முக அழகுக்கும் வயதைக் குறைத்துக் காட்டுவதற்கும் முடி ஒரு சாதகமாகக் கருதப்படுகிறது. வயதானவர்களின் முடி உதிர்தல் பிரச்சனை தோல் மருத்துவத்தில் ஒரு தொடர் தலைப்பாகத் தொடர்ந்து வருகிறது.
எதனால் முடி உதிர்தல் வழக்கமாகத் தொடர்கிறது?
பொதுவாகவே வயது ஆக ஆக உடலில் மாற்றங்கள் நடைபெறும். ஒவ்வோர் உறுப்பும் அதன் செயல்பாடுகளும் படிப்படியாகக் குறையத் தொடங்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். அத்தோடு முடி வளர்ச்சியும் குறையத் தொடங்குகிறது. மயிர்க்கால்களின் வேலைப்பாடும் குறைகிறது. மயிர்க்கால்களின் எண்ணிக்கையும் முடித் தண்டின் ஆரோக்கியமும் முக்கியப் பங்களிக்கிறது.
முடி வளர்ச்சியின் சுழற்சி முறை அனைத்து வயதினருக்கும் முடி வளர்ச்சி சுழற்சி முறையில் நடைபெறும். இது மூன்று வகையாகக் கருதப்படுகிறது.
- வளர்ச்சிக் காலம் (Anagen) – இது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும்.
- மாறும் காலம் (Catagen) – இது இரண்டு முதல் மூன்று வாரம் வரை தொடரும்.
- ஓய்வுக் காலம் (Telogen) – இது மூன்று மாதங்கள் நீடிக்கும். இறுதியாக எக்ஸோஜென்காலம் தொடரும்.
இந்தக் காலத்தில் குறிப்பாக உச்சந்தலையில் முடி உதிரத் தொடங்கும். இது இரண்டு முதல் ஐந்து மாதம் வரை நீடிக்கும்.
நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 முடிகள் வரை உதிர்தல் இருந்தால் ஆரோக்கியமாகக் கருதப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக உதிர்ந்தால் கவனம் தேவை. உடனடியாக அருகில் உள்ள தோல் நிபுணரை அணுகி முறையாகச் சிகிச்சை பெறுவது அவசியம். பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போட்டால், நாளடைவில் வழுக்கையாக மாறிவிட வாய்ப்பு அதிகம்!
முடி உதிர்வுக்கு காரணம்
- மரபியல் காரணங்கள்
- ஹார்மோன் பிரச்னை
- ஆரோக்கியமான வாழ்க்கை முறை
- வெளிப்புறச் சுற்றுச்சூழல்
- முறையான முடிப் பராமரிப்பு
- தலைமுடி சுத்தம் செய்யும் தண்ணீர்
- பூஞ்சைத் தொற்று
இவை அனைத்தும் தலைமுடி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன.
தலைமுடி ஆரோக்கியத்தைப் பராமரிக்க நல்ல ஊட்டசசத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், பால் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள், மீன் வகைகள், சீயா (Chia), சோயா பீன்ஸ், ப்ளாக்ஸ் விதைகள் (Flax seed), கீரை வகைகள், முட்டை, அவகாடோ (Ava- cado), இறைச்சி வகைகளைத் தொடர்ந்து முறையாக உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி, சி, பி12, பி7, இரும்புச்சத்து, சின்ங் போன்றவை மிக முக்கியமாக முடி வளர்ச்சிக்கும் உதிர்தலைத் தடுப்பதற்கும் தேவைப்படுகின்றன. அதனுடன் முடிப் பராமரிப்பு முறையும் மிகவும் அவசியம். தலைமுடியைச் சுத்தம் செய்ய மிதமான சூட்டில் உள்ள நீரைப் பயன்படுத்தவும்.
- ஷாம்பு – தலைமுடியைச் சுத்தம் செய்ய சரியான, ரசாயனம் குறைந்த அளவு உள்ள ஷாம்புவை உபயோகிக்கவும். சல்பர் இல்லாத ஷாம்புவை உபயோகிப்பது நல்லது.
- முடியை உலர்த்தும் போது துண்டை வைத்து மிருதுவாக ஒத்தி எடுக்க வேண்டும். பரபரவென கடுமையாக உலர்த்தக்கூடாது.
- தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு வைத்து வாரக்கூடாது. ஏனெனில் உச்சந்தலையின் துளைகள் ஏற்கனவே திறந்திருக்கும், உணர்திறன் கொண்டது. எனவே முடி உதிர்வதற்கு வழிவகுக்கும்.
- முடி உலர்த்தும் சாதனம் உபயோகிக்கும்போது மிதமான சூட்டை / வெப்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.
READ ALSO:
நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி? டாக்டர் ஜெயராமன் உடன் கேள்வி-பதில் 2
இவை அனைத்தையும் முறையாகப் பின்பற்றியும் தலைமுடி உதிர்வது தொடர்ந்தால் உடனே தோல் நிபுணரைச் சந்தித்து சிறந்த தீர்வு காண்பது நல்லது.
ஏனெனில், பூஞ்சைத் தொற்றாக இருந்தால், எந்த வகைப் பூஞ்சை, எந்த வகைத் தொற்று என்று தோல் நிபுணர் கண்டறிந்து முறையான சிகிச்சை அளிப்பார்.