டாக்டர் எஸ்.முத்துக்குமார் MBBS, Dip in Ortho
எலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர்
சென்னை
வயதானவர்கள் விழுதல் என்பது அடிக்கடி நடக்கக்கூடிய சம்பவமாக உள்ளதே…
ஆம்… விழுதல் (Fall) என்பது முதியோர் வாழ்வில் அடிக்கடி நிகழும் ஒரு விபத்தாகவே உள்ளது. குறைந்த உடல் வலிமை, ஒருங்கிணைப்பின்மை, மருத்துவ நிலைமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துகள் போன்ற பல்வேறு காரணிகளால் முதியோர் தங்கள் சமநிலையை இழந்து தடுமாறுகிறார்கள். இது ஓர் உலகளாவிய மருத்துவப் பிரச்னையாகவே உள்ளது. ஏனெனில், வயதானவர்களுக்கு காயம் ஏற்படுவதற்கு கீழே விழுவதுதான் முக்கிய காரணம். இதனால் எலும்பு முறிவுகள், தலைக் காயங்கள் மற்றும் பிற சிக்கல்கள் உள்ளிட்ட கடுமையான தீங்கு நேர்கிறது. விழுதல் விபத்துகள் எங்கும் நிகழலாம். ஆனால், பெரும்பாலும் வீட்டிலேயே நிகழ்கிறது, பெரும்பாலான முதியோர் தங்கள் நேரத்தை அங்குதானே செலவிடுகிறார்கள்?
எந்த வயதில் விழுதல் பெரியவர்களை அதிக அளவில் பாதிக்கிறது?
எந்த வயதினரும் விழக்கூடும் என்றாலும், பொதுவாக 60களில் நுழையும்போது அதிக விழுதல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. வயது தொடர்பான காரணிகளின் அதிகரிப்பாலும் விழுதல் நிகழலாம். வயதாகும்போது நமது தசை வலிமை, சமநிலை, நெகிழ்வுத்தன்மை ஆகியவை குறைகின்றன. இது விழுதல் எனும் அபாயத்துக்கு வழிவகுக்கும். ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டுவலி, இதய நோய், பார்கின்சன் நோய் மற்றும் சில வகையான டிமென்ஷியா போன்ற வயது தொடர்பான மருத்துவ நிலைகளும் விழும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
விழுதல் எனும் இந்த ஆபத்து 60களில் உயரத் தொடங்கினாலும்கூட, 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரையே கணிசமாகப் பாதிக்கிறது. ஒரு நபர் விழுவது என்பது அவர் வெறுமனே விழுவது மட்டுமே அல்ல… அது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம், வாழ்க்கை முறை, வாழ்க்கைச் சூழல் உள்ளிட்ட பலவற்றையும் பாதிக்கக்கூடிய ஓர் அபாயம்.
தடுமாறி விழுந்தவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் என்ன?
வயதானவர்கள் விழுந்தால், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். அது அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் பாதிக்கும். உடல்ரீதியாக, சிறிய காயங்கள், வெட்டுக்கள் முதல் இடுப்பு எலும்பு முறிவுகள் போன்ற கடுமையான எலும்பு முறிவுகள் வரை பலவிதமான காயங்களை ஏற்படுத்தும். இது உயிருக்கு ஆபத்தானது.
கீழே விழுவதால் ரத்தக்கசிவோ, கைகால் எலும்புகளில் முறிவோ ஏற்படலாம். இதனால் சிலர் கோமா நிலைக்குப் போகலாம். சிலரது உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒரு தடவை கீழே விழுந்தவர்களுக்கு, நாம் மீண்டும் விழுந்துவிடுவோமா என்ற பயம் தொற்றிக்கொள்ளும். இதனால் அவர்களிடம் பதற்றம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிடுவார்கள்.
தலையில் ஏற்படும் காயங்களும் கவலைக்குரியவை. குறிப்பாக ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் போன்ற சில மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு நீண்ட கால சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
உடல் காயங்களுக்கு அப்பால், விழுதல் என்பது உளவியல் தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. பல பெரியவர்கள் ‘விழுந்து விடுவேனோ?’ என்கிற பயத்தோடே பரிதவிக்குகிறார்கள். இது அவர்களின் செயல்பாடு மற்றும் சமூக தொடர்பு குறைவதற்கு வழிவகுக்கும். இந்தச் செயல்பாட்டுக் கட்டுப்பாடு சமூக தனிமைப்படுத்தல், மனச்சோர்வு அல்லது பதற்றம் போன்ற உணர்வுச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.
