முள் செடியிலும் அழகிய ரோஜா பூக்கிறது! | மகிழ்வூட்டும் முதுமையின் பாசிட்டிவ் சிந்தனைகள்
பத்ம ஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்
வாழ்க்கை என்பது ஓர் ஆற்றில் விடப்பட்ட படகு போன்றது. சலனமற்ற நதியில் எந்த தடையும் இல்லாமல் படகு சுகமாகப் பயணிப்பது போல சிலருக்கு வாழ்க்கை இனிமையாக அமைகிறது. சிலருக்கோ, காட்டாற்றில் சிக்கி தட்டுத் தடுமாறியபடி படகு செல்வது போல் வாழ்க்கை ஒரு கசப்பான அனுபவமாக இருக்கிறது.
எல்லா நதிகளும் கடலைச் சென்றடைவது போல, எல்லா படகுகளும் ஏதோ ஓர் இடத்தில் கரையைத் தொட வேண்டும். வாழ்வில் முதுமைப் பருவம் அப்படிப்பட்டதுதான். பல இனிய மற்றும் கசப்பு நிறைந்த நிகழ்வுகளை அனுபவித்து விட்டு, அந்த அனுபவங்களை அசை போடும் பருவம் அது.
வாழ்வின் ஏற்ற இறக்கங்களைப் பார்த்துவிட்டு பக்குவப்பட்டிருக்கும் பருவம். குடும்பத்தில் நடக்க வேண்டிய நிகழ்வுகள் மற்றும் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் ஓரளவுக்குச் செய்து முடித்துவிட்ட திருப்தியில் திளைக்கும் பருவம்.
ஒரு நாளின் இறுதியில், அதை நாம் எப்படி கடந்தோம் என்பதற்கான காரணம், நம்மிடம் தான் உள்ளது. இது முழுக்க முழுக்க நம்முடைய முடிவே!
இளைப்பாறும் இப்பருவத்தில் காலம் நிறையவே நம் கையில் இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்றபடி இந்தப் பருவத்தை திட்டமிட்டு மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். இதுவரை சென்று பார்க்காத சுற்றுலாத் தலங்கள், கோயில் மற்றும் புனிதத்தலங்களுக்குச் சென்று வரலாம். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று பேசி மகிழலாம். பேரன், பேத்திகளோடு கொஞ்சி மகிழலாம். இன்முகத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மனநிறைவு கொள்ளலாம்.
தங்களுடைய பிரச்னைகளுக்கு உடலில் தோன்றும் நோய்களையும், மற்றவர்களையும் காரணம் காட்டி முதுமையை ஒரு துன்பம் நிறைந்த பருவமாகக் கருதிவிடக் கூடாது. எந்தப் பருவத்தில்தான் தொல்லைகள் இல்லை? ‘அந்த நாட்கள் போல வருமா’ என்ற எண்ணத்துடன்தான் எல்லா பருவங்களையும் நாம் கருதுகிறோம்.
குழந்தைப் பருவத்தில் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை. இளமைப் பருவத்தில் படிப்பு, வேலை போன்ற தொல்லைகள். வாழ்க்கைப் பருவத்தில் பொருளாதாரம் மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்னைகள். முதுமைப் பருவம் மட்டும் எப்படி இதற்கு விதிவிலக்காக இருக்க முடியும்?
இப்பருவத்தில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க 50 வயதிலிருந்தே மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதை அலை பாயவிடாமல் ஒருநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்
வாழ்க்கையில் முதுமைப் பருவம் கடவுள் கொடுத்த வரம். இந்த அரிதான வரத்தைக் கடவுள் எல்லோருக்கும் கொடுத்து விடுவதில்லை. இந்தப் பருவத்தை எட்டும் முன்பே பலர் விபத்து, தீய பழக்கங்கள் மற்றும் நோய் போன்ற காரணங்களால் அகால மரணம் அடைந்து விடுகிறார்கள். நீண்ட ஆயுள் பெற்று, இந்த முதுமையை ஆண்டு
அனுபவித்து வாழ்பவர்கள் பாக்கியசாலிகள். சிலருக்கு மட்டுமே இந்த தனித்துவமான முதுமைப் பருவத்தை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கிறது.
பேரக் குழந்தைகள் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலையில் சேர்ந்து தங்கள் குடும்ப வாழ்வைத் தொடங்குவதைப் பார்த்து மகிழும் பெருமிதம் இங்கு எத்தனை பேருக்கு வாய்க்கிறது! இந்த இனிய பருவத்தில்தான், மணி விழா, பவள விழா போன்ற மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது. நான்கு தலைமுறை, ஐந்து தலைமுறை என குடும்பமாக எடுக்கப்படும் புகைப்படங்களில் பாருங்கள்… அதில் உள்ள முதியோர்களின் முகங்களில் அவ்வளவு பூரிப்பும் பெருமிதமும் தெரியும்.
‘இளமை முதல் முதுமை வரை எல்லா பருவங்களையும், அந்தந்த வயதுக்குரிய ரசனைகள், மகிழ்ச்சிகள், அனுபவங்களுடன் இனிமையாகக் கடந்து செல்வதே சிறந்த வாழ்க்கை’ எனச் சொல்வார்கள். இப்படி வாழ முடிகிறவர்கள் கடவுளின் அருளைப் பெற்றவர்களாகவே கருதப்படுவார்கள்.
இளமையைப் போல முதுமையும் ஒரு பருவமே!
‘இனிக்கும் இளமை’ எனச் சொன்னவர்கள், ‘மகிழ்வூட்டும் முதுமை ’ என சொல்வதற்கு மறந்து விட்டார்கள். குழந்தைப்பருவம், இளமைப் பருவம் என எல்லா பருவங்களிலுமே இனிமையான நிகழ்ச்சிகளும் உண்டு, கசப்பான நினைவுகளும் உண்டு. கசப்புகளை யாரும் சுமந்து கொண்டிருப்பதில்லை. அதனால் பலருக்கும் ஞாபகம் இருப்பதில்லை. முதுமையின் நினைவுகள் அவ்வளவு எளிதில் ஜீரணமாவதில்லை. எனவே கசப்புகள் பெரிதாகத் தெரிகின்றன. முதுமைப் பருவத்திலும் பல தொல்லைகளுக்கு இடையே மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நிறையவே உண்டு.
நாற்பது வயதைத் தாண்டும்போதே எல்லோரும் தங்கள் முதுமைப் பருவத்திற்காக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு பயணம் செல்வதற்கு முன்பாக எல்லா விஷயங்களையும் திட்டமிடுகிறோம் இல்லையா? அதைவிட அதிகமாக இந்த வாழ்க்கைப் பயணத்துக்கும் திட்டமிட வேண்டும். எண்ணங்களும் செயல்பாடுகளும் ஒரே சீராகவும் தெளிவாகவும் இருந்து செயல்பட்டால் முதுமையில் பல தொல்லைகளைத் தவிர்க்க முடியும். முதுமையும் ஒரு மகிழ்வூட்டும் காலம்தான்!
எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி, சீரான உடல்நலம், ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, தியானம் ஆகியவற்றோடு சற்றே பொருளாதார வசதியும் இருந்துவிட்டால் போதும்… முதுமையில் மகிழ்ச்சியை மனப்பூர்வமாக உணரலாம். அது எப்படி முடியும்? அதற்கான வழியில் இணைந்து பயணிக்கலாம், வாருங்கள்!
– பத்ம ஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்
மூத்த முதியோர் நல மருத்துவர்
ஆசிரியர் – முதுமை எனும் பூங்காற்று மாத இதழ்