Benefits of Term Insurance
வாழ்க்கை நிச்சயமற்றதுதான்… எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை யாராலும் ஒருபோதும் கணிக்க முடியாது. அப்படி ஏதேனும் நிகழ்ந்து, நம் அன்புக்குரியவர்களுடன் நாம் இல்லாத நிலை ஏற்பட்டால்..? அந்த நேரத்தில் நம் குடும்பம் நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, காப்பீட்டுத் திட்டம் (இன்சூரன்ஸ்) மிக மிக அவசியம். ‘நெகடிவ்வாக இருக்கிறதே’ என்று எண்ணி இதில் சென்டிமென்ட் எல்லாம் பார்க்க வேண்டியதில்லை. அந்த வகையில் வருமுன் காக்கும் அத்தியாவசியமான ஒரு திட்டம்தான் காப்பீடு!
காப்பீடும் சேமிப்பும் வேறு வேறுதான்!
காப்பீடு என்றால் ஏதோவொரு திட்டத்தை (குறிப்பாக எண்டோவ்மெண்ட், மணிபேக் போன்றவை) தேர்ந்தெடுப்பதால் பெரிதாகப் பலன் கிடைக்காது. மலிவான பிரீமியத்தில் மகத்தான பலன்கள் அளிக்கக்கூடிய பாலிசி எது என்பதைக் கண்டறிந்து தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.
சேமிப்பு என்பது வேறு; காப்பீடு என்பது வேறு. இதை முதலில் அறிந்து தெளிந்து புரிந்துகொள்ள வேண்டும். காப்பீட்டையும் சேமிப்பையும் ஒன்றாக்கி (சேவிங்ஸ் லிங்க்ட் இன்சூரன்ஸ் பிளான்) கவர்ச்சிகரமான வார்த்தைகளில் விற்பனை செய்யக்கூடிய பலர் உண்டு. அந்த வார்த்தைகளுக்குள் சிக்கினால், நம் பணம் பணவீக்கத்தில் வளராமல் போகும்… அதோடு, காப்பீட்டிலும் பெரிய பலன்கள் கிடைக்காது. ஆகவே, காப்பீட்டை காப்பீடாக மட்டுமே பார்க்க வேண்டும். சேமிப்பை சேமிப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்கிறோம்… இரண்டும் தண்ணீரும் எண்ணெயும் போல… ஒட்டவே ஒட்டாது!
அப்படியானால், எது உண்மையான காப்பீட்டுத் திட்டம்?
நாம் அருகில் இல்லாதபோதும், நம் குடும்பத்தின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கக்கூடியவை காலக் காப்பீட்டுத் திட்டங்களே (டேர்ம் இன்சூரன்ஸ்). இந்தத் திட்டங்கள் வாழ்க்கையின் அடிப்படை நிதித் தேவைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்கள் மிக அடிப்படையான, செலவு குறைந்த மற்றும் வாங்குவதற்கு எளிதான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது ஒரு குடும்பத்தையே மிகக்குறைந்த செலவில் பாதுகாக்கிறது. எந்தவொரு காப்பீட்டுத் திட்டத்துடன் ஒப்பிட்டாலும் டேர்ம் திட்டத்துக்குச் செலுத்தப்படும் பிரீமியங்கள் மிகக் குறைவு. அதோடு, கூடுதல் கவர்களுக்கான ரைடர் போன்ற.பல நல்ல அம்சங்களும் பலன்களும் இதில் உள்ளன.
டேர்ம் பிளான் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க
இதோ 10 காரணங்கள்!
1. குறைந்த பிரீமியம்
ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம், குறைந்த பிரீமியத்தில் அதிக இறப்பு நன்மை அல்லது ஆயுள் காப்பீட்டைப் பெறலாம். டேர்ம் திட்டத்தின் பிரீமியம் மற்ற காப்பீட்டு திட்டங்களை விட குறைவாக உள்ளது. இது வாழ்க்கைப் பாதுகாப்புத் திட்டத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருக்கிறது.
2. முன்கூட்டியே தொடங்குவதன் நன்மைகள்
டேர்ம் திட்டத்திற்கு நீங்கள் செலுத்தும் பிரீமியம் உங்கள் வயது மற்றும் பாலிசி காலத்தைப் பொறுத்தது. இளம் வயதிலேயே டேர்ம் பிளானை வாங்கினால், பிரீமியம் இறுதிவரை ஒப்பீட்டளவில் மிகக்குறைவாகவே இருக்கும்.
