200 ஆண்டுகளாக நம் தலைமுறை மீள முடியாத ஒரு பழக்கத்தில் சிக்கி அடிமையாகியுள்ளது என்றால், அது அநேகமாக காபி, டீ அருந்துவதாகத்தான் இருக்கும். பத்தியம் என்று ஆரம்பிக்கும்போதே, ‘‘சார்! எதை வேணா நிறுத்தச் சொல்லுங்க. ஆனால், ஃபில்டர் காபி சாப்பிடலேன்னா செத்தே போயிடுவேன்’’ என்று பதற்றத்துடன் சொல்லும் பெரியவர்கள் பலரை எனக்குப் பரிச்சயம் உண்டு.
காபி, தேநீரைத் தவிர காலையில் குடிக்க வேறு பானங்கள் இல்லையா? நிச்சயம் உண்டு. அவற்றை அறிய அமேசான் காட்டுக்கோ, அமேசான் நிறுவனத்துக்கோதான் போக வேண்டும் என்றில்லை. நம் அடுப்பங்கரைக்குள் சில நிமிடங்கள் கரிசனத்தோடு இயங்கினாலே போதும். பொதுவாக அடுப்பங்கரையில் நாம் அதிகமாய்ச் செலவழிக்கும் 20 நிமிடங்கள், நம் ஆயுளில் இன் ம் 20 ஆண்டுகளைக் கூட்டித்தரும். ‘அடுப்பங்கரைக்கா… நானா?’ என அலறும் ஆணாதிக்கவாதிகள், இனி நோய்க்கு வாக்கப்பட்டுக்கொள்ளுங்கள்.
தேயிலைக்கு மாற்றாகத் தங்கம் கொடுத்து வாங்கிவந்த வரலாறும், அதைப் பெற அபினுக்கு சீனர்களை அடிமைப்படுத்திய வரலாறும் உலகத்துக்குத் தெரியும்.
சரி, காலையில் காபிக்கு பதில் என்ன குடிக்கலாம்?
ஜன்னலோரப் பேருந்துப் பயணங்களில், வழியெல்லாம் வறண்ட மானாவாரி நிலங்களில் பூத்து நிற்கும் பொன் மஞ்சள் நிற ஆவாரைப் பூக்களை அன்று அநேகம் பேர் கவனித்தது இல்லை. ஆனால், அந்தப் பூக்கள் இன்று ஆங்காங்கே இருந்து புறப்பட்டு பஸ் ஏறி, ரயில் ஏறி, சென்னை போன்ற மாநகரங்களுக்கு வந்துவிட்டன. பூங்காக்களில் காலை நடைப்பயிற்சி செய்து வெளிவரும் இனியவர்களை வரவேற்கும் பொக்கேக்களாக, அல்லது ரெடிமேட் ஆவாரை மூலிகைத் தேநீராய் அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டன. ஆம்! ‘ஆவாரம்பூ’ இன்று சர்க்கரை நோயாளிகள் அதிகம் தேடும் மூலிகை. ‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?’ எனச் சித்தர் ஒருவர் பஞ்ச் டயலாக்குடன், பல நூறு வருஷங்களுக்கு முன்பு பாடி வைத்திருக்கின்றார்.
ஆவாரையில் அப்படி என்ன இருக்கிறது? ‘உடல் சூட்டினைக் குறைத்து, நீரிழிவையும் கட்டுப்படுத்தும்’ என ஆவாரையை சித்த மருத்துவம் அடையாளம் காட்டியது. சூட்டினால் கண்களில் ஏற்படும் பாதிப்பையும் தடுக்கும் என ஆவணப்படுத்தியிருக்கிறது. ஆவாரையின் பூ மட்டுமல்லாது, இலை, தண்டு, வேர் அத்தனையையும் சேர்த்து கஷாயமிட்டுச் சாப்பிடச் சொல்கிறது ‘ஆத்மரட்சாமிர்தம்’ எ ம் ஆயுர்வேத நூல். ‘நீரிழிவு நோய்க்கு மிகப் பிரபலமான கஷாயம் ஆவாரைக் குடிநீர்’ என்று தேரன் சித்தர் குறிப்பிடுகிறார். எப்படி நிலவேம்புக் குடிநீர் என்பது நிலவேம்பு மட்டுமல்லாது கூட 7 மூலிகைகளைச் சேர்த்து தயாரிக்கப்படும் பானமோ, அதேபோல ஆவாரைக் குடிநீரும் ஆவாரையுடன் கூட ஏழு மூலிகைகளைக் கொண்டது.
