Homeஉடல் நலம்உலகமே வியந்தும், மிரண்டும் பார்க்கும் நோய்

உலகமே வியந்தும், மிரண்டும் பார்க்கும் நோய்

உலகமே வியந்தும், மிரண்டும் பார்க்கும் நோய்களில் ஒன்று மாரடைப்பு. ஒருவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை என்றால் மக்கள் யோசனை இன்றி அவரின் இறப்பிற்குக் காரணமாகக் கூறுவது மாரடைப்பைத் தான்!

காரணம் அஃதுதான் எப்போது வருகிறது? ஏன் வருகிறது? எப்படி வருகிறது? என்று யூகிக்கக் கூட முடியாத வகையில் வந்து மக்களைத் தாக்குகிறது!

ஆனால், அதனையும் தடுக்கும், தவிர்க்கும் யுக்திகளைக் கூறுகிறார் இருதய நோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள்.

மாரடைப்பும், காரணங்களும்

மரடைப்பிற்கு இரண்டு வகையான காரணங்கள் உள்ளன. ஒன்று தவிர்க்க முடியாத காரணங்கள்; இரண்டாவது தவிர்க்க முடிந்தக் காரணங்கள்.

தவிர்க்க முடியாத காரணங்களாக வயது முதிர்வு (advancing age), ஆண் பாலினம் (Male sex), மரபு ரீதியாகக் குடும்ப வழி மாரடைப்பு நோய் (Family History), வாழ்வியல் ஒழுக்கம் (Ethnicity);

தவிர்க்க முடிந்தக் காரணங்களாக உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure), உயர்ச் சர்க்கரை நோய் (High blood sugar) உயர் இரத்தக் கொழுப்பு (High Cholesterol), மத்திய உடல் பருமன் (Central obesity) போன்றவை உள்ளன.

READ ALSO: வாகனம் ஓட்டும்போது ஏன் தூக்கம் வருகிறது?

மாரடைப்பும், தவிர்க்கும் வழிமுறைகளும்

‘தவிர்க்க முடிந்தக் காரணங்கள்’ என்று நாம் கூறும் காரணங்கள் அனைத்தையும் மருத்துவரின் ஆலோசனைப்படிக் குறைத்துச் சமநிலையில் பராமரியுங்கள்.

புகையிலையைப் புகைத்தல், பாக்கு, இலை என்று எந்த வடிவிலும் பயன்படுத்தாமல் முழுமையாகத் தவிர்த்து விடுங்கள். மதுவைத் தவிர்ப்பது நல்லது.

கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவைக் குறைந்த அளவு உண்ணுங்கள். இதற்கு மாற்றாக இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பீன்ஸ், கொட்டை (nuts) வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். அதிலும் குறிப்பாகக் கீரைகள், பழங்கள், காய்கறிகளைத்  தினமும் குறைந்தது 400 கிராம் அளவு உண்ண வேண்டும்.

போதுமான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள். அதிலும் குறிப்பாக நடைப்பயிற்சி மிக, மிக முக்கியமானது.

மன அழுத்தம் இல்லாத வாழ்வை வாழ முயற்சி செய்யுங்கள். அதற்கு நல்ல ஒரு கருவியாக, உலகிற்கே கொடையாக நாம் அளித்த யோகவைப் பின்பற்றுங்கள். அதிலும் சிறப்பானது அஷ்டாங்க யோகா (Ashtanga yoga).

காரணம் இதில் மூச்சுப் பயிற்சி, தியானம், உடற்பயிற்சி உள்ளன. மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் முறையாகப் பின்பற்றினாலும், எட்டு மணி நேர ஆழ்ந்த உறக்கம் இல்லையென்றால் அதுவும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.

READ ALSO: இறைவனுக்கு இணையானது இதயத்தின் இயக்கம்!

இந்தக் குறிப்பிடத்தக்க எட்டு மணி நேர உறக்கத்தை இரவு பத்து மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை உறங்க முயற்சியுங்கள். காரணம் நமது உடலின் இயக்கங்கள் அனைத்தும் சூரிய ஒளியுடன் தொடர்புடையது.

அனைத்தும் தெரிந்த நமக்கு அவை அனைத்தையும் பின்பற்றத்தான் முடிவதில்லை. காரணம் நாம் வாழும் ‘இயந்திர வாழ்க்கை’ என்போம்.

ஆனால்,‌ இந்த இயந்திர வாழ்க்கை யாருக்காக? நம்மவர்களுக்காக என்பது நம் பதிலானால் நாம் இன்றி அவர்கள் வாழ்வு எவ்வாறு இன்பமாய் அமையும்?

நமக்காகத் தான் என்பது நம் பதிலானால் நம் உடல் நலனைப் பாதுகாக்காமல் வாழும் இந்த இயந்திர வாழ்க்கை நமக்கு ஏன்? இவ்வினாக்களைச் சிந்தித்து ஆரோக்கியமான வாழ்வை வாழ முயற்சி எடுப்போம். முயற்சியில் வெற்றிப் பெறுவோம்!

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read