கூட்டுக் குடும்பம் சிதறுவதால் பல முதியவர்கள் தளித்து வாழ்கிறார்கள். அவர்களின் துன்ப காலத்தில் வாரிசுகள் ஓரளவுக்கு உதவுவார்கள். வாரிசுகளே இல்லாத முதியவர்களுக்கு நிதி உதவி செய்ய அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றி உள்ளது. அதாவது சொந்த வீடு இருந்தால், அந்த வீட்டின்மீது வங்கியிலிருந்து கடன் பெற்று தங்களின் கடைசி காலம்வரை நிம்மதியாக வாழலாம். அந்தத் திட்டத்தின் பெயர்தான் திருப்பித் தரும் அடமானக் கடன் (Reverse Mortgage).

வீடு கட்ட கடன் பெறுவதோ, வீட்டை அடமானம் வைத்து கடன் பெறுவதோ நாம் அறிந்தவையே. கடன்தொகையை வட்டியுடன் சேர்த்து தவணைகளில் திரும்பச் செலுத்திக் கடனை அடைப்பது வழக்கமான நடைமுறை. இதற்கு நேர்மாறாக வீட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்பச் செலுத்த வேண்டிய அவசியம் இன்றி முதியோர் பெற்றுக்கொள்ள வசதி செய்து தருவதே இத்திட்டத்தின் சிறப்பம்சம்.
60 வயது நிரம்பிய முதியோர் பலர் ஓய்வூதியம் ஏதுமின்றி, ஆதரிக்கவும் யாரும் இல்லாத சூழ்நிலையில், சொந்த வீடு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற ஓர் உதவியை நல்கவே இந்த அடமானக் கடன் வசதி. இது ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இதையும் படிக்கலாமே! என் கடைசி ஆசையை நிறைவேற்றுவீர்களா?
இத்திட்டத்தின்கீழ் கணவனும் மனைவியும் தாங்கள் கட்டிய / பெற்ற வீட்டில் தங்கள் வாழ்நாள் முழுவதையும் கழிக்கலாம். தாங்கள் பெறும் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய தேவையில்லை. அவர்கள் இருவரின் வாழ்நாளுக்கும் பிறகு, கடன் அளித்த நிறுவனம் வீட்டை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, அதனை விற்று கடன்தொகையை சரி செய்துகொள்ளலாம். கடன் தொகை போக மீதம் இருப்பின், அத்தொகையை வாரிசுதாரர் பெற்றுக் கொள்ளலாம். வாரிசுதாரர்கள் விரும்பினால் கடன்தொகையை அடைத்து வீட்டை தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம்.

இந்த மாற்றுக் கடன் திட்டம் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
வீட்டின் மதிப்பில் 50 விழுக்காடு மட்டுமே கடன் வசதிக்கு ஏற்கப்படும்.
வீட்டின் சந்தை மதிப்பு குறையும் பட்சத்தில் அவ்வப்போது வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு அளிக்கப்படும் கடன் மதிப்பும் குறைக்கப்படும். இதை இத்திட்டத்தில் உள்ள குறைபாடு என்றே கருதலாம்.
பத்தாண்டுகளுக்கு மட்டுமே இந்தக் கடன் வசதி அளிக்கப்படும். அதற்குப் பிறகும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கணவன் / மனைவி அதே வீட்டில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தங்கி இருக்கலாம்.
பத்தாண்டுகளுக்குப் பிறகும் இந்த கடன் வசதியை புதுப்பித்துக் கொள்ளலாம். அன்றைய தேதியில் வீட்டின் மதிப்பில் பாதி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு கடன் வசதி தொடர்ந்து அளிக்கப்படும். வீட்டின் சந்தை மதிப்பு கூடும்போது கடன் வசதியில் அதிக பாதிப்பு இருக்காது. சந்தை மதிப்பு குறைந்து விட்டால் கடன் தொகையும் குறையும்.

சொந்த வீடு ஒன்றைத் தவிர வேறு எவ்வித வருமானமோ, பாதுகாப்போ இல்லாத முதியவர்கள் தங்கள் சுயமுயற்சியால் வீட்டை விற்பதோ, அத்தொகையை வாழ்நாள் முழுதும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதோ இன்றைய சூழ்நிலையில் மிகவும் கடினம். மேலும் வீட்டு விற்பனை, வருமான வரி சட்டத்துக்கு உட்பட்டதாகும். நலிந்துள்ள பெரியவர்கள், யாரையும் சார்ந்து இருக்காமல் தன்மானத்துடன் இனிதே வாழ்ந்திட இத்திட்டம் பயன்படும் என்பது உறுதி.
முதியோர் தனித்து இருந்து வாழ்நாளைக் சுழிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சமூக, குடும்ப சூழ்நிலைகள் காரணமாக நம் நாட்டில் இது இன்னமும் வரவேற்பு பெறவில்லை.
அனைத்துச் சட்டங்களும் உயரிய உள்நோக்குடன் இயற்றப்பட்டாலும் அதிலுள்ள சந்துபொந்துகளில் புகுந்து சட்ட விரோத சக்திகள் பயன் அடைய முயல்வது தவிர்க்க இயலாதது என்பது வருத்தமளிக்கும் உண்மையே!
– ஆடலரசு