பலரும் இன்று அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தினால் தான் அழகை அதிகரிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். சில வீடுகளில் இதற்காகவே பெரிய பட்ஜெட் போடுவார்கள்.
யூடியூபில் மேக்கப் குறித்து பல காணொலிகள் இருக்கின்றன. அதில் மேக்கப்புக்கு முன்பு காட்டப்படும் முகத்தைப் பார்க்கும்போது யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருக்கும்.
மேக்கப் முடிந்து காட்டப்படும் முகத்தைப் பார்த்தாலோ மிகவும் வியப்பாக இருக்கும். ஒவ்வொருவரையும் உலகப் பேரழகியாகவே மேக்கப் மூலம் காட்டிவிட முடியும்.
இதனால் நாம், ‘அழகு பொருட்களை வைத்து நம்மை அழகாக்கிவிடலாம்’ என்று நினைக்கிறோம். எவ்வளவு நேரம் அது நிற்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்!
கருப்பாக இருந்தால் அழகில்லை என்ற எண்ணத்தை இந்திய மக்களின் மனத்தில் விதைத்து விட்டார்கள். அதனால், ஒரு வாரத்தில் வெள்ளையாவது எப்படி என்கிற கருத்தையே விளம்பரமாக இங்கு காண்பிக்கிறார்கள்.
உண்மையில் அழகுக்கும் நிறத்திற்கும் தொடர்பே இல்லை. எண்ணங்கள் தூய்மையானால் ஒவ்வொருவரும் பேரழகு!
நமக்குள் இருக்கிற எண்ணங்கள் கொடுக்கும் அழகை, வெளியிலிருந்து நாம் பூசுகிற வெள்ளை மாவினால் கொடுக்க முடியாது.
‘வெற்றியைப் பிச்சையாக எடுக்க விருப்பமில்லை; வேண்டுமானால் உழைப்பிற்கு சன்மானமாக பெற்றுக்கொள்ள விருப்பம்’ என்கிறார் ஒரு கவிஞர்.
பலரும் வெற்றியைப் பிச்சையாக எடுக்கிறார்கள். வாழ்வில் பலரிடம் கையேந்தி மானமே இல்லாமல் வெற்றியைப் பிச்சையெடுத்துப் பிழைப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்.
மேலும்… ‘அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் செய்யபட்டவை’ என்கிறார்.
நாம் அனைவரும் வலிமையோடு பிறந்துவிடுகிறோமா? இல்லையே! ஆனால், விடாமுயற்சியின் மூலமாக வலிமை உள்ளவன் சாதிப்பதை நாமும் சாதிக்கலாம்!
தண்ணீருக்குள் ஒரு பாறை இருக்கிறது. அந்தத் தண்ணீருக்குள் அலை அடித்துக்கொண்டே இருக்கிறது. தண்ணீர் மென்மையானது, பாறை வன்மையானது.
ஆனால், பாறையின் மீது இந்தத் தண்ணீர் அலையின் மூலம் அடியடியென்று அடித்துக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து அலை அடித்து வன்மையான பாறையையே கரைத்துவிடுகிறது.
இதிலிருந்து நாம் விடாமுயற்சியைக் கற்றுக்கொள்ள வேண்டும். ‘கனவு மட்டுமே கண்டுகொண்டிருப்பது வெறும் கனவாகவே இருக்கும்… கனவோடு இணைந்து பயணம் செய்தால் மட்டுமே அது நிஜமாகும்.
பேசிக்கொண்டே இருந்தால் எல்லோரும் வெறுத்து விடுவார்கள். ஆனால், பேசாமல் இருந்தால் எல்லோரும் மறந் து விடுவார்கள்’ என்கிறார். வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை மிகவும் அழகாகச் சொல்கிறார் அந்தக் கவிஞர்.
Click to Read: முதுமையில் மருந்துக்கு விடை கொடுப்போம்!
மேலும் ‘எல்லாம் அளவோடு இருந்தால்தான் மதிப்பு’ என்று கூறிவிட்டு, வாழ்க்கையின் தத்துவத்தைப் பறைசாற்றும் விதமாக ‘நம்மிடம் இருக்கும் குணங்களையே பிறரிடமும் தேடுகிறோம்’ என்கிறார்.
நம்மிடம் என்னென்ன பழக்கங்கள் இருக்கின்றனவோ அவை பிறரிடமும் இருக்கின்றனவா என்று நிறுத்துப் பார்க்கும் தீய பழக்கம் நம்மிடம் இருக்கிறது.
இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான பழக்கங்கள் இருக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகில் அனைத்துமே வித்தியாசமான படைப்பு.
ரோஜா, அல்லி, தாமரை, மல்லி என அனைத்துப் பூ வகைகளும் வெவ்வேறு மாதிரியே இருக்கும். ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தால் தான் உலகமே அழகாக இருக்கும்.
அவரே சிறு உதாரணம் தருகிறார்… ‘கைரேகை… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும் என்பதை அறியாமல்…’ ஒவ்வொருவருக்கும் தனித்தனி கைரேகை இருக்கும்.
அதனால் ஒவ்வொருவருக்குமான தனித்த அடையாளமாக கைரேகையைப் பயன்படுத்துகிறார்கள். நம் கைரேகை எப்படி வேறுபடுகிறதோ, அதுபோல ஒவ்வொருவருக்கும் குணங்களும் வெவ்வேறாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள் என்று படைப்பைப் பற்றி சொல்கிறார்.
‘உறவுகளைச் சரியாகப் பேணி உறவாடுவதும் ஒரு கலையே. பிரச்னைகளற்ற உறவுகளும் இல்லை இணங்க மறுக்கும் உறவுகளும் இல்லை’ பிரச்னைகள் இல்லாமல் உறவுகளே இருக்க முடியாது.
எல்லா உறவுகளுக்கும் பிரச்னைகள் இருக்கவே செய்யும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனித உறவுகளைப் பேணுவதற்கு இந்தக் கவிஞர் ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
‘விட்டுக் கொடுத்துச் செல்பவர்கள் முட்டாள்கள் அல்ல… அடங்கிச் செல்பவர்கள் அடிமைகளும் இல்லை’ விட்டுக்கொடுப்பதற்கான காரணம் , இயலாமையோ கையாலாகாதத்தனமோ அல்ல.
விட்டுக்கொடுத்துச் செல்பவர்கள் அன்பு, அறிவின் முதிர்ச்சி, அனுபவம், பண்பாடு போன்றவற்றால் அவ்வாறு செய்கிறார்கள்.
Click to Watch: முதுமையில் யாருக்கெல்லாம் பக்கவாதம் வரலாம்?
பல வீடுகளில் பெண்கள், சில அநியாயங்களைக் கண்டும் ‘‘ சரி… சரி . . . ’ ’ என்று இருந்துவிடுவார்கள். அதற்கென்ன அடிமை என்றா அர்த்தம்?
மாறாகக் குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றவே அப்படி அனுசரித்து செல்கின்றார்கள்.
வீட்டை ஒழுங்காக நடத்திச் செல்ல வேண்டுமே என்பதற்காக அவ்வாறு அமைதியாக இருக்கிறார்கள்; அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல!