Homeஉடல் நலம்அச்சுறுத்தும் ‘காசநோய்’; தடுப்பது எப்படி?

அச்சுறுத்தும் ‘காசநோய்’; தடுப்பது எப்படி?

ஒரு காலத்தில் ‘காசநோய்’ கூட உயிர் கொல்லி நோயாகவே இருந்தது.‌ மருத்துவ வளர்ச்சியின் காரணமாக இப்போது அஃது அச்சுறுத்தும் நோயாக உருமாறி உள்ளது.

ஆனால் இப்போது கூட அது சாதாரண நோயாகக் கருதப்படுவது இல்லை. காரணம் அது பரவும் முறைகளும், தாக்கமும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே!

இத்தகைய அச்சுறுத்தும் நோயான காசநோய்க் குறித்த விழிப்புணர்வுத் தகவல்களைத் தருகிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள். அதனை இங்கே அறிந்து கொள்வோம்!

காசநோய்

காசநோய் ‘மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis)’ என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது. இஃது இயல்பாகக் காற்றில் பரவும். எனவே இதன் பரவல் வேகம் மிக அதிகம்.

இது காற்றின் மூலம் பரவுவதால் முதலில் நுரையீரலையே பாதிக்கிறது. எண்பது சதவீதம் நுரையீரலைப் பாதிக்கும் இது, நுரையீரலைச் சுற்றியுள்ள பிற உறுப்புகளை இருபது சதவீதம் பாதிக்கிறது.

இவ்வாறு நுரையீரலில் வாழும் இந்த நுண்ணுயிரி இரத்தத்தின் மூலம் நிணநீர் மண்டலத்தைத் தாக்குகிறது. இவ்வாறாக இதயம், கழுத்து, மூளை, எலும்பு, எலும்பு இணைப்புகள், கண், குடல், தோல் என்று அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது.

READ ALSO: உலகமே வியந்தும், மிரண்டும் பார்க்கும் நோய்

காசநோயின் அறிகுறிகள்

எண்பது சதவீதம் காசநோய் நுரையீரலைத் தாக்குவதால் இதன் அறிகுறிகளை முதலில் காண்போம்.

சளியில் இரத்தம் (Blood cough), காய்ச்சல் (Fever), நெஞ்சு வலி (Chest pain), குளிர் (Chills), நீண்டக் கால இருமல், (Long term cough) சோர்வு (Fatigue), இரவில் வியர்த்தல் (Night sweats), எடை இழப்பு (Weight loss), பசியின்மை (loss of appetite) போன்றவை நுரையீரல் காசநோயின் அறிகுறிகள்.

மேலும் எலும்பில் இருப்பில் எலும்பில் வலி, வயிற்றில் இருப்பின் வயிற்றுப் போக்கு, பசியின்மை என்று நோய்ப் பாதிப்பு உள்ள இடத்திற்கு ஏற்ப அறிகுறிகள் மாறுபடும்.

கண்டறியும் முறைகளும், மருத்துவமும்

மார்பு எக்ஸ்ரே (chest x-ray), சளி மாதிரியைக் கொண்டு ஆசிட்-ஃபாஸ்ட் பேசிலஸ் பரிசோதனை (Acid-Fast Bacillus -AFB), ஜீன் எக்ஸ்பெர்ட்

(Gene Xpert) பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

READ ALSO: மலச்சிக்கல் – காரணமும், மருந்தின்றி போக்கும் வழியும்!

தடுப்பு நடவடிக்கைகள்

காசநோய்ச் சளி மற்றும் இருமலால் காற்றின் மூலம் பரவுவதால், நோய்ப் பரவலைத் தவிர்க்க நோயாளிகள் குறைந்தது மூன்று வாரங்களாவது முகக் கவசம் அணிய வேண்டும்.

இரும்பும் போது காற்றில் பரவா வண்ணம் வாயைக் கைகளால் மூடிக் கொண்டு இரும்ப வேண்டும். ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது காசநோய் முற்றிலும் குணமாகும் நோயே!

‘காற்று’ இன்றி நம்மால் வாழ இயலாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனில் காற்றின் மூலம் பரவும் நோய்கள் இன்றி வாழ்வதும் சற்றுச் சாத்தியம் இல்லாததே.

எனினும் நோய் எதிர்ப்பாற்றல் நமக்குச் சிறப்பாக இருப்பின் நோயின்றி வாழ்வதும் சாத்தியமே! எனவே தொற்று நோய்கள் இன்றி வாழ நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்வோம்! நோய்கள் இன்றி வாழ்வோம்!!

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read