Homeஉடல் நலம்முதுமையில் மகிழ்ச்சியாக வாழ பத்து கட்டளைகள்!

முதுமையில் மகிழ்ச்சியாக வாழ பத்து கட்டளைகள்!

பிள்ளைகளைத் திருமணம் முடித்துக் கொடுத்து, பணியிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள், பின்வரும் பத்து கட்டளைகளைப் பின்பற்றினால் வாழ்வின் கடைசிப் பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்.

1. எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசிப் பகுதியில் உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்!

2. உங்கள் பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தைவளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள்.

3. விலகியே இருங்கள், உறவுகள் இனிமையாகத் தான் இருக்கும். என் பிள்ளை என் பிள்ளை எனப் பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியாக இருங்கள்.

4. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகளிடம் மதிப்பும், மரியாதையும், உரிமையும் உங்களுக்கு நிச்சயம் இருக்காது.

சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்திய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிர வேண்டாம். முழுவதும் பகிர்ந்தால், நீங்கள் நிற்க வேண்டியது நடுத்தெருவில்தான்!

5. காலம் முழுவதும் அவர்கள் உயர்வுக்காகப் பாடுபட்டு பல இழப்புகளைச் சந்தித்து இருப்பீர்கள். அவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்காட்ட வேண்டாம். உங்கள் கடமையைச் செய்தீர்கள் அவ்வளவே!

6. கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள். தேவைப்பட்டால், வருடம் ஒருமுறை பரிசுப் பொருட்களுடன் சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக இருந்து வாருங்கள். அங்கே அதிகம் தங்க வேண்டாம்.

7. எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் / மருமகன் முன் உங்கள் மனைவியை / கணவனை விட்டுக்கொடுத்துப் பேசாதீர்கள். உங்கள் இருவரில் ஒருவரையார் குறைத்துப் பேசினாலும் எதிர்க்குரல் கொடுக்கத் தவறாதீர்கள்.

பிள்ளைகள் வீட்டிற்குச் சென்றால், கூடவே உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர், சீப்பு, சோப் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

Click to Read: வாழ்க்கை ஓர் உல்லாசப் பயணம்!

8. அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்க வேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றிச் சொல்லி அவமானப்பட வேண்டாம். அவர்கள் வாழ்வது உங்கள் வாழ்ககை போல் போராட்ட வாழ்க்கை இல்லை.

நவீன கார்ப்பரேட் வாழ்க்கை. நீங்கள் 1000 ரூபாயைப் பெரியதாக நினைத்தவர்கள். அவர்கள் லட்சங்களைப் புரட்டிப் பார்ப்பவர்கள். எனவே, சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள்!

9. அதிக பாசம், ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். அநாவசிய அறிவுரைகளைத் தவிருங்கள்.

Click to Watch: வயசு 84 ஆகுது; எனது சந்தோஷத்தின் ரகசியம் 

10. உங்களைவிட அறிவிலும் திறமையிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுது தான் பிழைப்பீர்கள்.

அதிக அறிவுரைகள் இக்காலச் சந்ததியினருக்கு அறவே பிடிக்காது. நீங்கள் நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குறிகளே. தலையாட்டும் பொம்மைகளே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read