‘எங்கும் தொற்று; எதிலும் தொற்று’ என்ற இவ்வாக்கியத்தின் பொருள் இன்று இயல்பான வடிவம் பெற்றுச் சமுதாயத்தில் உலவி கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைப் போன்ற நுண்ணுயிர் நோய்க் கிருமிகளே.
இவை தோற்றுவிக்கும் நோய்களில் ஒன்றான ‘நீமோகாக்கல் நிமோனியா’ காய்ச்சல் பற்றி நுரையீரலியல் மருத்துவர் எஸ்.ஜெயராமன் அவர்கள் கூறும் விழிப்புணர்வுத் தகவல்களை இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம்.
நீமோகாக்கல் நிமோனியா:
‘நீமோகாக்கல் நிமோனியா’ நுரையீரல் நோய்த் தாக்கம் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைப் போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்த் தொற்றாகும்.
அதிலும் குறிப்பாக ‘நீமோகாக்கல் நிமோனியா’ என்பது ‘ஸ்டெப்ரோகாக்கஸ்’ என்ற பாக்டீரியாவால் வரக் கூடிய மற்றும் பரவக்கூடிய நிமோனியாவாகும்.
READL ALSO: தூக்கத்தைக் கெடுக்கும் குறட்டைக்கு தீர்வு!
‘நீமோகாக்கல் நிமோனியா’ தாக்கும் நபர்கள்:
நீமோகாக்கல் நிமோனியா நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கும். எனவே தான் இஃது ஐந்து வயதிற்குக் குறைந்த குழந்தைகளையும், ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களையும் அதிகமாகத் தாக்குகிறது.
தற்காப்பு நடவடிக்கைகள்:
பொதுவாக நிமோனியாத் தற்காக்கக் கூடிய மற்றும் முழுமையாகக் குணமாகக் கூடிய நோய்த்தொற்றாகும்! இதற்கு நிமோனியா தடுப்பு ஊசியை வாழ்க்கையில் ஒரு முறைச் செலுத்திக் கொண்டாலே போதும் இதில் இருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
மேலும் சுற்றுச்சூழல் சுகாதாரம், முகக் கவசம் அணிவது, கைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வது போன்ற தன் தூய்மைச் செயல்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய புரத உணவுகளை உண்பது, நுரையீரலைப் பாதுகாக்கக் கூடிய உடற்பயிற்சிகளான நடைப்பயிற்சி, சுவாசப் பயிற்சிப் போன்றவற்றையும் கடைப்பிடிக்கலாம்.
READ ALSO: உங்க நுரையீரல் ஆரோக்கியமா இருக்கா?
இவற்றை மேற்கொண்டாலே நிமோனியாவால் ஏற்படும் உயிரிழப்பில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்!
‘எங்கும் தொற்று; எதிலும் தொற்று’ என்ற இவ்வாக்கியத்தின் பொருள் இன்று இயல்பான வடிவம் பெற்றுச் சமுதாயத்தில் உலவி கொண்டு இருந்தாலும், அதற்குப் பொருள் வடிவம் கொடுத்தவர்கள் நாமே! எனவே நம்மால் இதனை மாற்ற இயலும்.
எனவே தற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவோம்! நோய்த்தொற்று இன்றி வாழ்வோம்!! நம்முடைய இன்னுயிரைக் காப்போம்!!!