெனவே நடந்து முடிந்த, எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பயிற்சி செய்தால் நிம்மதியாக நாள்களைக் கொண்டாடலாம்.

வார்த்தைக்கு இருக்கும் வலிமை!

* உங்கள் மனதில் விடாமல் ஓடிக்கொண்டிருக்கும் கவலை தரும் எண்ண ஓட்டத்தை ‘நினைப்பதை நிறுத்து’ என்று வாய்விட்டு சொல்லி மனதுக்குக் கட்டளையிட வேண்டும். ஒவ்வொரு முறை அந்த எண்ணம் வரும்பொழுதும் ‘நிறுத்து’ என்று சொல்லிவர அந்த  அடிக்கடி வந்து போகும் கவலை விஷயம் படிப்படியாக நின்று போகும் இந்த எண்ண ஓட்டமானது வேண்டாத பல கற்பனைகளை உருவாக்கிவிடும். இதனால் நடந்து முடிந்த விஷயத்துக்கு ஒரு புதிய கோணத்தை உருவாக்கிவிடும்.

பட்டியல் இடுங்கள்!

* உங்களைப் பற்றி எப்போதும் நீங்கள் பாஸிட்டிவாகவே (நேர்மறைச் சிந்தனை) நினைக்க வேண்டும். உங்களை பெருமைகொள்ளச் செய்யும் சிறப்பான விஷயங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். முதலில் உங்களைப் பற்றி உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை வரிசையாக எழுதிக் கொள்ளுங்கள். உடைந்து போகும் உணர்வு தோன்றும் நேரங்களில் இந்தப்  பட்டியலை படித்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

கற்பனை செய்வோமா? 

* நடந்து முடிந்த, நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றி பயந்து கொண்டிராமல், அதனால் ஏற்படும் விளைவுகளை நேரிடையாக சந்திப்பதாக கற்பனை செய்து கொள்ளலாம் (கற்பனைத் தோற்றம்). அந்த மாதிரி சூழ்நிலையில் நீங்கள் எப்படி இருப்பீர்கள், என்ன நடக்கும் என நினைத்துக்கொண்டே இருப்பதால் அது நிஜமாகவே நடந்தாலும் அந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படாது.

* நெகடிவாக கற்பனை செய்யாமல் எப்பொழுதும் பாசிடிவாக கற்பனை செய்துகொள்ளுங்கள். பரீட்சை நேரத்தில் பதில் மறந்து போவது, மேடையில் பேச வராமல் தடுமாறுவது என்பதற்குப் பதில் எதிர்மறையாக நினையுங்கள். கடகடவென்று பதில் எழுதுவதாகவும் பேசுவதாகவும் நினைத்துப் பாருங்கள். இது உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

* இதே போல உங்கள் உடலையும் ரிலாக்ஸ் செய்வதற்கு கற்பனை செய்து கொள்ளலாம். கற்பனையான ஒரு சூழ்நிலையை (உ-ம்: கடற்கரையில் ஹாயாக அமர்ந்து வேர்க்கடலை சாப்பிடுவதாகவும், கொடைக்கானல் மலை முகட்டிலிருந்து கீழே விரிந்திருக்கும் பனிப் படலங்களை மெய்ம்மறந்து காண்பதாகவும் எண்ணங்களை உருவாக்கி உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்யலாம்.

மூச்சுப் பயிற்சி!

* நன்கு இழுத்து மூச்சு விடுவது உங்கள் டென்ஷனைக் குறைக்கும். ஒருவர் டென்ஷனாக இருந்தால் அவரது மூச்சு தாறுமாறாக இருக்கும். அதாவது அதிகம் இறைக்கும். இதற்கு நன்கு நிமிர்ந்து அமர்ந்துகொண்டு மூச்சு விடுவதில் கவனம் செலுத்தி நீங்கள் இழுக்கும் மூச்சு உங்கள் உடலுக்குள் பரவி சக்தியாக மாறுவதாக நினைத்துப் பார்க்க வேண்டும். உங்கள் மூச்சைக் கட்டுப்படுத்தி நிதானமாக, முழுமையாக மூச்சை இழுத்து அதேபோல நிதானமாக விடவும்.

டென்ஷனைத் தூர வையுங்கள்!

* ஷவரில் குளிப்பது, வெந்நீர்க் குளியல், சூடான பானம் அருந்துவது, அமைதியான சூழலில் இசையைக் கேட்பது, மசாஜ் செய்துகொள்வது அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு செயலைச் செய்வது போன்ற நடவடிக்கைகள் டென்ஷனை உடல்/மனதிலிருந்து வெளியேற்றும்.

இப்போதே தொடங்குவோமா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read