இளமைப் பருவத்தில் எல்லா உறுப்புகளும் நன்றாகவே இயங்கி வரும். இந்நிலையில் அவர்களுக்கு கொடுக்கும் மருந்தின் விளைவு நூற்றுக்கு நூறு சரியாகவே இருக்கும்.
ஆனால், இதற்கு மாறாக முதியோர்களின் உடல் உறுப்புகள் நோய்களினாலும், சிகிச்சைக்காக எடுத்துக் கொண்ட மருந்துகளினாலும், முன்னரே செய்து கொண்ட அறுவை சிகிச்சையினாலும் மற்றும் சத்துணவு குறைவினாலும் மிகவும் பாதிப்பு அடைந்த நிலையில் இருக்கும்.
இத்தகைய முதியோருக்கு மருந்தின் விளைவுகள் எதிர்பார்த்தபடி இருக்காது என்பது மட்டுமல்ல அதன் தீய விளைவுகளும் அதிகமாக இருக்கும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
வயதான எல்லோருக்கும் மருந்துகள் கெடுதல் விளைவிப்பது இல்லை. குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமே தீமையை விளைவிக்கின்றன.

யாருக்கு?
- ஆண்களை விட வயதான பெண்கள்.
- மெலிந்த உடல் உள்ளவர்கள்.
- கடந்த காலத்தில் மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள்.
- தன் குடும்பத்தில் யாருக்காவது மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள்.
- ஒவ்வாமை சார்ந்த ஆஸ்துமா, எக்ஸிமா போன்ற நோய்கள் உள்ளவர்கள்.
- பலவிதமான மருந்துகளை (multiple drugs) உட்கொள்பவர்கள்.
- சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்.
பல மருத்துவர்கள் பல மருந்துகள்
தற்பொழுது முதியவர்கள் உணவுக்கு அடுத்தபடியாக அதிகமாக எடுத்துக் கொள்வது பலவிதமான மருந்துகளைத் தான். அடிக்கடி சிறப்பு மருத்துவரை பார்ப்பதால் சில நன்மைகளுக்கி டையே பலவிதத் தொல்லைகளும் ஏற்படலாம்.
சிறப்பு மருத்துவர்கள் அத்துறைக்கான தொல்லைகளுக்கு மட்டுமே (உதாரணம்: மாரடைப்பு , பக்கவாதம்) மருந்துகளை எழுதுவார். அவரால் தன்னிடம் வரும் முதியவர் வேறு என்னென்ன தொல்லைகளுக்கு என்னென்ன மருந்துகளை எடுத்துக் கொள்கிறார் என்பதைக் கேட்கவோ, பார்க்கவோநேரம் இல்லாமல் இருப்பார். ஆகவே பல வித மருத்துவர்கள் பலவித மருந்துகள் என்று நிலை ஏற்படுகிறது.
பல மருந்துகளின் பக்கவிளைவுகள்
பல மருந்துகள் எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் வர வாய்ப்பு அதிகமாகிறது. இவற்றால் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படலாம்.
Click to Read: வெயிலின் தாக்கத்தால் தளர்ந்த உடல் வலிமைபெற!
நிதிச் சுமை
பல மருந்துகளை வாங்கும்போது அதனுடைய விலையும் அதிகமாகி, நிதிச்சுமை ஏற்படுகிறது. பல முதியவர்களினால் மாத்திரைகளை, அவர்களின் நிதி நிலையின் காரணமாக வாங்க முடியாத நிலையில் இருப்பார்கள். நிதி வசதி காரணமாகப் பலரால் தொடர் சிகிச்சை செய்து கொள்ளவும் முடிவதில்லை.
மனச் சுமை
முதுமையில் சற்று மறதியும் இருக்கும். அவர்களால் எல்லாதவிதமான மாத்திரைகளையும் நினைவில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து கொள்வது மிகவும் சிரமம்.
உதாரணம்: காலை, மாலை, உணவிற்கு முன்பு, உணவிற்கு பின்பு, பாதி மாத்திரை அல்லது முழு மாத்திரை.
மருந்து எழுதுவதற்கு முன்பு நோயாளி தற்பொழுது எடுத்துக் கொள்ளும் மருந்தின் விவரத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு மருந்தின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
மருத்துவர் மிகவும் ‘அவசியம்’ என்றால் மட்டுமே சிறப்பு மருத்துவர் மாத்திரையை எழுத வேண்டும். தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்தை குடும்ப மருத்துவர் கவனித்துக் கொள்வார்.
‘ஒரு நோயை சரியாக கண்டறிந்து விட்டால் அதற்கு பலவித மருந்துகளை விட அதற்குண்டான ஒரே மருந்தே மிகவும் நல்ல பயனை தரும்.

சுயசிகிச்சை முறை சுயசிகிச்சை முறை (Self-Medication)
மிகவும் தொல்லை தரவல்லது. ஏனெனில், முதுமையில், நோயின் அறிகுறிகள் மாறுபட்டுக் காணப்படுவதால் தமக்கு என்ன நோயென்று சரியாகத் தெரியாத நிலையில் மருந்தினை உட்கொள்ளும்போது அதன் விளைவுகள் மிகவும் தீமையானதாக இருக்கும்.
உதாரணம்: முதுமையில் நெஞ்சில் வலி ஏதுமின்றியே மாரடைப்பு நோய் வரலாம். அதாவது திடீரென்று உடல் வலிமை இழத்தல், மயக்கம் உண்டாதல், வியர்த்துக் கொட்டுதல் முதலிய தொல்லைகள் மாரடைப்பினால் வரலாம்.
ஆனால், இவற்றைச் சாதாரணமாய் முதுமையில் வரும் பல வீனம் என்று எண்ணி ‘டானிக்’ போன்ற மாத்திரையை உட்கொள்கின்றனர். அதனால் மாரடைப்பிற்கு உண்டான சிகிச்சையைப் பெறமுடியாமல் , உயிருக்கே ஆபத்தான நிலையைச் சிலர் அடைகின்றனர்.
முதுமையில் மூட்டுவலி பலருக்கும் வருவதுண்டு. அதனைக் குறைக்க அவர்கள் மருந்துக்கடைக்குச் சென்று, ஆஸ்பிரின் போன்ற வலிதீர் மாத்திரையை (வலி நிவாரணி (பெயின் கில்லர்) வாங்கி உட்கொள்கின்றனர்.
Click to Watch: 80 வயசுலயும் குறை இல்லாமல் வாழலாம்
இதனைத் தொடர்ந்து உட்கொள்வதால் வயிற்றில் புண் ஏற்படும். வயிற்றுவலியும் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய இரத்த வாந்தியும் வரலாம்.
இருமல், சளி போன்ற தொல்லைகள் வந்தால் அவற்றுக்குண்டான கிருமி நாசினி மாத்திரையை மூன்று அல்லது ஐந்து மாத்திரைகளோடு நிறுத்திவிடுதல் நல்ல தன்று.
ஏனெனில் குறைவான மருந்துகளை உட்கொள்வதால் நோய்க்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி மிகுதியாக அதிகரிக்க வாய்ப்புண்டு. அதனால் மருத்துவர் ஆலோசனையின்றி எம்மருந்தினையும் உட்கொள்தல் கூடாது.
சிறுசிறு தொல்லைகளுக்கெல்லாம் மருந்துக் கடைக்குச் சென்று மருந்தினை வாங்கி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். சுயசிகிச்சைமுறை சில நேரங்களில் தற்கொலைக்கு சமமானது என்றால் அது மிகையாகாது.