சொல்லின் செல்வர் சுகி.சிவம்

மூளை, இதயம் இரண்டுமே மனிதனுக்கு மிக முக்கியமானவைதாம். இருப்பினும் மனிதனுடைய பெர்சனாலிட்டி என்பது மூளையில்தான் உள்ளது. அதற்குச் சான்றாக ஒரு கதையினை பார்ப்போம்.
சகோதரன் மற்றும் கணவனோடு ஒரு பெண் காட்டுவழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அப்போது தண்ணீர் தாகமாக இருப்பதாக தன் கணவனிடம் கூறுகிறாள். தண்ணீர் தேடி சிறிது தூரம் சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒரு காளி கோயிலைக் காண நேர்ந்தது. கோயிலின் உள்ளே சென்றதும் , காளி நேரில் தோன்றி, “உன் தலையை வெட்டி பலி கொடு” என்றதும், அவன் என்ன செய்வதென்று அறியாமல் தலையை வெட்டிக் கொடுத்தான். நீண்ட நேரமாகியும் கணவனைக் காணாததால், தன் சகோதரனிடம் சென்று பார்த்து வரும்படி கேட்கிறாள். அவன் சென்று அக்கோயிலில் நடந்தவற்றைப் பார்த்து, இதை எப்படி தன் சகோதரியிடம் சொல்வதென்று கதறி, தானும் அங்கிருந்த வாளால் தன் தலையை வெட்டிக் கொண்டான். இப்போது இருவரின் தலைகளும் உடல்களும் தனித்தனியாக கீழே கிடக்கின்றன. சகோதரனும் வரத் தாமதமானதால் அவளே அவர்களைத் தேடிப் போக ஆரம்பிக்கிறாள்.

அவளும் அக்கோயிலை அடைகிறாள். இருவரும் அவ்வாறு கிடப்பதைப் பார்த்தும் காளியைப் பார்த்து கதறி அழுகிறாள். அப்போது காளி தோன்றி அவளுக்கு வரம் தருகிறாள். ‘கீழே உள்ள தலையை உடலோடு சேர்த்து வைத்து, நான் சொல்லும் மந்திரத்தை சொல்லு… தலையும் உடலும் ஒட்டிக் கொள்ளும்’ என்று கூறி காளி வரமளித்து மறைந்தாள். இவளும் எடுத்து பொருத்திவிட்டாள். அவசரத்திலும் பதற்றத்திலும் பொருத்தியதால் சகோதரனின் தலையை கணவனின் உடலிலும், கணவனின் தலையை சகோதரனின் உடலிலும் பொருத்தி விட்டாள். இப்பொழுது இருவரும் உயிர் பெற்றார்கள்.
இவர்களில் யாரை அவள் தன் கணவனாக ஏற்றுக்கொண்டாள்? இதற்குப் பதில் கூறும்படியாக வேதாளம் விக்ரமாதித்தனிடம் கேட்கும். இது ஒரு பழமையான வேதாளக் கதைகளில் ஒன்று (கற்பனைக்கதைதான்!).
சிறிதும் யோசிக்காமல் விக்ரமாதித்தன் இவ்வாறாக பதில் கூறுவான்… ‘யாருடைய உடலில் கணவனின் தலை பொருத்தப்பட்டதோ அவனையே கணவனாக ஏற்பாள்’ என்று.
ஆம்…
மூளைதான் பெர்சனாலிட்டியை உருவாக்கும். அதனால்தான் ‘தலை’ முக்கியத்துவம் பெறுகிறது. மனித மூளையில்தான் எல்லா விஷயங்களும் பதிவாகின்றன. நினைவுகளும் பதிவாகின்றன. உடல் இயக்கங்களுக்கான உத்தரவும் பிறப்பிக்கப்படுகின்றன. இத்தகைய மூளையை பாதுகாப்பது நம் தலைதான். அந்தத் தலையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வது நம் கடமை.

நாம் கீழே விழாமல் பார்த்துக் கொள்வது மண்டை உடையாமல் காக்கும்.
அதே போல…
மண்டைக்குள் (மூளைக்குள்) தேவையில்லாத விஷயங்கள் விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்வது நம் மனதைக் காக்கும்.
என்ன, சரிதானே!
(சொல்லின் செல்வர் சுகி.சிவம் அவர்களின் உரையிலிருந்து)