சட்னி அரைக்க, சாம்பாருக்குப் பொடிக்க எனத் தினமும் நான்கைந்து முறையாவது மிக்ஸியைத் தேடுவோம். ஸ்கூல், ஆபீஸ் என வீட்டில் எல்லோரும் வெளியே கிளம்பும் பரபரப்பான காலை நேரத்தில், மிக்ஸியின் சத்தத்தை வைத்தே அந்த வீட்டுத் தலைவியின் டென்ஷன் எத்தனை டெசிபல் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். மிக்ஸி இல்லாத சமையல் என்பது சாத்தியமில்லாது போய்விட்ட இந்தக் காலத்தில், அந்த மிக்ஸியை எப்படிப் பராமரிப்பது?
- அதிகம் சத்தம் போடாத, அதிகம் வைப்ரேட் ஆகாத மிக்ஸிகளே நல்லவை. வைப்ரேஷனால் ஏற்படும் அதிர்ச்சி, அதன் ஆயுளைக் குறைத்துவிடும்.
- முன்பெல்லாம் மிக்ஸியின் நடுவே மோட்டாரைப் பொருத்தி இருப்பார்கள்; இப்போது அடித்தளத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட வலுவான மிக்ஸிகளும் வந்துவிட்டன. ஆனாலும் ஒழுங்காகப் பயன்படுத்துவதும், முறையாகப் பராமரிப்பதுமே அதன் ஆயுளை அதிகரிக்கும்.
- மிக்ஸியில் ஜார் ஒழுங்காகப் பொருந்தியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டே அதை இயக்க வேண்டும். சரியாகப் பொருந்தவில்லை என்றால், இயங்க மறுக்கும் மாடல்கள் இப்போது வந்துவிட்டன. ஜார் ஒழுங்காகப் பொருந்தாவிட்டால் மிக்ஸியின் புஷ் தேய்ந்துவிடும்.
- ஜாரின் புஷ் மோசமாகத் தேய்ந்துவிட்டால், மிக்ஸிக்குள் தண்ணீர் இறங்கும் ஆபத்து உள்ளது. இந்தத் தண்ணீர் மிக்ஸியின் மோட்டாரில் பட்டு, காயில் கெட்டு விடும். கவனம்!
- மிக்ஸி ஜாரின் உள்பக்கம் சில சமயம் பிளேடு சுற்றமுடியாத அளவுக்கு டைட் ஆக இருக்கும். சூடான தண்ணீரை உள்ளே ஊற்றி, சிறிது நேரம் கழித்து கையினால் திருப்பினால் பிளேடு சுலபமாகச் சுற்றும்.
- சிலர் தேங்காய், வேர்க்கடலை, மஞ்சள், இஞ்சி போன்றவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டாமல் அப்படியே மிக்ஸியில் போட்டு அரைப்பார்கள். இதனால் மிக்ஸியின் பிளேடு தேய்ந்துவிடும். சமயங்களில் அது உடைந்தும் போகலாம்.
- மிக்ஸியில் எதையாவது போட்டு அரைந்திருக்கும்போது, அதிலேயே இடையில் வேறு திடப்பொருளைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- சிலர் தக்காளி, வெங்காயத்தை வதக்கியதுமே அரைக்க வேண்டும் என்ற அவசரத்தில் சூடாக அதைக் கொட்டி, அதன் சூடு குறைய வேண்டும் என்பதற்காக ஐஸ் கட்டிகளை மிக்ஸி ஜாரில் கொட்டுவார்கள். இது தவறு. ஐஸ் கட்டிகளை அரைப்பதால் பிளேடுகள் சீக்கிரமே தேய்ந்துவிடும்.
- மஞ்சள், காபிக்கொட்டை என தண்ணீர் சேர்க்காமல் உலர்ந்த பொருட்களைப் பொடி செய்யும்போது, அவற்றை முழுசாகப் போடாமல், துண்டு துண்டாக உடைத்து உள்ளே போடுவது நல்லது. இல்லாவிட்டால் மிக்ஸியைத் தொடர்ச்சியாக ஓடவிடாமல், இடையிடையே இரண்டு நிமிடம் இடைவெளி விட வேண்டும்.
