‘‘அம்மாவையும் பெரியம்மாவையும் கவனித்துக்கொள்வதை ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். இதை நான் ஒருபோதும் சுமையாக நினைத்தது கிடையாது’’ என்கிற அனிதா, BE மற்றும் முதுநிலை HR பட்டங்களைப் பெற்ற 48 வயது பெண்மணி. 19+ ஆண்டுகளாக மென்பொருள் நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டராகப் பணியாற்றி வருகிறார். அவரது கதை பலருக்கும் உத்வேகம் அளிக்கும்.
குடும்பத்தில் ஒரே பெண்ணான அனிதாவுக்கு. தன் அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இயல்பாகவே வந்தடைந்தது. 80 வயது அம்மாவை மட்டுமல்ல; 85 வயதான தன் பெரியம்மாவையும் இவரே கவனித்துக்கொள்கிறார். அம்மா, பெரியம்மா இருவரும் ஓய்வூதியம் பெறுகிறவர்கள் என்பதால், நிதிச்சிக்கல்கள் ஏதுமில்லை.
அம்மாவுக்கு மிகை ரத்த அழுத்தம், மூட்டுவலி, நீரிழிவு,தைராய்டு ஆகிய பிரச்னைகள். பெரியம்மாவுக்கு பார்கின்சன்ஸ்; கூடவே மிகை ரத்த அழுத்தப் பிரச்னை.
இவர்கள் இருவரையும் பராமரிப்பதில் அனிதா எந்தவிதமான உடல் ரீதியான சவால்களையும் உணரவில்லை என்கிறார். தன் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்கிறார். ஆம்… பெரியவர்களைக் கவனிக்க வேண்டுமானால், அனிதாவின் ஆரோக்கியம் மிக முக்கியம்தானே?
பெரியவர்களைக் கவனித்துக் கொள்வதில் வேடிக்கை வினோதங்களும் நிறையவே இருக்கும். அனிதாவுக்கும் அதுபோன்ற அனுபவங்கள் ஏராளம். இதோ ஓர் உதாரணம்…
ஒருமுறை, டாக்டர் வி.எஸ்.நடராஜன் ஜெரிடியாட்ரிக் ஃபவுண்டேஷனிலிருந்து ஒரு மருத்துவரின் வருகைக்கு அனிதா ஏற்பாடு செய்திருந்தார். “பெரியம்மா அவ்வப்போது சத்தம் போடுகிறார்; தூக்கத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்; பிரச்னைகளைச் சொல்லிப் புலம்புகிறார்… இந்தப் பிரச்னைகளை மருத்துவரிடம் கூறினேன். அதற்கும் அவர் என்னைக் குற்றம் சாட்டினார். இதையெல்லாம் மருத்துவரிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வது!
ஆம்… அனிதா ஒரு மகிழ்ச்சியான பராமரிப்பாளருக்கு உதாரணம். அலுவலகப் பணியையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பெரியோர் பராமரிப்பையும் அவர் திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் சமநிலைப்படுத்துகிறார். அவரது தனிப்பட்ட எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துகொள்கிறார்… அம்மாக்களைக் கவனித்துக் கொள்வதையும் மகிழ்ச்சியுடன் செய்கிறார்.
அனிதா எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை… அவரால் விடுமுறையில் எங்கும் செல்ல முடியவில்லை என்பது மட்டுமே. ‘‘ஒரு நாளுக்கு மேல் விடுமுறை எடுக்க முடியாது. பெரியவர்களிடம் இருந்து அதிக காலம் விலகி இருக்க முடியாதே’’ என்கிறார்.
வரும் புத்தாண்டில் ஒரு ஹாலிடே ட்ரிப் சென்று வாருங்கள் அனிதா… அந்த நாள்களில் இவர்களைக் கவனித்துக்கொள்ளும் வகையில் சில மாற்று ஏற்பாடுகளை உங்களால் நிச்சயம் திட்டமிட முடியும்.
அனிதாவுக்கு நம் அன்பும் பாராட்டுகளும் என்றும் என்றென்றும்!