அரசு ஊழியர் ஒருவர் கிளினிக்கிற்கு வந்தார். ‘என் அம்மாவின் வயது 60, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது வீட்டை விட்டு வெளியே போய்விடுகிறார். திரும்பி வருவதற்கு வீட்டின் முகவரியை மறந்துவிடுகிறார். பக்கத்து தெருவில் உள்ள நண்பர்கள்தான் என் அம்மாவை அழைத்து வந்து வீட்டில் விட்டுப் போகிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அம்மாவைத் தனியாக வீட்டில் விடுவதற்கும் பயமாக இருக்கிறது. யாராவது ஒருவர் கூடவே இருக்கவேண்டியிருக்கிறது. இதற்கு ஏதாவது வைத்தியம் உண்டா டாக்டர்’ என்று புலம்பினார். அவருடைய அம்மாவைப் பரிசோதித்ததில் அவருக்கு சற்று முற்றிய நிலையில் டிமென்சியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குண்டான சிகிச்சையில் மறதியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மறதிக்கு உதவும் சாவிக் கொத்து
திரு. கிருஷ்ணன், 67 வயது, பெரம்பூரில் தனியாக வசித்து வருகிறார். மனைவி சமீபத்தில் காலமாகிவிட்டார். ஒரே மகள் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவர் சமைப்பது உட்பட தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வார். சமீபத்தில் அவருக்குச் சரியாகத் தூக்கம் வருவதில்லை, பசியும் குறைந்துவிட்டது. தனிமையை உணர ஆரம்பித்துவிட்டார். அவரை மனச்சோர்வு பற்றிக்கொள்ள, மறதி நோய் தலைதூக்க ஆரம்பித்தது.

அதற்கு, இதோ ஓர் உதாரணம்: அவர் பாத்திரத்தில் பாலை ஊற்றி அதைச் சுட வைப்பார். சிறிது நேரத்தில் பால் பொங்கி எழுந்து நுரையுடன் கொட்டி வழியும். தான் பால் காய்ச்சியதையே மறந்துவிட்டு பால் பொங்கி வழியும் வாசனை வேறு எங்கிருந்தோ வருகிறது என்று எண்ணிக்கொள்வார். அவர் தன்னுடைய வீட்டு அடுப்பைப் பார்த்த பின்பு தான் அது தன் வீட்டிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்து பாத்திரத்தை இறக்கி வைப்பார். தண்ணீர் குழாயைத் திறந்துவிட்டு, அதை மூட மறந்துவிடுவார். தண்ணீர் வழிந்து ஓடுவதைப் பார்த்துத்தான் குழாயை நிறுத்துவார்.
இதையும் படிக்கலாமே! பொன்னான காலம் உங்கள் கையில்!
தொலைபேசியில் பேசிவிட்டு, பின்பு அதைச் சரியான இடத்தில் வைக்க மறந்துவிடுவார். வீட்டுச் சாவியை வீட்டிற்குள்ளேயே வைத்துவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு (தானே இயங்கும் பூட்டு – automatic lock) பலமுறை அந்தப் பூட்டை உடைத்ததுண்டு. இதற்காக ஒரு சாவியை வெளியில் செல்லும் பொழுது கழுத்தில் மறக்காமல் மாட்டிக்கொள்வார். அவருடைய மகள் என்னிடம் அவரை அழைத்து வந்த போது அவருக்கு ஏற்பட்ட மறதி, மனச்சோர்வு காரணமாகத்தான் என்று கண்டறிந்து அதற்குத் தக்க சிகிச்சை அளித்த பின்பு பூரண குணமடைந்தார். அதற்குப் பின் பலமுறை என்னிடம் வரும் பொழுது கழுத்தில் தொங்கும் சாவி கொத்து இல்லாமல் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

கடையில் காய்கறி வாங்கும் அனுபவம்
வீட்டு ஒரு வேலைக்காரி, பல வருடங்களாக வீட்டில் வேலை பார்த்து வருகிறாள். கடைக்குச் சென்று காய்கறி வாங்க அனுப்பினால், சிலவற்றை மறந்துவிடுவாள். காகிதத்தில் எழுதிக் கொடுத்தாலும், இவளுக்குப் படிக்கத் தெரியாததினால், சரியாக வாங்கி வர முடியவில்லை. ஆனால், கடைக்குச் சென்று நாம் சொன்ன காய்கறிகளைக் கடையில் பார்த்த உடனே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சரியாக வாங்கி வந்துவிடுவாள். என்ன என்ன காய்கறிகள் வாங்கி வந்தாய் என்றால் அவளால் உடனே பதில் சொல்ல முடியாது. வாங்கி வந்த காய்கறிகளைப் பார்த்துத்தான் பதில் சொல்லுவாள். இதுவும் ஒரு வகையான மறதி நோய்!
டிமென்சியா இப்படி பல விதங்களில் மக்களின் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும்.
– பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன் – முதியோர் நல மருத்துவர்