நோயில்லா உறுப்பு என்று எதுவும் இல்லை; நோய்த் தாக்கப்படாது என்று கூறும் அளவிற்கும் எந்த உறுப்பும் இல்லை; தலை முதல் பாதம் வரை, முடி முதல் பாதநகம் வரை நோய்களின் தாக்கம் எப்பொழுது நிகழும்? எப்படி நிகழும்? எதனால் நிகழும்? என்று யூகிக்கக் கூட முடியாத ஒரு வாழ்க்கையைத் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அப்படி இருக்க இதயத்தில் ஏற்பட்டிருக்கும் நோய்களைக் கண்டறியும் பரிசோதனை முறைகளை இங்கே அறிந்துகொள்வோம்; அதற்கு உதவுகிறார் இருதய நோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள்.

இதய நோய்ப் பரிசோதனைகள்
உங்களின் பெற்றோர், உடன்பிறப்புகள், பெற்றோரின் உடன்பிறப்புகள் என்று இவர்களில் யாரேனும் சுமார் 40 வயதில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் நீங்கள் 30 வயதிலேயே உங்களுக்கான பரிசோதனையைத் தொடங்குவது முதல் நிலைப் பரிசோதனை.
இந்த முதல் நிலைப் பரிசோதனை அடிப்படைப் பரிசோதனையும் ஆகும். இதில் மருத்துவர் உங்களுக்கு மரபு வழி ரீதியாக ஏதேனும் இதய நோய்த் தாக்குதல் வரலாறு உள்ளதா என்பதையும், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழும்பின் அளவு, புகைத்தல், மதுப் பழக்கம், உணவுப் பழக்கம் வழக்கம்,
உறக்க நிலை, உடற்பயிற்சிச் செய்யும் பழக்க வழக்கம், மன அழுத்தம், பதட்டம் போன்று உங்களைச் சார்ந்த இயல்பான, அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் தேவைப்படின், தேவைப்படும் மருத்துவத்தைத் தொடங்குவார்.
அதன் முறையே எலக்ட்ரோ கார்டியோகிராம் (Electrocardiogram -ECG), எக்கோ கார்டியோகிராம் (Echocardiogra) டிரெட்மில் பரிசோதனை (Treadmill Test), ஆஞ்சியோகிராம் (Angiogram), காந்த அதிர்வு இமேஜிங் (Magnetic resonance imaging – MRI), இதய பெட் ஸ்கேன் (Cardiac PET Scan) போன்றவை.
READ ALSO: உலகமே வியந்தும், மிரண்டும் பார்க்கும் நோய்

எலக்ட்ரோ கார்டியோகிராம் (Electrocardiogram-ECG)
எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) பரிசோதனை என்பது இதய நோய்களைக் கண்டறிய உதவும் அடிப்படையான பரிசோதனை முறை. மேலும் குறைந்த செலவில் அதிகத் தகவல்களை அளிக்கக்கூடிய பரிசோதனை முறையும் கூட!
இதன் மூலம் இருதயத்தின் மின்னூட்டம், இதய அறைகளின் அளவு, இதயத்தின் இரத்த ஓட்டம், குருதிஊட்டக் குறைபாட்டால் ஏற்படும் திசுச் சிதைவு (Ischemia), வால்வுகளில் அடைப்பு, மாரடைப்பு ஏற்பட்டுள்ள சுவடு போன்ற பல தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்!

எக்கோ கார்டியோகிராம் (Echocardiogram)
இஃது இதயத்தையே கண்ணால் பார்க்கக்கூடிய உயர்ந்தத் தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனை! இதன் மூலம் இதய அறைகளின் அளவு, வால்வுகளின் அளவு, இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை, இரத்த ஓட்டம், நீர்த் தோக்கம் போன்ற மற்றும் அது சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
ஆபத்தான நோய்த் தாக்கம் ஏதேனும் இருந்தால் வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும்; இல்லையேல், மூன்று வருடங்களுக்கு ஒரு முறைச் செய்துகொள்ளலாம்.

