மனிதர்கள் பணிக்குச் செல்வதே தங்களின் வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ளவே. சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவும் என்று எண்ணிச் செய்யக் கூடிய பணிகளே அவர்களின் உயிரைப் பாதிக்கிறது என்றால், என்ன தான் செய்வது?
அதற்காகப் பணியையோ, அதன் மீது ஏற்பட்ட விருப்பத்தையோ மாற்றிக்கொள்ள இயலாது அல்லவா? இதற்கு என்ன தான் தீர்வு? இத்தகைய குழப்பமான, புதிரான வினாக்களுக்கு விடையளிக்கிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள்.
பணியும், பிணியும்
புகை, தூசி, மாசு, கதிர்வீச்சு நிறைந்த பணிகளும், பணித்தளங்களும் நுரையீரல் நோய்களுக்குக் காரணமாக உள்ளன. இத்தகைய பணித்தளங்களாகச் சர்க்கரை ஆலைகள், பருத்தி நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் போன்றவற்றைக் கூறலாம்.
READ ALSO: அச்சுறுத்தும் ‘காசநோய்’; தடுப்பது எப்படி?
இத்தகைய பணித்தளங்களில் பணிப்புரிவோரின் நுரையீரலினுள் புகை, தூசி, மாசு, போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் மற்றும் கதிர்வீச்சுச் சென்று சிறிது, சிறிதாகப் பாதிக்கத் தொடங்குகின்றன. இந்தத் தாக்கத்தை நிமோகோனியோசிஸ் (Pneumoconiosis) என்று அழைக்கிறோம்.
இந்நோயினால் தாக்கப்படும் போது நுரையீரலின் மூச்சுக்குழல் சுருங்கத் தொடங்குகிறது. இதனால் இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சு இரைத்தல் போன்ற இடர்பாடுகள் ஏற்படுகின்றன.
இந்நோய்ப் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்தலாம். கண்டறியத் தவறும் பட்சத்தில் முறையாகச் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது அதீதப் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
மேலும் இந்நோயால் தாக்கப்பட்டாமல் இருக்க ‘தொழில்துறை வடிகட்டி முகமூடி’ என்று அழைக்கப்படும் Industrial Filters Mask அணிவது மிக, மிக இன்றியமையாதது.
சிறிய முகக் கவசம் கூட உங்களின் உயிர் கவசமே! முகக் கவசம் அணிந்து, நுரையீரலைப் பாதுகாப்பீர்!! உங்களின் விருப்பான பணியைப் பாதுகாப்பாய்த் தொடர்வீர்!!!