தேரன் சித்தர் இதுகுறித்து எழுதி வைத்துள்ள பாடலை நவீன விஞ்ஞானப் பார்வையில் புரிந்துகொண்டபோது வியப்பு எழுந்தது. அந்த அருமையான பாடல் இதுதான்… ‘ஆவாரை கொன்றை நாவல் அலைகடல் முத்தங் கோஷ்டம் மேவிய மருதத்தோலும் மிளிர்ந்திட ரொக்கக் கொண்டு, பூவிரி குழலினாளே! காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும்தானே’.
தேரன் சித்தர் இதில் பரிபாஷையாய் சொன்ன சூட்சுமம் இதுதான்… காவிரி நீர் இனிப்பாய் இருக்கும். கடல் நீர் உவர்ப்பாய் இருக்கும். ‘இனிப்புச் சிறுநீரை வெளிப்படுத்தும் (Glycosuria) நீரிழிவு நோய்க்கும், நாளடைவில் அதனால் சிறுநீரகத்தின் செயல் குறைந்து புரதமும் உடன் கலந்து உப்புச் சிறுநீர் வரும் (proteinuria) சிறுநீரக நோய்க்கும் என்று இரண்டுக்குமே ஏற்றது இந்த ஆவாரைக் குடிநீர்’ என்பதுதான் அதன் பொருள்.
ஆவாரைக் குடிநீர் பற்றி இன்று பல மருத்துவ ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. Alpha amylase inhibition மற்றும் alpha Glycosidase inhibition எ ம் இரண்டு செயல்திறன்கள் மூலம் அது ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுவதை உறுதிப்படுத்தின. ஆவாரையின் மருத்துவக் கூறுகள் ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் நொதிக்கற்றையில் கூடுவதை மருத்துவத்துறை ஆய்வுகள்மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். சர்க்கரை நோயால் ஏற்படும் அதிக நா வறட்சி, மெலிவு, உடல் சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு ஆவாரைக் குடிநீர் நிவாரணம் தருவதை ஆரம்பகட்ட reverse pharmacology மற்றும் clinical research மூலம் உறுதிசெய்துள்ளனர் ஆய்வாளர்கள்.
ஆவாரை பற்றிய ஆய்வுப் பயணம் இன்னமும் பல மைல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. என்றாலும், பல நூறு ஆண்டுகள் நம் பழக்கத்தில் இருந்த, மரபு மருத்துவத்தில் பெரும் பயன் தரக்கூடிய ஆவாரைக் குடிநீரை சர்க்கரை நோயாளிகள் தினமும் மூலிகைத் தேநீராகக் குடிப்பது சிறப்பு. இந்தக் குடிநீரைத் தயாரிக்கும்போது சேர்க்கப்படும் கடல் அழிஞ்சில் (salacia reticulata) என்ற மருந்தை, சர்க்கரை நோய்க்குப் பயன்படுத்தும் விதத்தில் அமெரிக்காவின் ஒஹியோ பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது என்பது கூடுதல் செய்தி. சர்க்கரை நோயாளிகள் எந்த மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்தாலும் சரி, கூடவே ஆவாரைக் குடிநீரை காலை பானமாகக் குடிப்பது இனிப்பு நோயைக் கட்டுக்குள் வைக்கத் துணை நிற்கும்.
நாம் ஆவாரையும் சுக்கு கஷாயமும் குடித்துக் கொண்டிருந்த காலத்தில், சீனர்கள் மட்டும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்கள். வணிகத்துக்கு அங்கு போன ஆங்கிலேயன் அந்தத் தேநீரில் உசுப்பேறிப் போனான். தேயிலைக்கு மாற்றாகத் தங்கம் கொடுத்து வாங்கிவந்த வரலாறும், அதைப் பெற அபினுக்கு சீனர்களை அடிமைப்படுத்திய வரலாறும் உலகத்துக்குத் தெரியும்.
இன்று சீனர்கள் வீட்டில் வெறும் தேநீர் மட்டும் இருப்பதில்லை. பிளாக் டீ, ஊலாங் டீ, கிரீன் டீ என பலவகையான தேநீர்களை வீட்டில் தயாரிக்கிறார்கள். தேநீரில் லவங்கப்பட்டை, இஞ்சி, ஜாதிக்காய், ஸ்டார் அனைஸ் எ ம் அன்னாசிப்பூ (அன்னாசிப் பழத்தின் பூவல்ல, நட்சத்திர வடிவில் பிரியாணியில் போடுவோமே… அந்த உலர்ந்த பூ) என அவர்கள் நாட்டில் வளரும் மூலிகைகள் பலவற்றை தினசரி ஒன்றாகப் போட்டுக் குடிக்கின்றனர். அதிகம் ஷீஜ்வீபீணீtவீஷீஸீ நடக்காததால், கிரீன் டீக்குத்தான் மருத்துவ மவுசு அதிகம். ஊலாங் தேநீரின் சுவை மிகப் பிரபலம். இப்போது சீனர்கள் உலகெங்கும் இதைப் பிரபலப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் வணங்கி மகிழும் கறுப்பு டிராகன்போல, இந்தத் தேயிலை உலர வைத்து சுருண்டு இருப்பதால் இதற்கு ‘ஊலாங்’ எனப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள். இன்று சீனர்கள் மூலமாக, மூலிகைத் தேநீர் வணிகம் உலக அளவில் உயர்ந்து வருகிறது.
