அவர் பெயர் திரு. திருநாவுக்கரசு, 72 வயதுக்காரர். ஒரு மெதுவாக எனது கிளினிக் வந்து, எதிரில் அமர்ந்தார். ‘என்ன தொந்தரவு’ என்று கேட்டபோது அவர் கூறியதை அப்படியே எழுதுகிறேன். *“டாக்டர், எனக்கு சில மாதங்களாக கையில் லேசான நடுக்கம் ஏற்படுகிறது. அது பல பேர் முன்னிலையில் இருக்கும்போது அதிகமாகிறது. இதனால் அடுத்தவர்கள் முன்பு காபி, டீ மற்றும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கிறேன். கை நடுக்கத்தால் சரியாக எழுத முடியவில்லை. கையெழுத்து சரி இல்லை என்று வங்கியில் எனது செக்கை திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
இப்படி பல தொல்லைகள் ஏற்படுகின்றன. நடுக்கம் எதனால் வருகிறது? இது முதுமையால் வரும் ஒரு தொல்லையா? அல்லது வேறு ஏதாவது நோயா? சற்று விவரமாகச் சொல்லுங்கள்” என்று பதற்றமாகச் சொன்னார், நான் அவருக்குக் கூறியதை அப்படியே கட்டுரை வடிவில் கொடுத்துள்ளேன்..
கை, கால் நடுக்கம் எந்த வயதிலும் வரலாம். ஆனால், 60 வயதைத் தாண்டியவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வயதானால் இது சகஜம்தான்’ என நினைத்துக்கொண்டு அவர்கள் மருத்துவரிடம் செல்வதில்லை. ஆனால், இப்படி இருக்கக்கூடாது. அது சாதாரண நடுக்கமாகவும் இருக்கலாம். அல்லது ‘உதறுவாதம்’ எனப்படும் பார்க்கின்சன்ஸ் நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். கை, கால்கள் நடுக்கத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, சாதாரண நடுக்கம். (Essential Tremor). இது முதுமையின் விளைவே ஆகும். இரண்டு, பல நோய்களாலும் மருந்துகளாலும் கை, கால்கள் நடுக்கம் ஏற்படுதல். (Secondary Tremor).
உதாரணமாக மது அதிகமாக அருந்துவது, மதுவை திடீரென்று நிறுத்துவது, தைராய்டு அதிகமாகச் சுரத்தல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழத்தல், நரம்பு சார்ந்த நோய்கள், மனப்பதற்றம், மிகுந்த களைப்பு போன்ற காரணங்களால் நடுக்கம் ஏற்படும். ஆஸ்துமா மற்றும் மனநோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகளும் இந்த நடுக்கத்தை ஏற்படுத்தும்.
சாதாரண நடுக்கத்திற்கும் உதறுவாத நடுக்கத்திற்கும் உள்ள வித்தியாசங்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.
எந்த நேரங்களில் நடுக்கம் ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். சாதாரண நடுக்கத்தில், கைகளைச் சாதாரணமாக தொடை மேல் வைத்துக் கொண்டு இருக்கும்போது விரல்களில் நடுக்கம் இருக்காது. ஆனால் கைகளை உயர்த்தி முகத்திற்கு எதிரே நீட்டினால் நடுக்கம் தெரியும். காபியை கோப்பையில் ஊற்றும்போதோ, ஏதாவது எழுதும்போதோ விரல்கள் நடுங்கும். பரம்பரை காரணமாகவும் இது வருகிறது. காபி போன்ற பானங்கள் குடிப்பதும், மனப் பதற்றமும் இந்த நடுக்கத்தை அதிகமாக்குகிறது. காலப்போக்கில் இவர்களின் கையெழுத்தே மாறிவிடும்.
நோய்கள் மற்றும் மருந்துகளால் நடுக்கம் வந்தால், அதற்கு தக்க சிகிச்சை அளிக்கவேண்டும். நடுக்கம் வருவதற்கு எந்தக் காரணமும் தெரியவில்லை என்றால், அது வயதான காலத்தில் ஏற்படும் நடுக்கம் என்று முடிவுசெய்து அதற்கான சிகிச்சையை அளிக்க வேண்டும். முதியோர்களுக்கு விவரமாக எடுத்துக் கூறி தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக இது உதறுவாதம் (Parkinsonism) போன்ற ஒரு கொடிய நோயினால் ஏற்படும் நடுக்கம் அல்ல என்று தெளிவுபடுத்த வேண்டும்.
உதறுவாத நோயால் வரும் நடுக்கம் என்பது, கை, கால்களை சும்மா வைத்திருந்தாலே ஏற்படும். கை, கால்களை அசைக்கும்போது நடுக்கம் அதிகமாகும். கையெழுத்து சிறியதாகிவிடும். தசைகள் இறுகிவிடும். நடப்பதில் சிரமம் ஏற்படும். நடுக்கம் திடீரென ஆரம்பித்து, சில நாட்களிலேயே அதிகமானால், அது உதறுவாதமாக இருக்க வாய்ப்பு உண்டு.
முதுமையில் ஏற்படும் சாதாரண நடுக்கத்திற்கு மருந்து எதுவும் தேவைப்படாது. கை நடுக்கத்தைக் குறைப்பதற்கு என்றே தனியாக மாத்திரைகள் உண்டு.
உதாரணம்: beta blockers மற்றும் வலிப்புக்குக் கொடுக்கும் மாத்திரைகள். சிலருக்கு மன அமைதிக்கு கொடுக்கும் மாத்திரையும் தேவைப்படலாம்.
பார்க்கின்சன்ஸ் நோயின் முதல் அறிகுறியே. சிலருக்குக் கையில் ஏற்படும் நடுக்கமாக இருக்கலாம். தொடக்கத்தில் கையில் ஒரு மாத்திரையை வைத்து எப்பொழுதும் உருட்டுவது போல் (pill-rolling motion) செய்து கொண்டிருப்பார்கள். நடுக்கம் முதலில் ஒரு பக்க கை அல்லது கால்களில் ஆரம்பித்து அடுத்த பக்கத்துக்கு வரும். ஆரம்ப நிலையில் இந்நோய் சுமார் 30% நோயாளிகளுக்கு நடுக்கம் இல்லாமலேயே இருக்கும்.
முதுமைக் காலத்தில் உண்டாகும் நடுக்கத்தைப் பற்றி கவலை வேண்டாம். அதே நேரத்தில் அதை முதுமையின் விளைவு என்று அலட்சியப்படுத்தவும் வேண்டாம். எந்த நடுக்கத்திற்கும் சிகிச்சை உண்டு.
நான் விரிவாகக் கூறியதைக் கேட்டு சற்று மனநிறைவுடன் தனது கைகளை கூப்பி நன்றி கூறி விடை பெற்றார் திருநாவுக்கரசு.
– பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராசன்
முதியோர் நல மருத்துவர்