- சிலர் இட்லி மாவு அரைக்க மிக்ஸியைப் பயன்படுத்துகிறார்கள். கிரைண்டரைக் கழுவி சுத்தம் செய்யச் சோம்பல் பட்டுக்கொண்டு இப்படிச் செய்வது தவறு. மாவு அரைக்க மிக்ஸியைவிட கிரைண்டர்தான் சரியான சாய்ஸ். அவசரத்துக்குக் கொஞ்சம் வேண்டும் என்றால் அரைத்துக் கொள்ளலாம். ஆனால் மோட்டார் சூடாவதைத் தவிர்க்க, ஜாரில் பாதியளவு மட்டும் அரிசி போட்டால் போதும். தொடர்ச்சியாக அரைக்காமல், ஜார் சூடானதும் இரண்டு நிமிடங்கள் திறந்து வைத்து, திரும்பவும் அரைக்கலாம்.
- அடை, வடை போன்ற கரகரப்பாக அரைக்கக்கூடிய அயிட்டங்களுக்கு மிக்ஸியைப் பயன்படுத்தலாம்; தவறில்லை. ஆனால் பருப்பு வகைகள் நன்கு ஊறிய பிறகே அரைக்க வேண்டும். இல்லாவிட்டால் பிளேடு சீக்கிரம் தேய்ந்துவிடும்.
- உடலுக்கு, மனதுக்கு, வாகனத்துக்கு என எல்லாவற்றுக்கும் போலவே மிக்ஸிக்கும் ஓவர் லோடு ஆபத்து. மிக்ஸி ஜாருக்குள் அழுத்தித் திணித்து நிறைய போட்டு அரைக்காதீர்கள். அளவாகப்போடுங்கள்.
- எவ்வளவு அவசரமாக இருந்தாலும், மிக்ஸி ஜாரை முழுமையாக மூடாமல் அரைக்காதீர்கள். அரைக்கும் அதிர்வில் மூடிக் கழன்றுகொண்டால், கிச்சன் முழுக்க உணவுப் பொருட்கள் சிதறி, சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
- அதேபோல ஜாரை மிக்ஸியிலிருந்து கழற்றியபிறகே அதற்குள் கையைவிட்டு பொருட்களை எடுங்கள். சுவிட்சை ஆஃப் செய்து விட்டோமே, பவர்கட் ஆகிவிட்டதே என்றெல்லாம் ரிஸ்க் எடுக்காதீர்கள். கவனம்!
- மிக்ஸியைக் கழுவக் கூடாது. மோட்டாருக்குள் தண்ணீர் புகுந்துவிடும். ஈரத்துணியால் அழுத்தமாகத் துடைத்தாலே போதும். மிக்ஸியின் ஒயரை மின் இணைப்பிலிருந்து அகற்றியபிறகே சுத்தம் செய்யவும்.
- ஜாரைக் கழுவ சுலபமான வழி இருக்கிறது. ஜாருக்குள் கொஞ்சம் சோப்பு பவுடர் போட்டு, தண்ணீர் விட்டு மிக்ஸியைச் சுழலவிடுங்கள். இப்படிச் செய்தால், பிளேடுக்கு நடுவே மாட்டியிருக்கும் உணவுத் துணுக்குகள்கூட வெளியேறிவிடும்.
- மிக்ஸி ஜாரைக் கழுவியபிறகு துடைத்துக் காயவைத்து எடுத்து வைக்க வேண்டும். எப்போதும் ஜாரை தலைகீழாகத்தான் கவிழ்த்து வைக்க வேண்டும். அப்போதுதான் ஜாருக்குள் இருக்கும் தண்ணீர் வடியும்.
- மிக்ஸி வைக்கும் இடத்தை அடிக்கடி மாற்ற வேண்டாம். கிச்சன் மேடையில் அதற்குத் தனியாக இடம் ஒதுக்கி வைக்கவும். சமதளமான இடத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இருப்பது பாதுகாப்பு.
- அடிக்கடி தண்ணீர் படும் இடத்தில் வைக்க வேண்டாம். மின்கசிவு ஆபத்து ஏற்படலாம். ஸ்டவ்வுக்கு மிக அருகில் வைக்க வேண்டாம். அதன் சூடு மிக்ஸிக்கு ஆகாது.