மேலும், விழுதல் காரணமாக சுதந்திரத்தை இழக்க நேரிடும். விழுந்துவிட்ட பல முதியவர்கள், குறிப்பாக கடுமையான காயங்களுக்கு ஆளானவர்கள், ‘இனி சுதந்திரமாக வாழ முடியாது’ என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால் அன்றாட பணிகளுக்கான உதவியாளர் அல்லது நீண்ட கால பராமரிப்பு தேவைப்படும். மொத்தத்தில் வாழ்க்கைத் தரத்தையே கணிசமாக பாதிக்கும்.
பெரியவர்கள் விழுவது குடும்பத்தில் உள்ள மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும்?
ஒரு பெரியவர் விழுந்துவிட்டால், அதன் விளைவுகள் குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கும். பெரும்பாலும் அந்த நபரின் நல்வாழ்வைப் பற்றிய கவலை உடனடி தாக்கமாக இருக்கும். அதைத் தாண்டி இன்னும் பாதிப்புகளும் ஏற்படலாம்.
காயமடைந்தவரைப் பராமரிப்பதற்காக குடும்ப உறுப்பினர்கள் வேலை அல்லது பிற கடமைகளிலிருந்து விடுபட்டு நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கலாம். இதன் விளைவாக பொருளாதாரச் சிக்கல்களும் கூடுதல் மன அழுத்தமும் ஏற்படலாம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள் அல்லது எதிர்காலத்தில் விழுதலைத் தடுக்கும் வகையில் வீட்டை மாற்றுவதற்கான சாத்தியமான செலவுகள் இருக்கலாம்.
மேலும், வயதான நபரின் சுதந்திர இழப்பு ஒரு குடும்பத்துக்குள் உள்ள இயக்கவியலை மாற்றலாம். குடும்ப உறுப்பினர்கள் பராமரிப்பாளர்களாக மாறலாம். இந்த மாற்றம் மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும் மற்றும் குடும்ப உறவுகளைப் பாதிக்கலாம்.
முதியவர்கள் விழுதல் என்பது முதியவர்களை மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்தையும் பெருமளவில் பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கவலையாகும். இருப்பினும், புரிந்துகொள்ளுதல், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தகுந்த கவனிப்புடன், இந்த சம்பவங்களின் அபாயத்தையும் தாக்கத்தையும் கணிசமாகக் குறைக்க முடியும்.
முதுமையில் தடுக்கி கீழே விழாமல் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
முதுமைக் காலத்தில் `பேலன்ஸ்’ விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நரம்புகள், மூட்டுகளில் நடக்கும் செயல்பாடுகள் தண்டுவடம் மூலம் மூளையைச் சென்றடையும். அதேபோல கண், உட்காதின் செயல்பாடுகள் நரம்புகள் வழியாக மூளையைச் சென்று சேரும். இந்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சீராக இருக்கும்போது எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால், இந்தச் செயல்பாட்டின்போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் சமநிலை பாதிக்கப்படும்.
குளியலறை மற்றும் உயரமான இடங்களில் கைப்பிடி இல்லாமலிருந்தாலும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. பேசிக்கொண்டே நடப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட செய்கைகளைச் செய்வது, ரிங்டோன் கேட்டதும் அவசரமாக போனை எடுப்பது போன்றவற்றாலும் கீழே விழ நேரிடும்.
