நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; ஒரு குறைபாடுதான் என்றாலும்கூட அது நமது ஆரோக்கியத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அவற்றில் மிக முக்கியமான – அடிக்கடி கவனிக்கப்படாத சிக்கல்தான் நீரிழிவு பாதம் (Diabetic Foot). நீரிழிவு பாதத்தின் பாதிப்புகள் மற்றும் நாம் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் குறித்து நாம் அனைவரும் அறிவது அவசியம்.
நீரிழிவு பாதம் என்றால் என்ன?
நீரிழிவு பாதம் (Diabetic Foot) என்பது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் கால் தொடர்பான சிக்கல்களைக் குறிக்கிறது. இது முதன்மையாக இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. நரம்பு சேதம் (nerve damage neuropathy) மற்றும் மோசமான ரத்த ஓட்டம் (poor blood circulation).
நீரிழிவுக் கட்டுப்பாடின்மை கால்களில் உணர்திறனை இழக்க வழிவகுக்கும். இது புண்களாக உருவாகக்கூடிய காயங்கள் அல்லது அழுத்தப் புள்ளிகளைக் கண்டறிவதைக் கடினமாக்குகிறது. மோசமான ரத்த ஓட்டமானது, காயம் குணமாவதைத் தாமதப்படுத்தலாம். அதோடு, தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

நீரிழிவு பாதப் பிரச்னை நீரிழிவு நோயாளிகளை எவ்வாறு பாதிக்கிறது?
நீரிழிவு நோயாளிகளுக்கு, நீரிழிவு பாதத்தின் பாதிப்புகள் பல மடங்கு இருக்கும்.
உணர்திறன் இழப்பு (Loss of Sensation)
நரம்பியல் பிரச்னை அதிகரிக்கும்போது, வலி, வெப்பநிலை அல்லது அழுத்த மாற்றங்களை உணரும் திறனை இழக்க நேரிடும். இது கவனிக்கப்படாத அதிர்ச்சி (unnoticed trauma) அல்லது அழுத்தப் புள்ளிகளுக்கு (pressure points) வழிவகுக்கும். இவை மிகவும் கடுமையான சிக்கல்களாக உருவாகலாம்.
நோய்த்தொற்றுகள் (Infections)
மோசமான ரத்த ஓட்டம் காரணமாக, பாதத்தில் ஏதேனும் வெட்டுக்கள் அல்லது காயங்கள் இருந்தால், அவை மெதுவாகவே குணமாகும். இது பாக்டீரியாக்கள் வளரவும் பெருகவும் வாய்ப்பளிக்கிறது. தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கிறது. இந்த நோய்த்தொற்றுகள் தீவிரமடைந்து ஆழமான திசுக்கள் அல்லது எலும்புகளுக்கு பரவும்.
உடல்திறன் குறைபாடு (Physical Limitation)
புண்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் இந்த நிலைமைகளுடன் தொடர்புடைய வலி ஆகியவை ஒரு நபரின் இயக்கம் மற்றும் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கலாம்.
உடல் உறுப்பு துண்டிக்கப்படும் அபாயம் (Risk of Amputation)
நீரிழிவு பாதப் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டாலோ, மோசமாக நிர்வகிக்கப்பட்டாலோ, gangrene என்கிற சதையழுகல் நிலைக்கு வழிவகுக்கும். தொற்று பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதியை துண்டிக்க வேண்டிய நிலைக்கு இது இட்டுச் செல்லும்.

நீரிழிவு பாதப் பிரச்னையின் அறிகுறிகள் என்ன?
நீரிழிவு நோயாளிகள் தங்கள் கால்களை தவறாமல் பரிசோதிப்பது முக்கியம். பொதுவான அறிகுறிகள் இவை…
* உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது எரியும் உணர்வு (Numbness, tingling, or burning sensation)
* கடுமையாகக் குத்துவது போன்ற வலிகள் அல்லது பிடிப்புகள் (Sharp pains or cramps)
* தொடுவதற்கு கூட கடினமாகத் தோன்றும் அளவுக்கு உணர்திறன் அதிகரித்திருக்கும் (Increased sensitivity to touch)
* கால் வடிவத்தில் மாற்றங்கள் (Changes in foot shape)

* வறண்ட, விரிசல் தோல் – குறிப்பாக குதிகாலைச் சுற்றி (Dry, cracked skin, especially around the heels)
* கால் புண்கள் – குறிப்பாக காலின் பந்தில் அல்லது பெருவிரலின் அடிப்பகுதியில் (Foot ulcers, especially on the ball of the foot or on the bottom of the big toe)
* காயம் குணமடையாமல் இருத்தல் அல்லது தொற்று (Poor wound healing or infections)
* சரும நிறத்தில் மாற்றம், மிகவும் வெளிர் அல்லது சிவப்பு நிறமாக மாறுதல் (Change in skin color, becoming either too pale or reddish)
* குளிர்ந்த பாதங்கள் அல்லது கால்களின் கீழ் பகுதிகளில் முடி உதிர்தல் (Cold feet or loss of hair on toes and lower legs)
* தடித்த கால் நகங்கள் அல்லது நகங்களில் பூஞ்சைத் தொற்று (Thickened toenails or fungal infections in the nails)
நீரிழிவு பாதம் (Diabetic Foot) பற்றிய இந்த தொடரில் நீரிழிவு பாதம் பற்றிய அறிமுகத்தை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டுரையில் நீரிழிவு பாதம் என்பது தீவிரமான பிரச்னையா? அதனை தடுப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
