Homeமன நலம்மாத்தி யோசி... வாழ்வை நேசி!

மாத்தி யோசி… வாழ்வை நேசி!

சில நேரங்களில் நெருங்கிய உறவுகளே எரிச்சல் தருவார்கள். சில சூழல்கள் விரக்தியை ஏற்படுத்தும். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி’ என நொந்துகொள்ளாமல், ஒரு மாறுதலுக்காக ‘பாசிட்டிவாக’ யோசித்தால் அந்தச் சோகத்திலிருந்து சுலபமாக மீண்டு வரலாம். அப்படி நேர்பட யோசித்து வாழ்வை நேசிக்க சில யோசனைகள்…

* இரவெல்லாம் ஓவராகக் குறட்டை விடும் கணவர், வீட்டில் யாரையும் தூங்க விடாமல் பாடாய்ப் படுத்துகிறாரா? எரிச்சலோடு அரைத் தூக்கத்தில் அவரைத் திட்டாமல் சந்தோஷப்படுவது நல்லது. இரவெல்லாம் கண்ட நண்பர்களோடு சேர்ந்துகொண்டு ஊர் சுற்றாமல், ஏதோ போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி எங்கோ ரோட்டோரம் விழுந்து கிடக்காமல், கெட்ட சகவாசம் பழகிப் பணத்தை ஊதாரியாகச் செலவழிக்காமல்… பொறுப்பாக வீட்டில் வந்து தூங்குகிறாரே என்று சந்தோஷப்படுவது நிம்மதி கொடுக்கும்.

* வார விடுமுறை நாட்களில் ஓய்வெடுக்கலாம் என நினைக்கும்போது, திடீர் விருந்தினர்களும் நண்பர்களுமாக அடிக்கடி வருகை தந்து வீட்டை நிறைத்து விடுகிறார்கள். ஸ்நாக்ஸும் சாப்பாடுமாக அவர்களை உபசரித்தாயிற்று. மாலையில் அவர்கள் கிளம்பிப் போனதும் சமையலறையில் குவிந்து கிடக்கும் பாத்திரங்களைத் துலக்க வேண்டுமே என மலைப்பு எழும்; குப்பையாகிக் கிடக்கும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமே என எரிச்சல் தோன்றும். அந்த எரிச்சலையும் அழகான சந்தோஷமாக மாற்றலாம். ‘அன்பான உறவினர்களும் நேசிக்கும் நண்பர்களும் சூழ வாழ்கிறோம்’ என நினைத்தால், எரிச்சல் மறைந்து சந்தோஷம் பொங்கும்.

* விடுமுறை நாட்களில் வீட்டு வேலைகளில் உதவி செய்யுமாறு டீன் ஏஜ் மகளிடம் சொன்னால், கண்டுகொள்ளாமல் செல்போனிலேயே பிஸியாக இருக்கிறாளா? ‘எனக்கு வேலை இருக்கு’ எனத் தட்டிக் கழிக்கிறாளா? டென்ஷன் ஆகாமல் சந்தோஷப்படுங்கள். எங்காவது வெளியில் போய், ‘எங்கு போனாளோ… எப்போது திரும்பி வருவாளோ’ என உங்களைப் பயத்தில் ஆழ்த்தாமல், உங்கள் கண்ணெதிரே வீட்டில் இருக்கிறாளே என்று சந்தோஷப்படுங்கள்.

* குழந்தைகளுக்கு வாங்கித் தரும் காஸ்ட்லி ஆடைகள், சில மாதங்களிலேயே அவர்கள் போட முடியாத அளவுக்கு சின்னதாகி விடுகின்றனவா? ‘இப்படி காசு கரியாகிப் போச்சே’ என எரிச்சலோடு திட்டாமல், ‘குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் அளவுக்கு சரிவிகித உணவுகளை அவர்களுக்குத் தர முடிகிற நல்ல சூழலில் இருக்கிறோம்’ என நினைத்துப் பாருங்கள். உற்சாகம் ஊற்றெடுக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளில், துவைக்கவும் அயர்ன் செய்யவும் வேண்டிய துணிகள் மலைபோலக் குவிந்து கிடக்கிறதா? இதையெல்லாம் ரெடி செய்ய வேண்டுமே என்ற மலைப்பான நினைப்பே எரிச்சலைக் கிளப்புகிறதா? ‘இவ்வளவு வெரைட்டியாக ஏராளமான ஆடைகளை வாங்கி அணியும் வசதியான வாழ்க்கை நமக்கு வாய்த்திருக்கிறதே’ என்று பாசிட்டிவாக யோசித்தால் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

* மார்க்கெட்டுக்கோ, கோயிலுக்கோ வாகனத்தில் போனால், பக்கத்தில் வண்டியை நிறுத்த இடம் கிடைக்காமல் ரொம்ப தூரத்தில் கொண்டுபோய் பார்க் செய்துவிட்டு, வெயிலில் நடந்து வர வேண்டியிருக்கிறதா? வியர்வை கசகசப்பில் எரிச்சல் அடையாதீர்கள். இப்படி வெளியிடங்களுக்குப் போய்வர சொந்த வாகனம் இருக்கிறதே என்று சந்தோஷப்படுங்கள்; தூரத்தில் வாகனத்தை நிறுத்த நேர்ந்தாலும், அங்கிருந்து நடக்கும் அளவுக்கு ஆரோக்கியமாக வாழ்கிறோமே என்று பெருமிதப்படுங்கள்!

* ‘மெயின் ரோடு ஓரமாக வீடு இருப்பதால் எவ்வளவு அவஸ்தை? கண்டபடி தூசு படிகிற ஜன்னல்களை வாரா வாரம் ஒட்டடை அடிக்க வேண்டியிருக்கிறதே… அடிக்கடி துடைத்தாலும் தரை டைல்ஸ்களில் கறை படிகிறதே…’ என்று எரிச்சல் அடையாதீர்கள். ‘நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. அதுவும் பிரதான சாலையை ஒட்டி இருக்கிறது. நம் சொத்து என்பதால்தான் இப்படி அக்கறையோடு அதைப் பராமரிக்கிறோம்’ என பாசிட்டிவாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது.

* ஆபீசிலும் வீட்டிலும் நாள்முழுக்க உழைத்துவிட்டு இரவு படுக்கையில் சாயும்போது, உடம்பு முழுக்க வலி பின்னியெடுக்கிறதா? தூங்கவிடாமல் செய்கிறதா? ‘ஏன் உடம்பு இப்படி படுத்துகிறது’ என எரிச்சல் அடையாதீர்கள். மன உறுதியோடு கடினமாக உழைக்க நம்மால் முடிகிறதே என்று சந்தோஷப்படுங்கள். நிம்மதியான உறக்கம் வந்து தழுவும்!

* விடுமுறை நாளில் மதியம் கொஞ்சம் தூங்கலாம் எனப் படுக்கையில் சாயும்போது, அக்கம்பக்க வீடுகளின் குழந்தைகள் ஆட்டம் போட்டு எழுப்பும் கூச்சலில் நிம்மதி பறிபோகிறதா? நோ டென்ஷன்! உற்சாகமான குழந்தைகள் சூழ்ந்திருக்கும் ஓர் இடத்தில் வாழ்கிறோம் என நினைத்தால், அவர்களின் உற்சாகம் உங்களையும் தொற்றிக் கொள்ளும். அவர்கள் போடும் கூச்சல் உங்கள் காதுகளில் விழுகிறது என்றால், உங்களின் கேட்கும் திறன் பழுதின்றி துல்லியமாக இருக்கிறது என்று பெருமிதப்படுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read