3. விருப்பத்துக்கேற்ற கால வரம்புகள்
10 ஆண்டுகள் என்பதுபோல குறைந்த காலவரையறை திட்டத்தைக்கூட தேர்ந்தெடுக்கலாம். வீட்டுக் கடன் அல்லது தனிநபர் கடன் போன்றவற்றைப் பெறும்போது குறுகிய கால டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களைப் பெருவது நல்லது. உதாரணமாக… வீட்டுக் கடன் காலம் 10 ஆண்டுகளாக இருந்தால், வீட்டுக் கடன் தொகைக்கு சமமான தொகைக்கு 10 ஆண்டுகளுக்கு டேர்ம் பிளானை எடுக்கலாம். கடன் காலத்தில் ஏதேனும் நேர்ந்தால், மீதமுள்ள கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் குடும்பத்தினர் வீட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை இது உறுதி செய்கிறது. பல அல்லது தொடர்ச்சியான கடன்களை உள்ளடக்கும் நீண்ட கால பாலிசிக்கும் விண்ணப்பிக்கலாம்.
4. லைஃப் கவர் டேர்ம் பிளான்களை அதிகரிக்கலாம்
முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட சதவிகித அதிகரிப்புடன் நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியில் ஆயுள் காப்பீட்டை அதிகரிக்கும் டேர்ம் பிளான்கள் உள்ளன. இது பாலிசிதாரருக்கு அவரது உயரும் வருமான நிலைகளுடன் இணைந்து ஆயுள் காப்பீட்டை அதிகரிக்க உதவுகிறது. திருமணம், குழந்தை பிறப்பு போன்ற வாழ்க்கை மாற்றங்களின்போதும் காப்பீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்ள முடியும்.
5. நீண்ட கால ஆயுள் காப்பீடு
டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களை நீண்ட காலத்துக்கு எடுக்கலாம். பல நிறுவனங்கள் 75 வயது வரை காப்பீட்டை எடுக்க அனுமதிக்கின்றன. சில நிறுவனங்கள் 99 வயது வரைகூட காப்பீட்டை வழங்குகின்றன.
6. நிலையான குறைவான பிரீமியம்
ஒரு குறிப்பிட்ட பிரீமியத்தில் காப்பீட்டு நிறுவனம் நம் பாலிசியை ஏற்றுக்கொண்டால், பாலிசி காலத்தின் போது அது ஒருபோதும் பிரீமியத்தை திருத்தவோ மாற்றவோ செய்யாது. எனவே, எதிர்காலத்தில் எந்த அதிகரிப்பும் இல்லாமல் ஆண்டுதோறும் ஒரு நிலையான தொகையை செலுத்தினால் போதும்.
மாதாந்திரம்/காலாண்டு/அரையாண்டு/வருடாந்திரம் போன்ற கால இடைவெளிகளில் பிரீமியம் செலுத்தலாம். ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை எவ்வளவு முன்னதாக வாங்குகிறோமோ, அவ்வளவு குறைவாக நாம் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையும் இருக்கும். தவிர, நடைமுறையில் உள்ள வரிச் சட்டங்களின்படி பிரீமியத்தில் ஜிஎஸ்டி போன்ற வரிகள் செலுத்த வேண்டியிருக்கலாம்.
7. ரைடர்களைச் சேர்த்து கூடுதல் நன்மைகளைப் பெறலாம்
விபத்துப் பாதுகாப்பு, ஆபத்தான நோய் அல்லது குறிப்பிட்ட நோய், கார்டியாக் டிசீஸ் போன்றவற்றுக்கு எதிராகவும் இதே பாலிசியில் சொற்பக் கட்டணம் செலுத்தி, கூடுதல் பலன்களைப் பெற முடியும். இவை சில டேர்ம் பிளான்களில் ரைடர்ஸ் என்ற பெயரில் அளிக்கப்படுகின்றன.
டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் விருப்பமான க்ரிட்டிகல் இல்னஸ் கவரேஜ் (critical illness coverage) சேர்க்கப்பட்டிருந்தால், திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏதேனும் முக்கியமான நோயைக் கண்டறியப்பட்டால் காப்பீட்டுத் தொகையை அப்போதே பெறலாம். இது மருத்துவச் செலவுகளுக்குப் பெருமளவு உதவும்.
சில நிறுவனங்கள் ரைடர்களின் வாயிலாக 34 முக்கியமான நோய்களுக்கான விரிவான பாதுகாப்பு அளிக்கின்றன. திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட எந்தவொரு தீவிர நோய்க்கான முதல் நோயறிதலின் போது பணம் செலுத்துதலைப் பெறலாம். ஏதேனும் இறுதி நோய் கண்டறியப்பட்டால் ஆயுள் காப்பீட்டின் முழுப் பணத்தையும் பெறலாம்.
