Homeஉடல் நலம்பெண் நலம்வெள்ளைக் கொக்கும் நாரையும்!

வெள்ளைக் கொக்கும் நாரையும்!

முனைவர் ஆதிரா முல்லை

வார்த்தைகளால் அல்ல,
வாழ்ந்து கற்றுக்கொடுப்போம்!

கிடந்தது
சுவரோரமாக
ஒரு கருவண்டு
‘‘எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு?’’
எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்
‘‘எழுந்ததும்
போகும்’’
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்
விடவில்லை
‘‘இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?’’
‘‘அப்பா வண்டு’’
சொல்லி வைத்தேன் சும்மா
‘‘அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு’’

இப்படி ஒரு குழந்தை தன் தந்தையிடம் கூறுவதாக ஒரு கவிதையை எழுதியிருப்பார் என் நண்பர் இரா.எட்வின். இது ஆண் – பெண் சுதந்திரத்தை அல்லது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள கவிதை என்று கூறுவதைவிட வளரும் குழந்தைகளின் மனத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் படிமம் எப்படிப் பதிந்துள்ளது என்பதை உணர்த்தும் கவிதையாகப் பார்ப்பதே சரியான கோணம். அம்மா என்றால் சரியாக வீட்டுக்கு வர வேண்டும். அப்பா என்றால் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம் என்னும் சமுதாய நிலைப்பாடு குழந்தைகளின் மனத்தில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருக்கிறான். அதிகாலையில் வெளியில் செல்பவன் இரவும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறான். பொழுது புலர்ந்ததும் அவன், அப்பெண் வீட்டிலிருந்து தன் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறான். இந்தத் தகவலைச் சொல்பவள் அவளின் தோழி. உடனே மனைவிக்குக் கோபம் வருகிறது. அழுகை வருகிறது. அந்த இரண்டையும்விட அச்சம் வருகிறது. என்ன அச்சம்? வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனும் தந்தை உள்ளே நுழையும்போது வீட்டுக்குள்ளே சேர்ந்து வந்துவிடுவானோ என்ற அச்சம். 

அப்படி வருவானானால் மகன் முன்பு கணவனை வைய முடியாது. மகன் முன்பு கணவனை வைதால் மகனுக்குத் தந்தை மீது இருக்கும் மதிப்பு குறைந்துவிடும். வையாமல் விட்டால் இரவு முழுவதும் வேற்று இல்லத்தில் தங்கி வரும் இத்தீய ஒழுக்கத்தைப் பிற்காலத்தில் அவனும் பின்பற்ற வாய்ப்பாக அமைந்துவிடும். 

நல்ல வேளையாகத் தந்தையுடன் மகன் சேர்ந்து வரவில்லை. சற்று நிம்மதி அடைகிறாள். 

‘வெள்ளைக் கொக்கின் பிள்ளை இறந்துவிட்டது. அதற்குத் துட்டிக் கேட்பதற்காகக் காலையில் செல்லும்  நாரை மாலையும் அங்கேயே தங்கிவிடுகிறதாம். நல்ல வேளையாக அப்படிப்பட்ட நீர்த்துறையின் தலைவனாகிய என் கணவன் வீட்டுக்குள் வரும்போது அவனோடு என் மகனும் வராமல் தனியே வந்தான்’ – தன் கணவனின் தீய ஒழுக்கத்தைப் பற்றித் தலைவி தோழியிடம் கூறுவது இவ்வளவுதான். அக்கம் பக்கத்துப் பெண்களிடம் சொல்லி அழுவதுதானே பெண்களின் நிலை எல்லாக் காலங்களிலும். தன் தோழியிடம்கூடக் கணவனின் ஒழுக்கக்கேட்டை நேரிடையாகக் கூறவில்லை. இதில் எத்தனை உட்பொருட்கள் உள்ளன?