முதுமைக்காலத்தில் உடல் சார்ந்த பாதிப்புகளும் சுற்றுச்சூழல் மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கண்புரை மற்றும் பார்வைக் குறைபாடு, எலும்புத் தேய்மானம், கழுத்து எலும்புத் தேய்மானம், மறதி நோய், பக்கவாதம், ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், கைகால் நரம்புப் பாதிப்பு, மருந்துகள் அதிகம் எடுத்துக்கொள்வதால் பக்கவிளைவுகள் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
வழவழப்பான, ஈரப்பதம் நிறைந்த தரைகள் மற்றும் மேடு, பள்ளம் நிறைந்த, உயரம் அதிகமான இடங்களில் நடக்கும்போது கீழே விழ வாய்ப்புள்ளது. மங்கலான வெளிச்சத்தில் நடக்கும்போதும் தேவையற்ற பொருள்கள் மற்றும் மேஜை நாற்காலிகள் இடையூறு ஏற்படுத்துவதால் கீழே விழுவார்கள். குளியலறை மற்றும் உயரமான இடங்களில் கைப்பிடி இல்லாமலிருந்தாலும் கீழே விழ வாய்ப்புள்ளது. இதேபோல பேசிக்கொண்டே நடப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட செய்கைகளைச் செய்வது, ரிங்டோன் கேட்டதும் அவசரமாக போனை எடுப்பதாலும் கீழே விழ நேரிடும்.
முதியோர் கீழே விழாமல் தடுக்கச் சில பரிசோதனைகள்
ராம்பெர்க் டெஸ்ட் (Romberg Test)
இந்தப் பரிசோதனையின்போது ஒருவர் துணையுடன் இரண்டு கால்களையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து வைத்து, கண்கள் மூடியபடி நேராக நிற்க வேண்டும். சில விநாடிகள் கழித்து கண்களைத் திறந்து பார்த்து மீண்டும் கண்களை மூட வேண்டும். அப்போது தடுமாற்றம் ஏற்படாமலிருக்க வேண்டும். ஒருவேளை தடுமாற்றம் ஏற்பட்டால் அவர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
டேன்டெம் வாக் (Tandem Walk)
ஒரு நேர்க்கோட்டில் அடி மேல் அடி வைத்து நடக்க வேண்டும். அப்போது 10 அடி தூரத்தைத் தள்ளாடாமல் கடந்தால் அவருக்குப் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று பொருள். மூன்றாவது Get up and Go' எனப்படும் எழுந்து நடக்கும் பரிசோதனை. முதலில் கைப்பிடி உள்ள நாற்காலியில் உட்கார வேண்டும்.
Go’ என்று சொன்னதும் 10 அடி தூரம் நேர்க்கோட்டில் தள்ளாடாமல் சென்று திரும்பிவந்து அதே இருக்கையில் அமர வேண்டும். இந்தப் பயிற்சியை 10 விநாடிகளுக்குள் செய்ய வேண்டும். நேரம் அதிகமானால் அவர் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
யாரெல்லாம் கீழே விழுவதற்கான அபாயம் இருக்கிறது? இதை அறிவதற்கு ஒரு வினாடி வினா!
- ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கிறதா?
- அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறதா?
- மறதி நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?
- பார்வைக் குறைபாடு உள்ளதா?
- காது கேட்கும் திறன் குறைவாக இருக்கிறதா?
- அதிக எண்ணிக்கையில் மாத்திரை எடுத்துக் கொள்பவரா?
- ஒரு வருடத்துக்கு முன்பாக கீழே விழுந்திருக்கிறீர்களா?
- முழங்கால், மூட்டுவலி, கழுத்துத் தேய்மானம் உள்ளவரா?
- தினம் மது அருந்தும் பழக்கம் உள்ளவரா?
- காலணியை மாற்றி ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிறதா?
- பாதத்தில் தொடு உணர்ச்சி குறைவாக உள்ளதா?
- கைத்தடி, வாக்கர் பயன்படுத்துகிறீர்களா?
- உங்கள் வீட்டில் போதிய வெளிச்சம் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறீர்களா அல்லது யாராவது சொல்லியிருக்கிறார்களா?
- குளியலறை வழவழப்பாக உள்ளதா?
- வீட்டில் உள்ள படிக்கட்டுகள் உயரமாக உள்ளனவா?
இவற்றில் பல கேள்விகளுக்கு `ஆம்’ என்பது பதிலாக இருந்தால், அவர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
- நோய் பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சை எடுத்து நோயைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
- கண் மற்றும் காது பிரச்னைகளை உரிய பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும்.
- அதிக அளவு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தால் அவற்றைக் குறைக்க சாத்தியம் உள்ளதா என்பதை மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
- மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
- நடப்பதற்கு வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்த வேண்டும்.
- பொருத்தமான காலணிகளை உபயோகிக்க வேண்டும்.
- தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.