8. வருமான வரிச் சலுகை
செலுத்தப்பட்ட பிரீமியத்தைப் பொறுத்தவரை, வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80C-ன் கீழ், நீங்கள் ஆண்டுக்கு ரூ.150,000 வரை விலக்கு பெறலாம். மேலும், நாமினிக்கு துரதிர்ஷ்டவசமாக மரணம் ஏற்பட்டால்) அளிக்கப்படும் இறப்புப் பலனுக்கு வருமான வரி சட்டம் 1961 பிரிவு 10 (10D)ன் கீழ் வருமான வரி இல்லை.
9. வாங்குவது எளிது
ஒரு காலக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது எளிதான விஷயமே. இணையதளங்களிலிருந்து பல்வேறு டேர்ம் திட்டங்களின் பிரீமியத்தை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வுசெய்யலாம். பின் அந்தந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்வையிடலாம்.
Online டேர்ம் காப்பீடே மலிவானது!
சில எளிய படிகளில் டேர்ம் திட்டத்தை வாங்கி காப்பீடு செய்யலாம். நிறுவன அலுவலகங்கள் அல்லது முகவர்கள் மூலம் வாங்கப்படும் வழக்கமான டேர்ம் திட்டங்களைவிட ஆன்லைனில் வாங்கப்படும் டேர்ம் பிளான்கள் மலிவானவையே. ஏனெனில், இதில் முகவர் கமிஷன் கிடையாது என்பதால், அந்தப் பலனின் ஒரு பகுதி பிரீமியக் குறைப்பாக வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது.
10. பலன்களிலும் பல வழிமுறைகள்
காப்பீடு செய்யப்பட்ட நபரின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், குடும்ப உறுப்பினர்கள் காப்பீட்டுத் தொகையை பேஅவுட்டாகப் பெறுவார்கள். மொத்த தொகை, மொத்த தொகை + வருமானம், அதிகரிக்கும் வருமானம் மற்றும் வருமானம் ஆகிய நான்கு பேஅவுட் விருப்பங்களிலிருந்து பலனைத் தேர்வு செய்யவும்.
இது நிதித் தேவைகள் மற்றும் வீட்டுச் செலவுகளை மற்ற செலவுகளுடன் கவனித்துக்கொள்ள உதவும்.
அதுமட்டுமல்ல… MWP (திருமணமான பெண்களின் சொத்து) சட்டத்தின் கீழ் டேர்ம் இன்சூரன்ஸை வாங்கலாம். இது நம் காப்பீட்டுத் தொகை பாதுகாக்கப்படுவதையும், அது கடனாளிகளால் தவறாகக் கோரப்படாமல், மனைவி மற்றும்/அல்லது குழந்தைகளிடம் ஒப்படைக்கப்படுவதையும் உறுதிசெய்துகொள்ளலாம்.
ஒரு சம்பவம்
அப்போது 30 வயதிலிருந்த அந்த இளைஞர் காப்பீட்டின் பலன்கள் உணர்ந்து ஒரு கோடி ரூபாய்க்கான டேர்ம் இன்சூரன்ஸை மிகக்குறைவான பிரீமியத்தில் (அவரது இளம் வயது காரணமாக) எடுத்திருந்தார். அவரது 50-களின் பிற்பகுதி வயதில் எதிர்பாரா விபத்தில் அவர் தன்னையே இழக்க நேரிட்டது. வருமானத்துக்கு அவரை மட்டுமே நம்பியிருந்த அந்தக் குடும்பத்துக்கு காப்பீட்டுப் பணமும் விபத்துக்கான கூடுதல் பணமும் கிடைத்தது. அதன் மூலம் வீட்டுக் கடனை முழுமையாக அடைத்து, அந்த வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ள முடிந்தது. மகன், மகளின் உயர்கல்விச் செலவுகள், திருமணம் போன்றவற்றுக்கும் மீதிப் பணம் கைகொடுத்தது.
இன்றே செய்யுங்கள் எதிர்காலத்துக்கான முதலீடு!
ஆயுள் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், டேர்ம் பிளான்கள் அண்மைக்காலமாக பெரும்பாலோரை ஈர்த்து வருகின்றன. வருமான வரிச் சலுகைகள் மட்டுமல்ல… இறுதியில் நம் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பைப் பற்றிய மன அமைதிக்காக. ஆயுள் காப்பீட்டுக் காலத் திட்டத்துக்குச் செலுத்தும் பிரீமியம் ஒரு சிறிய தொகைதான்!
இப்போது மூத்தகுடிமக்கள் டேர்ம் இன்சூரன்ஸ் செய்யவேண்டிய நிலையில் இல்லாவிட்டாலும்கூட, தங்கள் குடும்பத்தினர்களுக்கு இதன் பலன்களை விளக்கிச் சொல்லி காப்பீட்டு எடுக்கச் செய்ய வேண்டியது மிக முக்கியம்!