Homeஉடல் நலம்நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சைகள் இருக்கிறதா? - டாக்டர் ஜெயராமன் உடன் கேள்வி-பதில்

நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சைகள் இருக்கிறதா? – டாக்டர் ஜெயராமன் உடன் கேள்வி-பதில்

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை இருக்கிறதா? இருக்கிறது என்றால் என்ன மாதிரியான சிகிச்சைகள் எல்லாம் இருக்கின்றது? என்று நுரையீரலியல் நிபுணர் டாக்டர் ஜெயராமன் அவர்களிடம் கேள்வி பதில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நுரையீரல் புற்றுநோய் பாதிப்பின் ஆரம்ப நிலையில் இருப்பவருக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்குவீர்கள்?

நுரையீரல் புற்றுநோயில் முக்கியமாக 2 செல் வகைகள் இருக்கின்றன. அவை சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் (small-cell lung cancer) மற்றும் சிறிய செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய் (non-small cell lung cancer).

இதில் சிறிய செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய் நோயாளிக்கு நுரையீரலின் பாதிக்கப்பட்ட பகுதிக்கு லோபெக்டோமி அறுவை சிகிச்சை (lobectomy surgery) அல்லது நிமோனெக்டோமி அறுவை சிகிச்சை (Pneumonectomy surgery) செய்தால் நோயாளி முழுவதுமாக குணமடைய கூடிய வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.

சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் உடைய நோயாளி, நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகும் பட்சத்திலும் அவருக்கு ஒரு நுரையீரல் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது, வேறு இடங்களில் பரவவில்லை என்றால் அவருக்கு இலக்கு கீமோதெரபி சிகிச்சை (targeted chemotherapy) சிகிச்சை பயனுள்ளது. அதை 3-6 மாதங்கள் சுழற்சியாக அளிக்கும்போது சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் குணமடைய 100% வாய்ப்புள்ளது. 

நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு முற்றிய நிலையில்  இருப்பவருக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்குவீர்கள்?

நிலை-3, நிலை-4 என்று குறிப்பிடக்கூடிய நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் மற்ற பகுதிகளிலும் பரவியுள்ள நோயாளிகளுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படாது. அவர்களுக்கு கீமோதெரபி மருந்துகளையே பரிந்துரைப்போம். அதாவது கீமோதெரபி மாத்திரை மற்றும் ட்ரிப் வடிவில் இருக்கின்றன. அவர்களுக்கு 3-6 முறை மாத்திரை மற்றும் ட்ரிப் வடிவில் கீமோதெரபி கொடுத்து முடித்த பிறகு, பரிசோதனை செய்வோம்.

தேவைப்படும் பட்சத்தில், நுரையீரல் புற்றுநோய் கட்டியில் ரத்த சுழற்சி அதிகமாக இருந்தால் அதைக் கரைப்பதற்கு கதிர்வீச்சு சிகிச்சை கொடுப்போம். இவ்வாறு நோயின் நிலைக்கு ஏற்ப, அதைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான சிகிச்சையை கொடுத்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோம்.

நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கு எவ்வளவு நாள் தேவைப்படும்?

நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான கால அளவு 3-6 மாதங்கள் எடுத்துக் கொள்ளும். அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு சுழற்சி கீமோதெரபி கொடுப்போம். இடையில் 21 நாட்கள் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் ஒரு சுழற்சியாக 3 நாட்கள் கொடுப்போம். ஒரு மாதத்திற்கு 3 நாட்கள் தெரபி மற்றும் 21 நாட்கள் இடைவெளி கொடுத்து சிகிச்சை அளிப்போம். ஆகவே நோயாளி 3-6 மாதங்களில் முழுமையாக குணமடைவார்.

சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு நோயாளிகள் யாராவது சென்றுள்ளனரா? 

ஒரு நோயாளி என்னை அணுகும்போது அவருக்கு இருமல், சளி, எடை குறைவு, பசியின்மை என்று சில அறிகுறிகளைக் கூறினார். அந்த நோயாளிக்கு நுரையீரலைச் சுற்றி நீர் சேர்ந்திருந்தது. மேலும் நுரையீரலுக்குள் ஒரு கட்டி இருந்தது. ஆரம்பத்தில் அந்த நோயாளி காசநோய் என்று நினைத்து மருந்து எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், குணமடையவில்லை.

பிறகு அவர் என்னை அணுகிய போது நுரையீரலில் இருந்து நீர் எடுத்து பரிசோதனை செய்தோம். அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் என்று தெரியவந்தது. அதோடு, நோயாளி நோயின் 4-ம் நிலையில் இருந்தார்.

நோயாளிக்கு ரேடியோதெரபி, கீமோதெரபி கொடுக்க வேண்டும் என்று புற்றுநோய் மருத்துவரிடம் பரிசீலிக்கும் போது புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சில வழிமுறைகளைக் கூறினார். ஆனால், நோயாளி இயற்கை வைத்தியத்திற்கு சென்றுவிட்டார். நாங்கள் நோயாளிக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்க அவர் ஒத்துழைக்க வில்லை.

READ ALSO: ஆண்களின் நுரையீரல் பத்திரமாக இருக்கிறதா?

பிறகு நோயாளியின் உறவினர்கள் மூலமாக 6 வருடங்கள் கழித்து நோயாளியை விசாரிக்கும் போது அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. அதனால் எந்த ஒரு சிகிச்சையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை மூலம் சிகிச்சை பெற்றால், நோய் குணமாகும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

சிகிச்சையின்போது நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?

நுரையீரல்  புற்றுநோய்க்கான சிகிச்சை எடுப்பவர்கள், ரத்தம், சளி, எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் மூலம் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை சரியான முறையில் சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருந்துகள் சரியாக உட்கொள்ள வேண்டும். வேறு ஏதேனும் மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் அதையும் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும். ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

புகைப்பழக்கம் கூடவே கூடாது. காரணம் நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் புகைப்பழக்கத்தால்தான் வருகிறது. சிலர் சிகிச்சை எடுத்துக் கொண்டே புகை பிடிக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அவ்வாறு செய்யக் கூடாது.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read