நமக்கான சேதி என்னவென்றால், இந்த மூன்று தேநீருமே டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்பதுதான். இதுவரை வெளியான 519 ஆய்வுக்கட்டுரைகளை meta analysis எனும் புள்ளியியல் ஆய்வுமூலம் அலசி ஆராய்ந்து, ‘சார், தினமும் 3 கப் டீ சாப்பிடுவது, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கக் கொஞ்சம் உதவும்’ என முடிவாகச் சொல்கிறார்கள். ஆனால், நம் ஊரில் டீ போடுவதில் கொஞ்சம் சிக்கல் இருக்கின்றது. சுவையான, சத்தான, மருத்துவ குணம் பாழாகாத தேநீர் வேண்டுமா? ஒரு நிமிடம் முதல் 2 நிமிடம்வரை மட்டும் தரதரவெனக் கொதிக்கும் வெந்நீரில் தேயிலைகளைப் போட்டு மூடி வைத்த்து, வடித்து எடுத்து இளஞ்சூட்டுடன் பருகுவதுதான் சிறந்தது. பால் பாயசம் மாதிரி பாலோடு சேர்த்துக் காய்ச்சுவது, அல்லது டீ டிகாக்ஷனில் பாலூற்றி பரவசமடைவது எல்லாம் மணம் தரும்; மருத்துவப் பயனை முழுசாகத் தராது.
சீனர்களுக்கு இணையாக நம்மிடமும் ஏராளமான மூலிகை பானம் பருகும் பழக்கம் நெடு நாளாய் இருந்து வந்தது. ஆனால், 300 ஆண்டுகளுக்கு முன்பு நாம் அத்தனையையும் தொலைத்தில், தொலைந்து போனது நம் நலவாழ்வும் நல்வணிகமும் சேர்த்துதான்.
சித்த, ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட பல கஷாயங்களில், மருத்துவ குணமுடன் உடலுக்கு வலுவேற்றி, உற்சாகமும் உடனளிக்கும் பல மூலிகைத் தேநீர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. Functional foods அல்லது Functional beverage என இன்று அடையாளப்படுத்தப்படும் சில மூலிகைத் தேநீர்கள் நம் வீட்டு அடுப்பங்கரையிலேயே உள்ளன. திங்களன்று சுக்கு-தனியா காபி… செவ்வாய்க்கிழமை செம்பருத்தி-தேயிலை… புதனன்று கரிசாலை-முசுமுசுக்கை கஷாயம்… வியாழன் அன்று இஞ்சி, எலுமிச்சை, பூண்டு, காடி, தேன் ஆகிய ஐந்தின் கலவை கொண்ட பஞ்ச அவுஷதி பானம்… வெள்ளிக்கிழமை நெல்லிக்காய் தேநீர்… சனிக்கிழமை லவங்கப்பட்டை, ஏலக்காய், இஞ்சி போட்ட தேநீர்… ஞாயிறன்று ‘திரிகடுகம் காபி’ எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி, பனக்கருப்பட்டி கலந்த பானம்… இப்படி அட்டவணை போட்டுப் பருகிப் பாருங்கள். அத்தனையும் ஜீரண மண்டலம் முதல் இதயம்வரை பாதுகாக்கும் மருந்தாக இருக்கும். இதில் சேர்க்கும் சிறு சிறு மணமூட்டிகளால் பல புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றலையும் பெற முடியும்.
மேலே சொன்ன எவையும் ஆலையில் தயாரிக்கும் மருத்துவ ரசாயனங்கள் இல்லை. பெரும்பாலானவை அன்றாடம் ரசத்துக்கோ சாம்பாருக்கோ சேர்க்கும் விஷயங்கள் மட்டுமே. இதைப் பருகுவதில் எந்தப் பயமும் இல்லை. சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய் எனத் தொற்றாத வாழ்வியல் நோய்க் கூட்டத்தின் பிடியில் உள்ள முதியோர்கள் பலர். அவர்கள் வழக்கமான டிகிரி காபி, பால் டீயிலிருந்து இப்படியான மூலிகைத் தேநீருக்கு நகர்வது, நலவாழ்வை நோக்கி எடுத்து வைக்கும் முக்கிய நகர்வு.
(நலம் தேடுவோம்…)