Homeஉடல் நலம்முதுமையின் இளமைரிடையர்மெண்ட் காலத்தில் வீடு கட்ட முடியுமா?

ரிடையர்மெண்ட் காலத்தில் வீடு கட்ட முடியுமா?

Senior Citizen @ Happy Home

கின்னஸ் உலக சாதனை பதிவுகளைப் பார்த்தால் பல ஆச்சரியமான விஷயங்களை நாம் காண முடியும்.

  • 84 வயது சீனியர் வானிலிருந்து பாராசூட்டிலிருந்து கீழே குதிக்கிறார்!
  • 90 வயதில் நடனப் போட்டியில் ஆடி அசத்துகிறார் ஒருன் சீனியர் பெண்மணி!
    சாதனைகள் செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதற்கு இவையெல்லாம் ஒரு துளி உதாரணங்கள். ஆனால், இதுபோன்ற சாதனைகள் பெரும்பாலும் மேற்கத்திய உலகில்தான் நடக்கின்றன.

நம் ஊரிலோ 60 வயதை எட்டிவிட்டாலே, ‘இனி வாழ்க்கையே அவ்வளவுதான். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. மனம் விரும்பினாலும் உடல் ஒத்துழைக்காது. நோய்கள் வந்து தாக்கும். அனேகமாக படுத்த படுக்கைதான். போவதற்கு தயாராகி விட வேண்டியதுதான்’’ என்கிற மனநிலைக்கு வந்துவிடுகிறோம்.

உண்மையில், நீங்கள் நம்புவது உங்களுக்கு நடக்கும். பாசிட்டிவாகச் சிந்தித்தால், அதே போல நடக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு வாழ்க்கையை இனிதாக்கிக் கொள்ள முடியும். குடும்பத்தினருக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிக்கிற உன்னதமான நபராக நீங்கள் உருவெடுக்க முடியும்.

நெகட்டிவான மனநிலையில் இருந்தாலோ, அது வேற மாதிரி! என்னவெல்லாம் நடக்கும் என்று நாம் சொல்லவேண்டியதே இல்லை. ஏனெனில், இனி நாம் எதிர்மறைச் சிந்தனைகளுக்குள் சிக்கப் போவதில்லை. சரிதானே!

நீங்கள் 60-வது வயதில் ஓய்வுபெறும்போது இப்படிச் சொல்லுங்கள்.
‘My second half will be more glorious than the first half’
‘முதல் பாதியை விட எனது இரண்டாம் பாதி வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும்!’
இதை உங்கள் மனத்துக்குள் மட்டுமல்ல… குடும்பத்தினரிடம், உறவினரிடம், நண்பர்களிடமும் கூறுங்கள். காலையில் நீங்கள் எழுந்தவுடன்

ஆம்… அது அப்படியே நடக்கும்! பணியில் இருக்கும்போது செய்ய முடியாத பல காரியங்களை, ஓய்வுபெற்ற பின் செய்து முடிக்க முடியும். அழகான ஒரு வீடு கட்ட முடியும் அல்லது வீட்டை மறுசீரமைப்பு செய்ய முடியும். சுற்றுலா செல்ல முடியும். நிறைய புத்தகங்கள் படிக்க முடியும். உங்களால் புத்தகம் எழுதவும் முடியும். எளியவர்களுக்கு உதவுவதை வழக்கமாக்க முடியும். உறவுகள், நட்புகளை அடிக்கடி சந்தித்து அளவளாவ முடியும். பேரக் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியும்.

அப்படியானால் உடல் சார்ந்த பிரச்னைகள்? அது அவ்வப்போது வரும் போகும். பிரச்னைகளே இல்லை என்று சொல்ல முடியாதுதான். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ சோதனைகள், மருத்துவரின் ஆலோசனை, மருத்துவக் காப்பீடு… இவை மூன்றும் இருக்கும்போது அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உடற்பயிற்சியிலும் உணவிலும் கவனம் செலுத்தினாலே போதும். அவ்வாறு செய்தால் அப்போதைய உடல் உபாதைகளை புறந்தள்ளிவிட்டு மகிழ்ச்சியோடு வாழ முடியும். அதனால், வயது என்பது வெறும் ஒரு எண் மட்டுமே. இந்த நம்பிக்கையுடன் வாழுங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

இனி, சுமூகமான குடும்ப உறவுக்கும் பாதுகாப்புக்கும் பெரியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

  • உணவில் கட்டுப்பாட்டை கடை பிடியுங்கள். உணவின் அளவையும் சர்க்கரையையும் உப்பையும் கொழுப்பையும் குறைக்கச் சொல்கிறார்களா, உங்கள் குடும்பத்தினர்? அதெல்லாம் உங்கள் மீதான அக்கறையில்தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
  • சமையலறை, குளியலறையில் கவனமாக இருங்கள். சிறு அலட்சியம் உங்களை மட்டுமல்ல… எல்லோரையும் சிரமத்துக்குள்ளாக்கும் என்பது உங்களுக்கே தெரியும். மின்சாதனங்களை, கண்ணாடிப் பொருள்களைக் கையாளும்போதும் இது பொருந்தும்.
  • வாக்கிங் ஸ்டிக் அல்லது வாக்கர் உபயோகிக்கக் கூச்சப்பட வேண்டியதில்லை. அது உங்கள் பாதுகாப்புக்கு அவசியமானது.
  • அண்டைவீட்டாரிடம் மருமகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது. குடும்பத்தில் சுமூக உறவு நிலைக்க இது அவசியம்.
  • மருமகள் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்ப்பதைக் கைவிட்டுவிட்டு, இனிமையான பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துங்கள்.
  • இணையம், ஸ்மார்ட் போன் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். அதை எப்படி பாதுகாப்பாக பயனபடுத்துவது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள்.
  • அவ்வப்போது ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை பரிசோதனை செய்வது அவசியம். ஆண்டுக்கொரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்துகொள்ளுங்கள்.
  • கால், மூட்டுப் பிரச்னைகள் ஏதுமில்லை எனில், நடைப்பயிற்சியை கைவிடாதீர்கள். சாலைகளைத் தவிர்த்துவிட்டு பூங்காக்களில் நண்பர்களோடு சேர்ந்து வாக்கிங் செல்லுங்கள்.
  • பேரக் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவுங்கள். அவர்களின் பொழுதுபோக்குகளிலும் ஈடுபடுங்கள்.
  • புதியவர்களில் நிழல்களை விட்டு நிஜங்களை அறிந்துகொள்ளுங்கள். அதன்பின் பழகுங்குங்கள்.
  • பொது இடங்களில் அவசியமான விவரங்களைத் தாண்டி, அதிகம் பகிராதீர்கள். பணம் மட்டுமல்ல… வார்த்தைகளையும் கவனமாகத்தான் கையாள வேஎண்டும்.
    முகநூலில் வரும் வார்த்தைகளை நம்பி அதிக விவரங்களைப் பகிராதீர்கள். நேரில் பார்த்து பழகியபின், குறிப்பாக அவர்களது நண்பர்கள் யார் எப்படிப்பட்டவர்கள் என தெரிந்துகொண்டு பின்னர் பழகுங்கள்.
    ‘உனது நண்பன் யாரென்று சொல், உன்னைப்பற்றிச் சொல்கிறேன்’ என்றொரு வாக்குண்டு. ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள, அவரின் நண்பர்கள் யார் யார், எப்படிப்பட்டவர்கள் எனத் தெரிந்துகொண்டால் எளிதாக புரிந்துகொள்ளமுடியும். ஆனால், முகநூல் நட்புக்கு இது பொருந்தாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read