
திருமதி வசுந்தரா (85 வயது) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 60 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய உடல்நிலை பொதுவாக நல்ல நிலையில்தான் இருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த பிறகு, இவரது உடல்நிலையும் மோசமடையத் தொடங்கியது. இப்போது மூட்டுவலியால் அவதிப்படுகிறார். அதோடு, கீழே விழுந்ததால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். நீரிழிவுக் குறைபாடும் உண்டு.
இவரின் மூன்று மகன்களும் சென்னைக்கு வெளியில் வசிக்கின்றனர். அவர்கள் அம்மாவை தங்களோடு வைத்துக் கொள்ள முன்வந்தாலும், ஆஸ்திரேலியா அல்லது ஹைதராபாத் செல்வதில் அம்மாவுக்கு விருப்பமில்லை. எனவே, அவரின் நீண்ட கால முதன்மைப் பராமரிப்புப் பணியாளர் மோகன் மற்றும் இரண்டு பணிப்பெண்கள் உதவிக்கு இருக்கிறார்கள்.
வசுந்தராவின் இரண்டாவது மகன் திரு. சாய் பிரசாத் தினம் தினம் ஆஸ்திரேலியாவிலிருந்து வீடியோ அழைப்புகள் மூலம் பராமரிப்பாளர்களுடன் ஒருங்கிணைக்கிறார். அப்படியே அம்மாவிடம் பேசுகிறார்.
வழக்கமான வீடியோ அழைப்புகள் இருந்தபோதிலும், அம்மாவின் உடல்நிலை மோசமடைந்து வருவதை திரு.சாய் பிரசாத்தால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஒருமுறை அவர் இந்தியா வந்தபோதுதான், அம்மா மனச்சோர்வு மற்றும் கவலையோடு காணப்படுவதை உணர்ந்தார். அதன் பின் அவர் டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையை தொடர்புகொண்டார்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையானது மருத்துவர் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு, அம்மாவுக்கான மருந்துகள் மாற்றப்பட்டன.
அந்த சிகிச்சை ஒரு மந்திரம் போலவே வேலை செய்தது. இப்போது அவரால் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார முடிகிறது. மனச்சோர்வு மற்றும் பதற்றமும் நீங்கியிருக்கிறது. முன்பைவிட மகிழ்வாகவும் உணர்கிறார்.
இப்போது அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், படுக்கையின் பக்கவாட்டுக் கம்பியில் தட்டுகிறார். பராமரிப்பாளர் உடனடியாக அவருடைய உதவிக்கு வருகிறார்.
மகன் சாய் பிரசாத் MCA பட்டம் பெற்றவர் IT & வங்கித் துறை ஆலோசகராகச் செயலாற்றுகிறார். வயது 58
இவர் பிறந்து வளர்ந்தது சென்னையில். இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அங்கிருந்து தொலைதூரத்தில் உள்ள அம்மாவின் பராமரிப்புப் பணிகளை வீடியோ அழைப்புகள் மூலமே நிர்வகிப்பதற்கேற்ப தன் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்கிறார். தங்களுடன் இல்லாமல், அம்மா தனியாக இருக்க விரும்புவதுதான், வசுந்தராவின் மகன்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது
அம்மாவே ஓய்வூதியம் பெறுபவர். இரண்டு மகன்களும் நன்றாக செட்டில் ஆகிவிட்டதால் நிதிச்சுமை அதிகம் இல்லை.
‘‘டயப்பர் மாற்றுவது, அவரைத் தூக்குவது, கழிப்பறைக்கு அழைத்துச் செல்வது போன்ற அத்தியாவசியப் பணிகளைக் கவனிப்பது ஒரு சவால்தான். பராமரிப்பாளரின் சேவை நோக்குப் பணியை இப்போது நான் முழுமையாக உணர்ந்துகொள்கிறேன். முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்’’ என்று நெகிழ்கிறார் சாய் பிரசாத்.