நீரிழிவு நோயாளிகள் பாத பராமரிப்பை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் பாதத்தில் ஏற்படும் சில புண்கள் காரணமாக அவர்கள் கால்களை இழக்கும் சூழல் ஏற்படலாம். எனவே இதை சமாளிக்க பாத பராமரிப்பு எப்படி மேற்கொள்ளலாம் என அறிவோம்.
தினசரி பரிசோதிக்கவும்
வெட்டுக்கள், கொப்புளங்கள், சிவத்தல், வீக்கம் அல்லது நகப் பிரச்னைகள் உள்ளனவா என ஒவ்வொரு நாளும் உங்கள் பாதங்களைச் சரிபார்க்கவும். தேவைப்பட்டால் கண்ணாடி அல்லது லென்ஸ் (magnifying glass or mirror) பயன்படுத்தவும்.
கால் சுகாதாரம் பராமரிக்கவும்
ஸ்பாஞ்ச் அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தி தினமும் உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவித் துடைக்கவும். குளிப்பதற்கு முன் எப்போதும் நீரின் வெப்பநிலையை சோதிக்கவும்.
இதையும் படிக்கலாமே: பாதத்தையும் கொஞ்சம் பாருங்கள்! நீண்ட காலப் பிரச்னை நீரிழிவு பாதம்!
ஈரப்பதமாக்குங்கள் (Moisturize)
உங்கள் கால்களைக் கழுவி உலர்த்திய பிறகு, அவற்றை ஒரு நல்ல ஃபுட் கிரீம் மூலம் ஈரப்படுத்தவும். ஆனால், உங்கள் கால்விரல்களுக்கு இடையில் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில், அது பூஞ்சை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
நகங்களை கவனமாக வெட்டவும்
உங்கள் கால் விரல் நகங்களை நேராக வெட்டி, உடைதலைத் தவிர்க்கும் வகையில் விளிம்புகளைச் சரி செய்யவும்.
சரியான காலணிகளைத் தேர்ந்தெடுங்கள்
உங்கள் கால்களைத் தாங்கும் வகையிலான பொருத்தமான காலணிகளை அணியுங்கள்.
ஒரே ஜோடி காலணிகளை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அணியாதீர்கள். ஒவ்வொரு ஜோடியும் முழுமையாக உலர போதுமான நேரத்தை வழங்குங்கள்.
சுத்தமான சாக்ஸ் அணியுங்கள்
தேவையற்ற அழுத்தத்தைத் தடுக்கும் சிறப்பு நீரிழிவு காலுறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: நீரிழிவு பாதம் – விளைவுகள் என்ன? தடுப்பது எப்படி?
சுறுசுறுப்பாக இருங்கள்
வழக்கமான உடற்பயிற்சி கால்களில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எந்தெந்த உடற்பயிற்சிகள் உங்களுக்குச் சிறந்தவை என்பதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும்
ரத்த சர்க்கரை அளவை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த வரம்புக்குள் பராமரிக்கவும்.
மருத்துவ ஆலோசனையைப் பெறவும்
ஏதேனும் அசாதாரண அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக பாத மருத்துவர் அல்லது நீரிழிவு மருத்துவரை அணுகவும்.
நீரிழிவு பாதம் (Diabetic Foot) பற்றிய இந்த தொடரில் நீரிழிவு பாதம் பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்று இந்தக் கட்டுரையில் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டுரையில் நீரிழிவு பாதம் பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் செய்ய கூடாதவை என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.