ஓசையோடு செயல்படக்கூடிய, சிலவேளைகளில் ஓசை இன்றியும், ஓசையின்றிச் செயல்படக்கூடிய சிலவேளைகளில் ஓசையோடும் செயல்படக்கூடிய வியத்தகு உள் உறுப்புகளைக் கொண்டதுதான் நமது உடல்!
இவ்வாறு உள் உறுப்புக்கள் ஓசையோடும், ஓசையின்றியும் வெவ்வேறு விதங்களில் செயல்படக் காரணம் என்னவென்று சிந்திப்போமேயானால் அவ்வுறுப்பு இயல்பாய்ச் செயல்படுகிறதா? அல்லது பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை எளிய முறையில் கண்டறிந்துக் கொள்ளத்தான் என்பதை அறிய முடிகிறது அல்லவா!
அந்த வகையில் சுவாசிக்கும் போது இயல்பான ஓசையின்றி ‘விசில்’ சத்தத்தோடு சுவாசம் நிகழுமேயானால் அந்த உறுப்பில் என்ன பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது?
அதற்கான தீர்வுகள் என்னென்ன? என்பதை விளக்குகிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள். அதனை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம்!
‘விசில்’ சத்தத்தோடு சுவாசம்!
சுவாசித்தல் நிகழ்வில் ‘விசில்’ சத்தத்தோடு சுவாசம் நிகழுக் காரணம் சுவாசக் குழல் சுருங்கி இருத்தலே! ஆஸ்துமா, சுவாச ஒவ்வாமை போன்ற நோய்த் தொற்றுக் காரணங்களால் சுவாசக் குழலானது சுருங்குகிறது.
மேலும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease-COPD) உள்ளவர்களுக்கும் இத்தகைய சுவாசக் கோளாறு ஏற்படுகின்றது.
READ ALSO: இரவு தூக்கத்தின்போது மூச்சு வாங்குதா?
சிலருக்கு வெளியில் கேட்காமல் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே இத்தகைய சத்தத்திற்குரியச் சுவாசமானது நிகழும். இதயத்துடிப்பு மானியை (Stethoscope) வைத்துக் கேட்கும் போது மட்டும் இந்தச் சத்தம் கேட்கும்.
இதற்குக் காரணம் அந்தக் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே சுவாசக் குழல் சுருங்கி இருக்கும்; இல்லையேல் கட்டி, அடைப்பு போன்ற தடைகள் இருக்கும்; காசநோய் போன்ற நோய்த் தொற்று இருக்கும். இவ்வாறு தடைகளுக்கு இடையில் அல்லது குறுகியப் பகுதிகளுக்கு இடையில் செல்லும் காற்று அவற்றோடு உராய்வு நிகழ்வில் ஈடுபடுகின்றது;
அந்த உராய்வின் விளைவே இந்த விசிலின் சத்தம். இந்த நோய்க்கு “மோனோபோனிக் மூச்சுத்திணறல் (Monophonic wheeze)” என்று பெயர். மேற்கூறிய உடல் உபாதைகளைத் தவிர்த்துச் சிலருக்கு இருதயக் கோளாறு, புற்றுநோய் இருக்கும் போது கூட ‘விசில்’ சத்தத்தோடு கூடிய சுவாசமானது நிகழும்.
சிகிச்சை முறைகள்
இத்தகைய நுரையீரல் நோய்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி (Bronchodilator) மருந்துகள் உள்ளன. அம்மருந்துகள் மூச்சுக் குழல் சுருங்காமல் காக்கின்றன.
அவை மாத்திரை வடிவிலும், திரவ (Inhaler) வடிவிலும் உள்ளன. அதனை முறையாக மருத்துவரை அணுகி, பரிசோதனைகளை மேற்கொண்டு, எடுத்துக் கொள்ளும் போது இத்தகைய நுரையீரல் நோய்களைக் கட்டுப்படுத்தவும் முடியும்; குணப்படுத்தவும் முடியும்!
READ ALSO: பல் சொத்தை வருவதற்கான முக்கியமான காரணம்
ஓசையுடன், ஓசையின்றிச் செயல்படுவது தான் ஓர் உறுப்பின் இயல்பான செயல் என்றால், அஃது இயல்பைத் தாண்டிச் செயல்படும்போது அதில் ஏதோ பாதிப்பு நிகழ்ந்துள்ளது;
அல்லது பாதிப்பு நிகழ இஃது அறிகுறியாக உள்ளது என்பதை அறிந்து, பாதிக்கப்படாமல், பாதிப்பு அதிகமாகாமல் முறையான சிகிச்சையைப் பெற்று உறுப்புக்களைப் பாதுகாத்துக் கொள்வோம்! நீண்ட ஆயுளைப் பெற்று, நலமாய் வாழ்வோம்!!