யார் இந்த பராமரிப்பாளர் (Caregiver)?
பராமரிப்பாளர் என்பவர் உதவி தேவைப்படும் நோயாளி ஒருவரைக் கவனித்துக்கொள்கிறார். உதவி தேவைப்படும் நபர் குழந்தையாகவோ, பெரியவராகவோ இருக்கலாம். காயம் அல்லது இயலாமை காரணமாக அவருக்கு உதவி தேவைப்படலாம். அல்லது அல்சைமர் பிரச்னை அல்லது புற்றுநோய் போன்ற முற்றிய சிக்கல்கள் அவருக்கு இருக்கலாம்.
பெரும்பாலான பராமரிப்பாளர்கள் முறைசாரா பராமரிப்பாளர்களே. அவர்கள் பொதுவாக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்களாகவே இருக்கிறார்கள். தொழில்முறை பராமரிப்பாளர்களாக இருப்பவர்கள் பயிற்சி பெற்ற நிபுணர்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் பணி செய்கிறவர்களாகவோ, மருத்துவமனை அல்லது ஏதேனும் அமைப்பைச் சார்ந்தவர்களாகவோ இருப்பார்கள்.
பராமரிப்பாளரின் அடிப்படைப் பணிகள் என்னென்ன?
பராமரிப்பாளர்கள் வீட்டிலோ, மருத்துவமனையிலோ, பிற சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பிலோ சிகிச்சை அளிக்கலாம். பராமரிப்பாளர்கள் செய்யும் பணிகளின் வகைகளில் பின்வருவன அடங்கும்:
- குளிப்பது, சாப்பிடுவது அல்லது மருந்து எடுத்துக்கொள்வது போன்ற அன்றாடப் பணிகளுக்கு உதவுதல்
- வீட்டு வேலைகள், சமையல் செய்வது
- உணவு மற்றும் துணிகளை வாங்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது
- மருத்துவப் பராமரிப்பு, மருத்துவ ஆலோசனை பெற ஏற்பாடு செய்வது
- உடல்நலம் மற்றும் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க உதவுவது
- உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவது
பராமரிப்புப் பணியின் சிறப்புகளும் சிக்கல்களும்
ஒருவர் உயிர் வாழ உதவுவது உண்மையிலேயே மகத்தான செயல். மற்றவருக்கு உதவுவதன் மூலம் மிகப்பெரிய திருப்தி அடைய முடியும். பராமரிப்பாளராகச் செயல்படும் நீங்கள் பெருங்கூட்டத்தில் ஒருவர் அல்ல; ஆயிரத்தில் ஒருவர்!
அதே நேரத்தில் ஒரு நோயாளியைக் கவனிப்பது சில நேரங்களில் மன அழுத்தத்தை அதிகரிப்பதாகவும் இருக்கலாம். ஆம்… நீங்கள் 24 மணிநேரமும் ’அழைப்பில்’ இருக்கலாம். நீங்கள் உங்களுடைய மற்ற பணிகளில் ஈடுபடுவதில் தடங்கல்கள் ஏற்படலாம். நேர மேலாண்மை, தனிப்பட்ட விருப்பங்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றில் குழப்பங்கள் ஏற்படலாம். அதனால், உங்கள் சொந்த தேவைகளை நீங்கள் புறக்கணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப திட்டமிட்டே பணிசெய்ய வேண்டும்.
உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நீங்கள் நன்றாக உணரும்போதுதான், உங்கள் அன்புக்குரியவரை நன்றாகக் கவனித்துக் கொள்ள முடியும்!