டிரெட்மில் பரிசோதனை (Treadmill Test)
எலக்ட்ரோ கார்டியோகிராம் (Electrocardiogram-ECG) மற்றும் எக்கோ கார்டியோகிராம் (Echocardiogra) பரிசோதனைகளில் சிக்கல்கள் ஏதும் இல்லை; இயல்பாய் இருப்பினும், இதயத்தில் நோய்த் தாக்கம் இருக்கும் என்று சந்தோகிக்கும் பட்சத்தில் நாம் எடுக்கும் பரிசோதனையே டிரெட்மில் பரிசோதனை (Treadmill Test).
இதிலும் கவனிக்கத்தக்க தகவல் என்னவென்றால் அதீத அடைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கும் நோயாளிகளுக்கு இந்தப் பரிசோதனை முறை உகந்தது அல்ல! காரணம், இதில் அவர்கள் நடைபயிற்சியில் ஈடுபடும் போதே கூட அதிக அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது;
எனவே இத்தகையோருக்கு இப்பரிசோதனையை மருத்துவர் மேற்கொள்ள மாட்டார். நடுநிலையான நோய்த் தாக்கம் இருக்கும் என்று சந்தோகிக்கப் படுவோர் மட்டுமே இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
இப்பரிசோதனையில் தீவிரமான அடைப்பு இருக்கிறது என்று பரிசோதனை முடிவு வருமாயின் ‘ஆஞ்சியோகிராம்’ பரிசோதனைத் தேவைப்படுகிறது; நடுநிலையான அடைப்பு இருக்கிறது என்ற பரிசோதனை முடிவில் இரத்தக் கொதிப்பின் அளவு, கொழுப்பின் அளவு, சர்க்கரையின் அளவு, உடல் பருமன் போன்றவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மாத்திரை உதவியுடனே நோயைக் குணப்படுத்தலாம்.
READ ALSO: மலச்சிக்கல் – காரணமும், மருந்தின்றி போக்கும் வழியும்!

ஆஞ்சியோகிராம் (Angiogram)
டிரெட்மில் பரிசோதனையில் அடைப்பு இருக்கிறது என்று உறுதியான பின்பு அடைப்பின் சதவீதம் எவ்வளவு என்பதைக் கண்டறிய உதவும் சோதனையே இந்த ஆஞ்சியோகிராம் பரிசோதனை.
இதற்கு உடல் முழுவதும் உணர்விழக்கச் செய்யும் மயக்கமருந்துத் தேவையில்லை; பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்யக்கூடிய சாதாரண மயக்கமருந்தே போதுமானது! இந்தச் சோதனையில் இரத்தக் குழாய் மூலம் வடிகுழாய் ஒன்று சொருகப்பட்டு, அதன் மூலம் அடைப்பின் சதவீதம் அறியப்படுகிறது;
இப்பரிசோதனையை நோயாளியே நேரடியாகக் காணலாம்; இப்பரிசோதனையின் மூலம் அந்த நொடியே அடைப்பின் சதவீதமானது கண்டறியப்படுகிறது; அடைப்பு இல்லாத போது இரண்டு மணிநேரக் கண்காணிப்பிற்குப் பிறகு நோயாளி வீட்டிற்கு அனுப்பப்படுவார்;
அடைப்பு இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு பின்பற்ற வேண்டிய மருத்துவம் மேற்கொள்ளப்படும்.

மேம்பட்டப் பரிசோதனைகள்
மேற்கூறியப் பரிசோதனைகளையும் தாண்டி நோயின் தீவிரம் அதிகமாக உள்ள நோயாளிகளுக்குக் காந்த அதிர்வு இமேஜிங் (Magnetic resonance imaging – MRI), இதய பெட் ஸ்கேன் (Cardiac PET Scan) போன்ற பரிசோதனைகளும் சிலவேளைகளில் பின்பற்றப்படுகின்றன.
‘தொழில்நுட்பங்கள் சிலவேளைகளில் ஆபத்தையும், அபாயத்தையும் ஏற்படுத்தினாலும் பலவேளைகளில் நன்மையை விளைவிக்கின்றன’ என்ற கூற்று இங்கே உண்மை என்று புலப்படுகிறது!
நாம் வாழக்கூடிய இச்சூழலில் நோய்கள் இல்லாமல் வாழ்தல் என்பது அசாதாரணமாகவே கருதப்படுகிறது! எனவே, நோய் இருக்கும் என்று சந்தேகக்கும் பட்சத்தில் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு அதீதப் பாதிப்புகளில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வோம்!! அதற்குத் தொழில்நுட்பத்தைத் துணையாய்க் கொள்வோம்!!
கட்டுரையாளர்