கொக்கு வயல்வெளியில் வாழும் பறவை, நாரை நீர்நிலைகளில் வாழும் பறவை. நாரை உயரமான கால்களைக் கொண்டது. நன்கு பறக்கும் தன்மையது. வெள்ளைக் கொக்குக்குக் கால்கள் குட்டையாக இருக்கும். உயரப் பறக்க முடியாது. ஆனால், எளிதில் மாட்டிக்கொள்ளாது. மறைவாக வாழும் தந்திரம் கற்றது. அதுபோல மறைவாக வாழும் தந்திரம் நிறைந்தவள் பரத்தையாம். இவன் நாரை போலச் சென்று அவளைப் பார்த்துவிட்டு வருகிறானாம். தன் கணவனின் மோசமான இந்த ஒழுக்கத்தை மறைபொருளாகக் கூறும் நுட்பமும் பண்பாடும் கல்வியறிவு கிஞ்சித்தும் இல்லாத சங்கத் தமிழச்சியிடம் இருந்திருக்கிறது. 

குழந்தை வளர்ப்பின் நுட்பம் அறிந்தவள் அவள். அதனால்தான் குழந்தை முன் எதைப் பேசக்கூடாது என்னும் தெளிவுடன் பேசுகிறாள். அவள் வளர்த்த குழந்தைகள் பண்பாட்டை மீறாமல் ஒழுக்கத்தில் மாறாமல் இருந்திருக்கின்றன. 

இவர்கள் ஒழுக்கம் தவறி நடக்கவில்லை என்றாலும் பார்க்க, கேட்க, பேசக் கூடாத அனைத்து ஒழுக்கக்கேடுகளும் ஊடகங்கள் வாயிலாக வீட்டு வரவேற்பறைக்கு வந்துவிடுகின்றன. அவற்றை ஒன்று விடாமல் பெற்றோரும் பார்த்துவிடுகின்றனர். அத்துடன் போகிறதா? குழந்தைகளையும் பார்க்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்குத் தேவை குழந்தை அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்… அவ்வளவுதான். போதாக்குறைக்கு கைப்பேசி என்னும் கொள்ளிக்கட்டை வேறு புது அவதாரம் எடுத்துள்ளது. அம்மா, அப்பா, மகனோ, மகளோ மூவரும் ஆளுக்கொரு கொள்ளிக்கட்டையைக் கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகளே இல்லங்கள் தோறும் இன்று. வயது வித்தியாசமின்றி இளையோர் முதல் முதியோர் வரை பலரும் காலைக் கடன்களையும் கைப்பேசியோடுதான் கழிக்கின்றனர்.

குழந்தைகளின் மென்மையான இளம் மனதில் தேவையற்ற ஒழுக்கக் கேடுகளும் ஆபாசங்களும் வன்முறைக் காட்சிகளும் ஆழமாகவும் மிக அழுத்தமாகவும் பதிந்துவிடும் என்பதைப் பெற்றோர்கள் அறிந்தாலும் அதைச் செயல்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றனர். இதன் விளைவுகளை அவர்கள் எப்போது உணர்கிறார்கள்? தமக்கு முதுமை வந்த பின்தான். அக்குழந்தை பெரியவனாகித் தீய ஒழுக்கங்களில் ஈடுபடும் போதுதான்.

குழந்தைகளுக்கு நல்லது இது; தீயது இது என்று பகுத்துணரும் பக்குவம் வரும் வரை குழந்தைகள் முன் எவற்றைச் செய்யக்கூடாது என்பதில் பெற்றோருக்கு ஒரு தெளிவு வேண்டும். பெற்றோர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக் கொள்வது முதலியவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும்.

போலச் செய்தல் என்பது மனிதனின் மிகப் பெரிய உளவியல். ஒருவரைப் பார்த்து அது போலச் செய்வதுதான் மனித வளர்ச்சியின் முக்கியமான அடிப்படை. அது குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்கிவிடுகிறது. முதலில் பெற்றோரை மட்டுமே காணும் குழந்தைகள் பெற்றோரைப் போலச் செய்யவே முதலில் கற்றுக்கொள்ளும். 

வார்த்தைகளால் கற்றுக் கொடுப்பது பாடமாகிப் போகும். வாழ்ந்து கற்றுக்கொடுப்பது குழந்தைகளின் மனத்தில் படமாகப் பதியும். வாழ்ந்து கற்றுக்கொடுப்போம்!                         

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read